தமிழ்நாடு

நகர மக்களுக்காக 16 உழவர் அங்காடிகள்; 672 வேளாண் இயந்திரங்கள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

16 உழவர் அங்காடிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நகர மக்களுக்காக 16 உழவர் அங்காடிகள்; 672 வேளாண் இயந்திரங்கள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்களை நகர்ப்புர நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் முதற்கட்டமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 16 உழவர் அங்காடிகளை தொடங்கி வைத்து, 53 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், 6 துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள், 2 விதை சேமிப்பு கிடங்குகள், 4 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், 100 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட ஒரு குளிர்பதனக் கிடங்கு, 2 ஒருங்கிணைந்த விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத்துறை வளாகங்கள், தோட்டக்கலைப் பட்டயப்படிப்பு மாணவர் விடுதி, வேளாண்மைப் பொறியியல் துறை விரிவாக்க மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், 100 மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 54 தொழில் முனைவோர்களுக்கு மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைக்க ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கி, வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திர வாடகை சேவையினை வலுப்படுத்த கொள்முதல் செய்யப்பட்ட 672 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

16 உழவர் அங்காடிகளை திறந்து வைத்தல்

விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்களை நகர்ப்புர நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 100 உழவர் அங்காடிகள் அமைக்கப்படும் என 2024-25 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன் முதற்கட்டமாக, உழவர்கள் வளம் பெறுவதுடன் நுகர்வோர்களின் நலமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உயர் சிந்தனையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில்

2 கோடியே 06 இலட்சம் ரூபாய் செலவில் 11 உழவர் அங்காடிகள் மற்றும் 5 நடமாடும் உழவர் அங்காடிகள் மூலம் விவசாயிகளின் காய்கறிகள், பழங்கள், பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள், பால் பொருட்கள், பனைப் பொருட்கள், பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய ஏதுவாக மொத்தம் 16 உழவர் அங்காடிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

திறந்து வைக்கப்பட்ட புதிய வேளாண் கட்டடங்களின் விவரங்கள்

இராணிப்பேட்டை மாவட்டம் - திமிரி, தென்காசி மாவட்டம்- வாசுதேவநல்லூர், நாமக்கல் மாவட்டம் - மோகனூர், புதுக்கோட்டை மாவட்டம் - கந்தர்வக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் – கிருஷ்ணகிரி மற்றும் வேப்பனப்பள்ளி ஆகிய இடங்களில் 17 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள்;

தேனி மாவட்டம் – கோட்டூர் மற்றும் சங்கராபுரம், மயிலாடுதுறை மாவட்டம் - ஆக்கூர், நாகப்பட்டினம் மாவட்டம் - கணபதிபுரம், திருப்பூர் மாவட்டம் – குளத்துப்பாளையம் மற்றும் பள்ளப்பாளையம் ஆகிய இடங்களில் 3 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள்;

மயிலாடுதுறை மாவட்டம் - வைத்தீஸ்வரன் கோவில், கன்னியாகுமரி மாவட்டம் - திருப்பதிசாரம் ஆகிய இடங்களில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் தலா 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 விதை சேமிப்புக்கிடங்குகள்;

நாகப்பட்டினம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் 5 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் தலா ஒரு ஒருங்கிணைந்த விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு வளாகம்;

கடலூர் மாவட்டம் – வேப்பூரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு கூடுதல் கட்டமைப்பு, சேலம் மாவட்டம் - காடையாம்பட்டி, நாமக்கல் மாவட்டம் – இராசிபுரம் மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் 18 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள்;

கோயம்புத்தூர் மாவட்டம் - தொண்டாமுத்தூரில் 92 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 100 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு, திண்டுக்கல் மாவட்டம் - ரெட்டியார் சத்திரத்தில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தோட்டக்கலை பட்டயப்படிப்பு கல்லூரி மாணவர்களுக்கான விடுதிக் கட்டடம், அரியலூரில் 1 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை விரிவாக்க மையம்;

என மொத்தம் 53 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 23 வேளாண் – உழவர் நலத்துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

நகர மக்களுக்காக 16 உழவர் அங்காடிகள்; 672 வேளாண் இயந்திரங்கள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

100 மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தல்

2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக

‘100 மதிப்புக்கூட்டும் மையங்கள்’ அமைக்கும் திட்டம் 2025-26 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் 25 முதல் 35 சதவீதம் வரை முதலீட்டு மானியமும், அதிகபட்சமாக ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது. இவை தவிர, 5 ஆண்டுகளுக்கு 5 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. கூடுதலாக வேளாண் கட்டமைப்பு நிதி திட்டத்தில் 3 சதவீத வட்டி மானியமும் பெறலாம்.

இத்திட்டத்தில் தக்காளி, மிளகாய், சின்ன வெங்காயம், முருங்கை, மஞ்சள், வாழை, மா, பலா, தென்னை, மல்லிகை, சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி உள்ளிட்ட பல்வேறு வேளாண் விளைபொருட்களுக்குத் தகுந்த மதிப்புக்கூட்டுதல் மையங்கள் அமைக்க மானியமாக தமிழ்நாடு அரசால் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 54 தொழில் முனைவோர்களுக்கு மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைத்திட மானியமாக 30 கோடியே 42 இலட்சம் ரூபாய்க்கான ஒப்புதல் ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திர வாடகை சேவையினை வலுப்படுத்தி தொடங்கி வைத்தல்

வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இயந்திர வாடகை சேவையினை வலுப்படுத்த 13 கோடியே 28 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட 10 டிராக்டர்கள், சுழற்கலப்பைகள், நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள், சட்டிக்கலப்பைகள், 11 சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்கள் போன்ற இணைப்புக்கருவிகள் உட்பட 672 இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வேளாண்மை – உழவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, உயர்கல்வித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, பொது மற்றும் மறுவாழ்வுத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் 1210.52 கோடி ரூபாய் செலவிலான கட்டடங்களை திறந்து வைத்து, 555.92 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, 43 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்புக்கூட்டு மையங்களுக்கான மானியம் மற்றும் வேளாண் இயந்திரங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

banner

Related Stories

Related Stories