தமிழ்நாடு

இந்தியாவிலேயே முதன் முறை : சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த Super Tree Tower!

கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள Super Tree Tower என்னும் உயர் கோபுர மரத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்தியாவிலேயே முதன் முறை : சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த Super Tree Tower!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.03.2026) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் சென்னையின் மையப்பகுதியான கிண்டி சுற்றுச்சூழல் பூங்காவை பெரியவர்கள், குழந்தைகள் அனைவரின் மனதை மகிழ்விக்கும் வகையில், கருத்தியல் தோட்டங்கள், குழந்தைகள் விளையாடும் திடல்கள், பறவைத் திட்டுகள், நீரியல் தோட்டம், புல்வெளிகள், காட்சி மேடைகள், நிழல் நடைபாதைகள் போன்ற கட்டமைப்புகளுடன் 37 கோடியே 85 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள முதற்கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், சென்னை கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவில் இந்தியாவிலேயே முதன் முறையாக 11 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 30 மீட்டர் உயர செங்குத்துத் தோட்டத்துடன், 9 அடுக்குகளைக் கொண்ட உலகத்தரத்திலான Super Tree Tower என்னும் ”உயர் கோபுர மரத்தினை” திறந்து வைத்து, தமிழ்நாட்டில் வனங்கள் மற்றும் மரங்களால் சூழப்பட்டுள்ள பரப்பினை

33 சதவீதமாக மாற்றும் குறிக்கோளினை அடையும் வகையில் ’தமிழ்நாடு வேளாண் காடுகள் வளர்ப்புக் கொள்கை 2026’ வெளியிட்டார்.

கிண்டி, சுற்றுச்சூழல் பூங்காவின் முதற்கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்

சென்னையின் மையப்பகுதியான கிண்டியில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான நிலம் தனியாரிடமிருந்து நீண்ட சட்டப்போராட்டத்திற்குப்பிறகு மீட்கப்பட்டு, 118 ஏக்கர் நிலம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு ஒப்படைக்கப்பட்டது. இவ்விடத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசால் அறிவிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மழைநீரை சேகரிக்கும் வகையிலும், சென்னையின் மையப்பகுதியை பெரும் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் வகையிலும், பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் நான்கு குளங்கள் அமைக்கப்பட்டன. இங்கு அமைத்துள்ள நீர்நிலைகளின் கரைகளை சீரமைக்கும் பணிகள், அரியவகை மரங்கள், அழகிய மலர்ச் செடிகள் நடவு செய்தல் மற்றும் நாற்றங்கால் பணிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பூங்காவில், கருத்தைக் கவரும் கருத்தியல் தோட்டங்கள், குழந்தைகள் குதூகலித்திட விளையாட்டுத்திடல்கள், பறவைகள் விளையாடிட பறவைத் திட்டுகள், கண்கவர் நீரியல் தோட்டம், பசுமையான புல்வெளிகள், இயற்கையோடு இயைந்த அடர்வனம், பூங்காவை முழுமையாகக் கண்டு களித்திட காட்சி மேடைகள், மரங்கள் சூழ்ந்த, நிழலுடன் கூடிய நடைபாதைகள் போன்ற கட்டமைப்புகளுடன் 25 ஏக்கர் பரப்பில், 37 கோடியே 85 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள முதற்கட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

இப்பூங்காவானது, நகரின் இயற்கைச் சூழலைப் பேணுவதுடன், காற்றின் தரத்தை மேம்படுத்தவும், பல்லுயிர் பாதுகாப்பை உறுதி செய்யவும், மழைநீர் சேகரிப்பின் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் ஏதுவான கூறுகளைக் கொண்டு அமையவுள்ளது. மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு மையமாகவும் இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும் இப்பூங்கா செயல்படும்.

திறந்து வைக்கப்பட்ட புதிய கட்டடங்களின் விவரங்கள்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவினைப் போற்றிடவும், இயற்கையோடு இயைந்த சூழலில் கண்ணாடி மாளிகை, ஜிப்லைன், பறவையகம், இசை நீரூற்று, மரவீடு, தோட்டக்கலை அருங்காட்சியகம், பனிமூட்டப்பாதை, தொடர் கொடி வளைவுப்பாதை போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களைக்கொண்ட சென்னை கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு அரசால் மீட்கப்பட்ட 6.09 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து 13.21 ஏக்கரில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பூங்காவிற்கு மேலும் சிறப்பூட்டும் வகையில் வான்வழிப் பார்வையில் சென்னை மாநகரின் எழிலினை பொதுமக்கள் கண்டுகளித்திட 11 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவில் இந்தியாவிலேயே முதன் முறையாக 30 மீட்டர் உயர செங்குத்துத் தோட்டத்துடன் அமைக்கப்பட்டுள்ள, 9 அடுக்குகளைக் கொண்ட உலகத்தரத்திலான Super Tree Tower என்னும் ”உயர் கோபுர மரத்தினை” பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்தியாவிலேயே முதன் முறை : சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த Super Tree Tower!

தமிழ்நாடு வேளாண் காடுகள் வளர்ப்புக் கொள்கை வெளியீடு

வனங்கள் மற்றும் மரங்களால் சூழப்பட்டுள்ள பரப்பினை 33 விழுக்காடாக அதிகரிப்பதற்கு தமிழ்நாடு அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், மரம் மற்றும் மரம் சார்ந்த காகிதம், ஒட்டுப் பலகை, எரிசக்தி போன்ற பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. வனங்களுக்கு வெளியேயுள்ள மரங்களின் பரப்பளவை அதிகரித்து இந்த இலக்கினை அடைந்திட வேளாண் காடுகள் வளர்ப்பு முறைகள் பெருமளவு ஊக்குவிக்கப்படுகின்றன. விளைநிலங்களின் உற்பத்தித்திறனை அதிகரித்து, உழவர்களின் வருமானம் உயர்ந்து அவர்களின் பொருளாதாரம் மேம்படும் வகையில் உயர் மதிப்பு கொண்ட தேக்கு, சந்தனம், செம்மரம், ஈட்டி போன்ற மர இனங்களை உழவர்கள் தங்கள் வயல்களிலேயே பயிரிட்டுப் பயன்பெறவும், அதற்குத் தேவையான வனச் சட்டங்களிலுள்ள விதிகளை எளிதாக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரித்து, பசுமை சூழ்நிலையினை உருவாக்கிடவும், நீடித்து நிலைக்கத்தக்க வேளாண் காடு வளர்ப்பில் தமிழ்நாட்டை ஒரு முன்னோடி மாநிலமாக மாற்றிடும் வகையில் “தமிழ்நாடு வேளாண் காடுகள் வளர்ப்புக் கொள்கை 2026” தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்.

உயர் மதிப்பு கொண்ட மரங்களை வேளாண் நிலங்களில் வளர்ப்பது, அவற்றை வெட்டி எடுத்துச் சென்று விற்பனை செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்குதல், சிறப்பு வேளாண் காடு வளர்ப்பு மண்டலங்களை ஏற்படுத்துதல், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் கார்பன் சேமிப்பை அதிகரித்தல், தரிசு நிலங்களை மீள சாகுபடிக்குக் கொண்டுவருதல், தரமான மரக்கன்றுகளை உழவர்களுக்கு வழங்குதல், வனப்பொருட்கள் சார்ந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற சந்தை இணைப்புகளை ஏற்படுத்துதல், நிலத்தடிநீர், பல்லுயிர்ப்பெருக்கம் மற்றும் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்தல், உணவு, பசுந்தீவனம் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, வேளாண் காடுகள் குறித்த பயிற்சி, மதிப்புக்கூட்டுதல் போன்ற பல்வேறு அம்சங்கள் ”தமிழ்நாடு வேளாண் காடுகள் வளர்ப்புக் கொள்கை 2026”-இல் இடம்பெற்றுள்ளன.

banner

Related Stories

Related Stories