
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரை அடுத்த மணிமங்கலம் அருகே அம்மணம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரையும், இரண்டு சிறார்களையும் மணிமங்கலம் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பரத் , சீனு ஆகியோர் இசைக் கச்சேரிகளில் கானா பாடல்கள் பாடி வந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு படப்பை அருகே நடைபெற்ற இசைக் கச்சேரியில் பாடிவிட்டு, திருப்பெரும்புதூரை அடுத்த ஒரத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மணம்பாக்கம் பகுதியில் உள்ள நண்பர் லோகேஷ் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். அப்போது மூவரும் இரவு முழுவதும் கானா பாடல்கள் பாடியும், இசை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மறுநாள் பட்டப்பகலில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த ஆறு பேர் கொண்ட மர்மக் கும்பல், முதலில் லோகேஷைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து லோகேஷ் தப்பி ஓடிய நிலையில், வீட்டிற்குள் இருந்த பரத் மற்றும் சீனுவைச் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அம்மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மணிமங்கலம் காவல்துறையினர், சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த மணி (எ) ஐயப்பன் , படப்பை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் , முடிச்சூரைச் சேர்ந்த குமரவேல், பெருங்களத்தூரைச் சேர்ந்த வேலன் , பீர்க்கங்கரணையைச் சேர்ந்த அன்பு உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டு சிறார்களையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலிலேயே இருவரை வெட்டிச் சாய்த்துக் கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






