
சொன்ன வாக்குறுதிகளை ஏன் செயல்படுத்தவில்லை என்றால், அவையெல்லாம் வெறும் ‘ஜூம்லா’ என்று சொல்லும் ஒன்றிய பி.ஜே.பி. அரசையும் எண்ணிப் பார்த்து, சொன்னதை மட்டுமல்ல – சொல்லாததையும் செய்த சாதனைகளுக்குச் சொந்தமான ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளையும் சீர்தூக்கி, நாம் நலம் பெற மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி மலரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சமூகத்தின் சரி பகுதியாக உள்ள பெண்கள், அதுபோலவே, காலங்காலமாய் உரிமைகள் மறுக்கப்பட்டு – கல்வி, வேலை வாய்ப்பு மட்டுமல்லாமல், வாழ்வாதாரத்திற்காக அன்றாடம் வறுமையில் உழன்று வதிந்து அல்லற்படும் 70 விழுக்காடு (மகளிரும் சேர்க்கப்பட்டே) அதற்கும் கூடுதல் இந்த மண்ணில் தங்களது மதம் – மார்க்கம் காரணமாக ‘சிறுபான்மையினர்’ என்ற பிரிவின்கீழ் வருபவர்கள் அத்துணைப் பேருக்கும், அவர்களது உரிமைகளை மீட்கும் இயக்கமாக – 1916 ‘நீதிக்கட்சி’ என்று அறியப்பட்டது முதல் கடந்த 110 ஆண்டுகளுக்குமேல் திராவிட இயக்கம்தான் சமூக, அரசியல், பொருளாதாரத்தில் முனைப்புடன் இன்றுவரை களத்தில் நிற்கிறது. நீதிக்கட்சி, தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கத்தோடு இணைந்து 1944 இல் திராவிடர் கழகமாகி – அதன்பின் 1949 இல் அது அரசியல் கட்சியாகவும் ஒரு தனி களம் அமைத்த ஜனநாயக இயக்கமாகி, அதன் ஆளுமை முக்கால் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் தனித்த முகவரியாக ஒளிவீசி நிற்கிறது!
திராவிட இயக்கம் என்பதன் பொருள்!
திராவிட இயக்கம் என்ற ஒரு பெயர், வெறும் அரசியல், பட்டம், பதவிகளால் மட்டுமே அளக்கப்படாமல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் சமூக, பண்பாடு அடிமைத்தளைகளைக் கட்டறுத்துக் கடமையாற்றும் ஒப்பற்ற கொள்கை இயக்கமாக உலகத்தாரின் பெருமிதத்தோடு பார்க்கப்படுகிறது. சமூக, அரசியல் தளங்களில் உரிமைகளை மீட்க அரசியல் களத்திலும் அஞ்சாது நின்று வென்று வருகிறது!
தந்தை பெரியார் அவர்களைத் தலைவராக ஏற்று, அவர்தம் ஈரோட்டுப் பாதையில் தனது இலட்சியப் பயணத்தை இடையறாது செய்து, வரலாறு படைக்கின்றது!
முந்தைய திராவிட ஆட்சிகளான பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியின் நீட்சியாகவும், மாட்சியாகவும் இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சோர்விலன் ஆட்சியாகவும் வீரநடை போட்டு மீண்டும் வெற்றிக்கனி பறித்து, திராவிட யுகத்தின் அடுத்த கட்டத்தை அமைத்து, அவனி பாராட்டும் சாதனைகளின் தொடர்ச்சியை நடத்திடும் கொள்கைத் திட்ட வழிமுறையாம் தி.மு.க.வின் 2026 இல் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தலைமுறை காக்கும் ஒளிவிளக்கு!
‘சூப்பர் ஸ்டாரான’ தி.மு.க. தேர்தல் அறிக்கை!
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகள் ‘‘ஹீரோ’’ – கதாநாயகனாக சென்ற தேர்தல்களில் வருணிக்கப்பட்டன. இப்போது அதன் சிறப்பு மேலும் மேலும் கூடிக்கொண்டு செல்வதால், அது ‘சூப்பர் ஸ்டார்’ என்று முழங்கப்படுகிறது!
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி உள்ளிட்ட அக்குழுவில் இடம்பெற்று மிகச் சிறப்பான தேர்தல் அறிக்கையை தயாரித்து வழங்கியுள்ள அனைவருக்கும் நமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்தல் அறிக்கைகளைப்பற்றி, எதிர்க்கட்சி அணியினர் நாகூசாமல் ‘கோயபெல்சின் குருநாதர்களாகி’ உண்மை கலப்பற்ற பொய்ப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். தி.மு.க. தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவரும், கொள்கைக் கனியுமான கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்கள், பொய் பலூனை, ஊசி முனையால் குத்தி ஒரு நொடியில் ‘ஒன்றுமில்லாத பொய்யுரை’ என்று புலப்பட வைத்துள்ளார்!
சென்ற தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளில், இதுவரை 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
எஞ்சிய 101 வாக்குறுதிகளில், ஒன்றிய அரசின் அனுமதியின்மை, ஒத்துழைப்பின்மை காரணமாக 37 வாக்குறுதிகளும், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள், மக்களின் மாற்றுக் கருத்து ஆகியவற்றால், 64 திட்டங்களும் நிறைவேற்றப்பட முடியாத நிலை இருப்பதை புள்ளி விவரத்துடன் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள் தி.மு.க. தேர்தல் அறிக்கைக் குழு தலைவர் கனிமொழி கருணாநிதி.
சொன்னதை மட்டுமல்ல – சொல்லாததையும் செய்யும் தி.மு.க. ஆட்சி!
‘சொன்னதைச் செய்த ஆட்சி’ என்பதோடு, ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ‘சொல்லாததையும் செய்து’, புகழ் பெற்றுவரும் ஆட்சி என்பதை ஏனோ ‘வசதியாக’ ‘நவீன கோயபெல்சுகள்’ மறந்துவிடுகின்றனர்.
சாதனைகளுக்கு மறுபெயர்தான் தி.மு.க. அரசு! அது மீண்டும் ஆட்சிக்கு வருவதன்மூலம்தான் நல்லாட்சி கிடைக்கும்!
பார் புகழும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்களை, இந்தியாவில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ளவர்களும் பார்த்து வியக்கின்றனர். சில எதிர்க்கட்சியினரும் பின்பற்ற ஆயத்தமாகி வருகின்றனர்.
பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் என்று வயிற்றுப் பசிப் போக்கி, அறிவுப் பசிக்குத் தக்க கல்வியை அனைவருக்கும் தரும் அற்புதமான அசாதாரணத் திட்டம் இப்போது நிறைவேற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுபற்றி ஏன் இந்த வீண் விமர்சகர்கள் பேசுவதில்லை?
மற்றொரு கேள்வி!
திருடனைத் தேள் கொட்டிய கதைதான்!
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைபற்றி கேள்வி எழுப்பும் சில வம்படி வாயினர், ஒன்றியத்தில் ஆளும், ‘மகா சக்திவாய்ந்த’, அதிகாரங்களைக் குவித்து வைத்து ஆளும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சியின் பிரதமர் மோடி கடந்த பல ஆண்டுகளாக (2014 ஆம் ஆண்டிலிருந்து) கூறிவரும் பல வாக்குறுதிகள்பற்றி ஏதாவது பேசுகிறார்களா?
‘திருடனைத் தேள் கொட்டியது’ என்ற பழமொழிக்கொப்ப, ‘மவுன விரதம்’ அல்லவா இருக்கிறார்கள்!
ஒன்றிய பி.ஜே.பி. அரசின் ‘ஜூம்லா’க்கள்!
மோடி கொடுத்த வாக்குறுதிப்படி, ‘‘ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய்’’ ‘பொத்தென்று’ வந்து விழுந்ததா?
விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என்று சொன்ன வாக்குறுதி என்னாயிற்று?
ஆண்டுதோறும் 2 கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பு வந்ததா?
வெட்கமில்லாமல் அவையெல்லாம் ‘ஜூம்லா’ என்று சொன்னவர்கள்தானே, இப்போது தமிழ்நாட்டை அடிமை நாடாக்க, அவசர கதியில் ‘‘அடமானக் கடை அரசியல்’’ நடத்துகிறார்கள்!
‘‘மருத்துவரே, முதலில் உம்மைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்’’ என்ற ஆங்கிலப் பழமொழிதான் அவர்களுக்கான நமது ஒரே பதில்!!






