தமிழ்நாடு

ரூ.24.30 கோடியில் ‘கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!

சிவகங்கை மாவட்டத்தில் ரூ.24.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ.24.30 கோடியில் ‘கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 13.02.2026 அன்று தலைமைச் செயலகத்தில், தொல்லியல் துறை சார்பில் தமிழ்நாட்டின் வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகத்தின் ஆய்வுக்கூடமாக விளங்கும் வரலாற்று சிறப்புமிக்க கீழடி தொல்லியல் தளத்தினை உலகத்தமிழர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கண்டு தமிழ்நாட்டின் தொன்மையை அறிந்துகொள்ளும் வகையில் சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில், 65,380 சதுர அடியில் இரண்டு காட்சிகூடங்களுடன் 24 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்;

தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திர ராஜபட்டினம் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள மனோரா நினைவுச் சின்னத்தில் 2.75 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் புதுபொலிவுடன் அமைக்கப்பட்டுள்ள கட்டட முகப்பு விளக்குகளின் (Façade Lighting) செயல்பாடுகளை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு 15 இலட்சம் ஆண்டுகள் மனிதகுல வரலாற்றுத் தொன்மை கொண்ட நிலப்பரப்பாகும். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளில் கிடைத்த சான்றுகளைக் கொண்டு மேற்கொண்ட அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வு, தொல்லியலாளர்கள் இடையே மட்டுமின்றி உலகத் தமிழர்கள் இடையேயும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்ச் சமூகமானது, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கரிமப் பகுப்பாய்வுகளின் முடிவுகள் வாயிலாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பொருநை ஆற்றங்கரை நாகரிகம், 3200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை சிவகளை அகழாய்வில் கிடைக்கப்பெற்ற நெல் உமியினை பகுப்பாய்வு செய்ததன் வாயிலாக உறுதி செய்ய முடிகிறது.

மேலும், சிவகளை அகழாய்வில் கிடைத்த அறிவியல் காலக்கணக்கீடுகள் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புத் தொழில்நுட்பம் தமிழ் நிலப் பரப்பில் அறிமுகமாகியுள்ளது என்பதை உறுதிசெய்தன.

அண்மைக்கால தொல்லியல் சாதனைகள் மூலம் நமது புகழ்பெற்ற, நீண்ட வரலாற்றில் காணும் பண்பாடு மற்றும் கால வரிசை இடைவெளிகளை நிரப்புவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். இறுதிசெய்யப்பட்ட இலக்குகளை அடைவதற்காக தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல், வரலாற்றுக் காலம் வரையிலான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.24.30 கோடியில் ‘கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!

கீழடி அகழாய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் கீழடி கிராமம் அமைந்துள்ளது. மதுரை - இராமேஸ்வரம் பெருவழிப் பாதையில் மதுரையில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. கீழடி கிராமம் அமைந்துள்ள பள்ளிச்சந்தை திடலில் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொல்லியல் மேட்டில் அகழாய்வு நடைபெற்று வருகிறது.

இந்திய தொல்லியல் துறை முதலில் 2014, 2015, 2016 ஆகிய மூன்று ஆண்டுகள் அகழாய்வு மேற்கொண்டு 7,818 தொல்பொருட்களும், கட்டுமானப் பகுதிகளும் சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கானச் சான்றுகளும் வெளிப்படுத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, 2017 முதல் 2025 வரை ஏழு பருவங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு 13,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. 2026-ஆம் ஆண்டுக்கான பதினொன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன.

கீழடியின் முக்கியத்துவம்

கீழடியில் 2018-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வின் போது சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணம், மியாமி நகரத்தில் அமைந்துள்ள, பீட்டா பகுப்பாய்வு ஆய்வுகூடத்திற்கு (Beta Analytic Testing Laboratory) அனுப்பப்பட்டு பெறப்பட்ட காலக்கணக்கீடு ஆய்வறிக்கையின்படி வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம் 2600 ஆண்டுகள் பழைமயானது எனத் தெரிய வருகிறது.

தமிழ்நாட்டில் நகரமயமாதல் கி.மு.3-ஆம் நூற்றாண்டளவில்தான் தொடங்கியது என்ற கருதுகோள்களுக்கு பதிலளிக்கும் வகையில் கி.மு.6-ஆம் நூற்றாண்டில் வடஇந்தியாவின் கங்கை சமவெளிப் பகுதியில் நகரமயமாதல் தொடங்கியகாலகட்டத்திலேயே தமிழகத்திலும் நகரமயமாதல் தொடங்கியுள்ளது என்பது தெளிவு.

இதுவரை தமிழி எழுத்து வடிவத்தின் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என அழகன்குளம், கொடுமணல், பொருந்தல் ஆகிய அகழாய்வுகளின்படி கருதப்பட்டு வந்தது. தற்போதைய கீழடி ஆய்வுகளின்படி தமிழியின் காலகட்டம் கி,மு. 6-ம் நூற்றாண்டு என இன்னும் ஒரு நூற்றாண்டு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மரபினை பெருமையுடனும் பெருமிதத்துடனும் புரிந்து கொள்வதற்காகவும், தற்போதைய அறிவை மேலும் மெருகூட்டவும், தெளிவுபடுத்தவும் அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வைகை நதிக்கரை நாகரிகத்தின் சான்றுகளை அறிவியல் அடிப்படையில் வெளிச்சமிட்டு காட்டும் வகையில் உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளன.

கீழடி அருங்காட்சியகம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகத்தினை 5.03.2023 அன்று திறந்து வைத்தார். தென்னிந்தியாவில் நிலவிய சங்க காலப் பண்பாட்டு வரலாற்றாய்வில், கீழடி ஒரு திருப்புமுனை ஆகும். 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழர் பண்பாடு மற்றும் நகர நாகரிகத்தினை வெளிச்சமிட்டு காட்டியுள்ள கீழடி அகழாய்வின் மூலம் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் கொண்டு ஓர் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தினை வருங்கால தலைமுறையினர், மாணவ மாணவியர், அறிஞர்கள், தொல்லியல் வல்லுநர்கள் மற்றும் அயல்நாட்டு அறிஞர் பெருமக்கள் அறியும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, இந்நாள் வரை 12,55,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர் கீழடி அருங்காட்சியகத்தினை பார்வையிட்டுள்ளார்கள்.

ரூ.24.30 கோடியில் ‘கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் திறப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் கீழடி கிராமம் மதுரைக்கு தென்கிழக்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி தளமானது அக்கிராமத்தின் பசுமை நிறைந்த தென்னத்தோப்பினுள் அமையப்பெற்றுள்ளது.

கீழடி திறந்தவெளி அருங்கட்சியகத்திற்கான கட்டுமானப் பணிகளை 23.01.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.

கீழடி கிராமத்தில் 24.30 கோடி ரூபாய் செலவில் சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில் 65,380 சதுர அடியில் இரண்டு காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டடத்தின் மேற்கட்டுமானமானது முன் வடிவமைக்கப்பட்ட என்ற மையகருத்தினை அடிப்படையாகக் கொண்டு எஃகு கம்பிகளால் (Pre-Engineered Buildings - Steel Structure) வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் மேற்கூரையானது மங்களூரு தட்டு ஓடுகள் மற்றும் கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டடத்தில் இரண்டு காட்சிக்கூடங்களும் 80 மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ளதால். அவைகள் இணைப்பு தாழ்வாரம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சுமார் 48 சதுர அகழாய்வுக் குழிகள், பல்வேறு கட்டமைப்புகள் மற்றும் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உறைகிணறு, செங்கல் சுவர்கள், கூரை ஓடுகள், மட்பாண்டங்கள், இரும்பு மற்றும் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கலன்கள் கிடைக்கப்பெற்று அவைகளும் அங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டம், ஐந்தாம் கட்டம் மற்றும் ஆறாம் கட்டம்

கீழடி அகழ்வாய்வில் சங்ககால தொழிற்கூடங்களுக்குரிய செங்கற்கட்டுமானங்கள், சுடுமண் உறைகிணறுகள், சுடுமண் குழாய்கள் மற்றும் சுடுமண் சுருளைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும் பானைகள், பானை ஓடுகள், சேமிப்பு கலன்கள் மற்றும் இதர தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்று கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பெற்றுள்ளன. இத்தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட இடமானது, சீரமைக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக திறந்தவெளி அருங்காட்சியக் கூடமாக அமைக்கப்பட்டுள்ளன.

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களின் பயன்பாட்டிற்காக குடிநீர், கழிவுநீர் வசதி, புல்வெளிகள் மற்றும் தோட்டங்கள், தீயணைப்பு சாதன வசதிகள் போன்ற பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

கீழடி தொல்லியல் தளம், தமிழ்நாட்டின் தொல்பொருள் உலகில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அதன் மூலம் நாம் பழங்கால வாழ்க்கை முறை, பண்பாடு மற்றும் சமூக அமைப்புகளைப் பற்றி புதிய புரிதல் பெற்று, தொல்லியல் ஆய்வுகளில் முக்கியமான வளர்ச்சியை நோக்கி முன்னேறக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் இவ்வரலாற்று சிறப்பு மிக்க தொல்லியல் அகழாய்வுத் தளம் மக்கள் பார்வைக்காக சர்வதேச தரத்தில் திறந்தவெளி அருங்காட்சியமாக அமைக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories