
விஜய் தலைமையிலான தனிப்பெரும்பான்மை இல்லாத த.வெ.க. அரசு, நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த மே10 ஆம் தேதி ஒருவழியாக பதவியேற்றது. விஜய்யுடன் சேர்த்து 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
வழக்கமாக பதவியேற்பு நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே அமைச்சர்களுக்கு இலாகாக்கள் அறிவிக்கப்படும் நிலையில், இம்முறை பல நாட்கள் கடந்தும் எந்த அமைச்சருக்கும் அதிகாரப்பூர்வமாக துறைகள் ஒதுக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் முதலமைச்சரை சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் வரை பதவியேற்கப்பட வேண்டும். ஆனால் தற்போதைக்கு 9 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றுள்ளனர். அமைச்சரவை விரிவாக்கம் தாமதமடைவதற்கு முக்கிய காரணமாக கூட்டணி கட்சிகளின் அமைச்சரவை கோரிக்கைகள் என கூறப்படுகின்றன. முதலில் 2 அமைச்சர் பதவிகள் மட்டுமே கேட்டு வந்த காங்கிரஸ் கட்சி, தற்போது 5 அமைச்சர் பதவிகளை கோரி விஜய்யிடம் அடம் பிடித்து வருவதாக கூறப்படுகிறது.
அதோடு முக்கிய இலாக்களையும் குறிவைத்து காங்கிரஸ் காய் நகர்த்தி வருகிறது. காங்கிரஸ் ஒரு புறம் முரண்டுபிடிக்கும் நிலையில், அதிமுகவின் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியும் தங்களுக்கு 7 அமைச்சர் பதவிகளை கேட்டு விஜய்க்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தெரிகிறது.
இதனால் யாருக்கு அமைச்சரவை பதவி வழங்குவது, யாருக்கு எந்த துறை ஒதுக்குவது என்ற விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் கடும் அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படாததால் தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான கோப்புகள் தேங்கி கிடக்கிறது. அமைச்சர்கள் இல்லாமலேயே துறை ரீதியாக முதலமைச்சர் விஜய் ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார்.
புதிய அரசு பொறுப்பேற்று ஒரு வாரமாகியும் அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யாததால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். அரசு டெண்டர்கள், நிதி அனுமதிகள், புதிய திட்ட ஒப்புதல்கள், மாவட்ட நிர்வாக அனுமதிகள், ஒப்பந்த நீட்டிப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக நடவடிக்கைகள் அமைச்சர்களின் ஒப்புதல் இல்லாமல் நகர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியில் மிக வேகமாக நடைபெற்று வந்த மெட்ரோ ரயில், மதுரவாயல் உயர்மட்ட பாலம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் த.வெ.க அரசின் நடவடிக்கையால் தேக்கம் அடைந்துள்ளன.






