தமிழ்நாடு

சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களின் நிதியை முடக்கும் ஒன்றிய பாஜக அரசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

மதச்சிறுபான்மையின அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கியுள்ளது.

சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களின் நிதியை முடக்கும் ஒன்றிய பாஜக அரசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சிறுபான்மை மக்களின் சொத்துக்களை முடக்கும் வகையிலேயே சட்டங்களையும், திட்டங்களையும் கொண்டு வருகிறது. வக்ஃப் வாரியத்தின் சொத்துக்களை முடக்கும் வகையில் வக்ஃப் வாரிய சட்டத்தில் 2025 ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகளை தடுக்கும் வகையில் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு திருத்தச் சட்டமுன்வரைவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தற்போதைய நாடாளுமன்றத்தில் ஒன்றிய பா.ஜ.க அரசு தாக்கல் செய்துள்ளது.

வெளிநாட்டு நிதியுதவி பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சொத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டமுன்வரைவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த சட்டத்திருத்தத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெறும் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்"வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டமுன்வரைவு, 2026 என்ற பெயரில் ஒன்றிய பா.ஜ.க. அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள் முழுக்க முழுக்க கிறித்தவத் தொண்டு நிறுவனங்களையும், தேவாலயங்களையும், பிற மதச் சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களையும், குறிவைத்துத் தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் ஆகும்.

ஏற்கெனவே வக்பு வாரிய சட்டத்திருத்தம் மூலம் இஸ்லாமிய சொத்துகளைக் கபளீகரம் செய்ய முயன்றதையடுத்து, தற்போது மற்ற மதச்சிறுபான்மையின அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் போராட்டத்தாலும், கிறித்தவர்கள் அதிக அளவில் வாழும் கேரளத்தில் தேர்தல் நடைபெற இருப்பதாலும் இப்போதைக்குப் பின்வாங்குவது போல நடித்து, விரைவில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டி இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற பா.ஜ.க. அரசு திட்டமிடுவதாக அறிகிறேன்.

இந்த முயற்சிகளைக் கைவிட்டு, மாண்புமிகு பிரதமர் அவர்கள் இந்தத் தன்னிச்சையான, அநியாயச் சட்டத்திருத்தத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெறும் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories