தமிழ்நாடு

“தமிழ்நாட்டின் எதிர்காலம் இளம் அரசுப் பணியாளர்களிடம் தான் இருக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

உங்களுடைய எதிர்காலத்தைப் பார்த்துக் கொள்ள நான் எப்போதும் இருப்பேன். திராவிட மாடல் அரசு எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்கும்!

“தமிழ்நாட்டின் எதிர்காலம் இளம் அரசுப் பணியாளர்களிடம் தான் இருக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.2.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 9,801 வெற்றியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை:-

இன்று, Good Morning மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கு இது ஒரு Super Morning-ஆக அமைந்திருக்கிறது. பல தடைகளை, சூழ்ச்சிகளை முறியடித்து, இன்றைக்கு காலையில், 1 கோடியே 31 இலட்சம் சகோதரிகளுக்கு சிறப்பு தொகுப்பாக 5 ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கிவிட்டு, மிகுந்த மகிழ்ச்சியோடு, மனநிறைவோடு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். நீங்களும் வாழ்க்கையில் பல தடைகளை கடந்து, தேர்வில் வெற்றி பெற்று இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறீர்கள்.

இன்று மகிழ்ச்சியோடு பொறுப்புணர்வும் எனக்கு கூடுதல் ஆகியிருக்கிறது. பதவி ஏற்றபோது சொன்னேன் – வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என நினைக்காமல், அனைவருக்குமான முதலமைச்சராக இருப்பேன் என்று சொன்னேன். அனைவருக்குமான முதலமைச்சராக தான் இந்த ஐந்து ஆண்டுகள் இருந்தேன். இனியும், அனைவரையும், அனைத்து வகையிலும் உயர்த்தக்கூடிய முதலமைச்சராக, தமிழ்நாட்டை தொடர்ந்து நம்பர்-1 ஸ்டேட்டாக உயர்த்தக்கூடிய எண்ணத்தோடு, அந்தப் பொறுப்புணர்வு எனக்கு கூடியிருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற எனக்கு நீங்கள்தான் பக்கபலமாக இருக்கப் போகிறீர்கள்.

நம்முடைய நிர்வாகம் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும். மக்கள் நல திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற, அரசின் வருவாய்களை பெருக்க வேண்டும்; பொருளாதார வளர்ச்சியை தக்க வைக்கவேண்டும்; அடுத்த தலைமுறையை கைதூக்கி விடவேண்டும். அதற்கான மன உறுதியை நெஞ்சில் ஏந்தியபடி இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன். நீங்களும் வாழ்க்கையில் பல தடைகளை கடந்து, தேர்வில் வெற்றி பெற்று, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறீர்கள். நீங்களும் அப்படித்தான் ஃபீல் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

கல்வியில் சிறந்து, போட்டித் தேர்வுகளில் வென்று, மதிப்புமிக்க அரசு ஊழியர்களாக, போற்றுதலுக்குரிய ஆசிரியர்களாக பொறுப்பேற்கும் உங்கள் எல்லோரையும், அரசுப் பணிகளுக்கு வருக! வருக! என வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!

உங்கள் வளர்ச்சியைப் பார்த்து, உங்கள் பெற்றோர்கள் எந்தளவுக்கு மகிழ்ச்சி அடைகிறார்களோ, அதே அளவுக்கு நானும் மகிழ்ச்சி அடைகிறேன். திராவிட இயக்கம் என்ன சாதித்தது? என்று யாராவது கேட்டால் அவர்களுக்கு நீங்கள்தான் பதில்!

ஒருகாலத்தில், நம்முடைய வீடுகளையும், குடும்பங்களையும் எப்படி சொல்லி அடையாளப்படுத்துவார்கள் என்றால், அது உங்களுக்கே தெரியும்! திராவிட இயக்கத்தின் எழுச்சியால், அந்தக் காலம் மலையேறியது. இது எஞ்சினியர் வீடு - இது ஆசிரியர் வீடு - இது பேராசிரியர் வீடு- இது V.A.O. வீடு – இது R.I. வீடு - இது இன்ஸ்பெக்டர் வீடு - டாக்டர் வீடு என்று பெருமையோடு சொன்னோம்! அதன் தொடர்ச்சிதான் நீங்கள் எல்லோரும்! படிப்பை இறுகப் பிடித்துக் கொண்டு, முன்னேறி வந்திருக்கின்ற உங்கள் எல்லோரையும் பார்க்கின்றபோது, உணர்ச்சிப் பெருக்குடன் உச்சத்தில் நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன்! இதுதான், தமிழ்நாடு எப்போதும் பார்க்க விரும்பும் காட்சி! இந்த நாள், உங்கள் கனவுகள் நனவாகியிருக்கின்ற நாள்! உங்கள் பெற்றோருடைய கனவுகள் நிஜமாகியிருக்கின்ற நாள்! உங்கள் குடும்பங்களுக்கு நீங்கள் பெருமைதேடி தந்திருக்கக்கூடிய நாள்! அந்த வகையில், பொன்னான ஒரு நாள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகளின் மூலமாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற 9 ஆயிரத்து 801 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதில் நான் பெருமை கொள்ளக்கூடிய நாள் இந்த நாள்! உங்கள் கையில் இருக்கின்ற பணி நியமன ஆணை என்பது, உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, உங்களின் எதிர்காலத்திற்கான உத்தரவாதம்! இளைஞர்களான நீங்கள்தான் தமிழ்நாட்டின் பலம்! நீங்கள் முன்னேறும்போதுதான், தமிழ்நாடும், இந்திய நாடும் முன்னேறுகிறது! இதுவரைக்கும் நீங்கள் கற்ற கல்வி, பெற்ற அனுபவங்கள் ஆகியவற்றை, இனி உங்கள் பணிகள் மூலமாக, இந்த சமூகத்தில் விதைக்கப் போகிறீர்கள்! கோடிக்கணக்கான மக்கள், தங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு உங்களை நம்பித்தான் வருவார்கள்! நீங்கள்தான் நம்முடைய அரசின் முகங்களாக செயல்படப் போகிறீர்கள்! நீங்கள் சிறப்பாக செயல்பட்டால்தான், அரசு நிர்வாகம் தடையில்லாமல் செயல்படும்! உங்களைத் தேடி வருகின்ற மக்களுடைய நம்பிக்கையை நீங்கள் காப்பாற்ற வேண்டும்!

ஒரு கிராம நிர்வாக அலுவலர் சரியாக பணியாற்றினால், அந்த கிராமமே மாற்றத்தைக் காணும்! ஒரு ஆசிரியர் ஒழுங்காக பணியாற்றினால், அறிவார்ந்த - ஒழுக்கம் மிகுந்த தலைமுறை உருவாகும்! எதிர்காலம் ஒளி மிகுந்ததாக இருக்கும்! ஒரு மருத்துவர் கடமையுணர்வுடன் பணியாற்றும்போது, ஒரு உயிர் காப்பாற்றப்பட்டு, அவர்கள் குடும்பமே மகிழ்ச்சிக்குள்ளாகிறது! அப்படிப்பட்ட மகிழ்ச்சியை நீங்கள் சார்ந்த துறை மூலமாக, தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்க்கையில் ஏற்படுத்த வேண்டும்!

நம்முடைய திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரைக்கும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, உங்களுடன் ஸ்டாலின் போன்ற ஏராளமான முன்னோடி திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்! இதுவரைக்கும், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மக்களைத் தேடிச் சென்று அரசு ஊழியர்கள் அவர்களுடைய குறைகளை தீர்த்து வைத்திருக்கிறார்கள். 22 இலட்சம் பட்டாக்களை வழங்கி இருக்கிறோம். இந்தத் திட்டங்கள் எல்லாம் நம்முடைய அரசுக்கு நல்ல பெயரை தேடி கொடுத்திருக்கிறது என்றால், அதற்கு காரணம், அரசு ஊழியர்களும் – ஆசிரியர்களும்தான்!

அரசியலில் இருக்கின்ற நாங்கள், கொள்கைகளை வகுக்கிறோம் - திட்டங்களைத் தீட்டுகிறோம் - சட்டங்களை இயற்றுகிறோம் - பட்ஜெட் போடுகிறோம் - நிதி ஒதுக்குகிறோம். இவையெல்லாம், களத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படுவதும், மக்களுக்கு அதனுடைய பலன்கள் முழுமையாக கிடைப்பதும் அரசு ஊழியர்களான உங்களிடம் தான் இருக்கிறது! இப்படி, அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக செயல்படப் போகின்ற உங்களை நான் மனதார வாழ்த்தி வரவேற்கிறேன்.

“தமிழ்நாட்டின் எதிர்காலம் இளம் அரசுப் பணியாளர்களிடம் தான் இருக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நம்முடைய திராவிட மாடல் அரசின், கடந்த ஐந்தாண்டுகளில், உங்களைப் போன்று எத்தனை பேரை அரசு அதிகாரிகளாக நிர்வாகத்திற்குள் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறோம் என்ற புள்ளிவிவரத்தை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால், அது இந்த அரசின் முக்கியமான சாதனை!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 45 ஆயிரத்து 126 பேர் இதுவரை வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 24 ஆயிரத்து 927 பேர் வேலையில் சேர்ந்திருக்கிறார்கள்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 12 ஆயிரத்து 894 பேர் சேர்ந்திருக்கிறார்கள்.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 11 ஆயிரத்து 244 பேர் சேர்ந்திருக்கிறார்கள்.

இதுமட்டுமல்லாமல், பணியின்போது இயற்கை எய்தும் அரசுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்கும் திட்டத்தின்கீழ் 5 ஆயிரத்து 899 பேர் சேர்ந்திருக்கிறார்கள்.

பல்வேறு அரசுத் துறைகள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 54 ஆயிரத்து 864 பேர் சேர்ந்திருக்கிறார்கள்.

விளையாட்டு இடஒதுக்கீட்டில், 177 பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது.

இந்த ஐந்தாண்டு காலத்தில், மொத்தம் 1 இலட்சத்து 55 ஆயிரத்து 131 இளைஞர்களுக்கு பணி நியமனத்தை வழங்கியிருக்கிறோம்.

இதையெல்லாம், அரசுத் துறைகளில் செய்தது என்றால், பல்வேறு முதலீட்டாளர்கள் மாநாடு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாக, தமிழ்நாட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கின்ற தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூலமாக, கிட்டத்தட்ட 38 இலட்சம் வேலைவாய்ப்புகளை உறுதி செய்திருக்கிறோம்.

நேற்றுகூட, தொழில்துறையின் செயலாக்க மாநாட்டில் இதைபற்றி விரிவாக பேசியிருக்கிறேன். இப்படி, இளைஞர்களுக்காக, வளமான தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக நாங்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிகழ்ச்சி மூலமாக உங்களுக்கு நான் வைக்கின்ற வேண்டுகோள் என்னவென்றால், உங்கள் கடமையை மனசாட்சியுடன் செய்யுங்கள். நீங்கள் நேர்மையாக இருந்தால், அது அரசின் நேர்மைத் தன்மையை வெளிப்படுத்தும்.

காலம் தவறாமல் - கடமை உணர்வோடு - மக்களுக்கு எளிதில் அணுகக் கூடியவர்களாக, மக்களுக்கு பரிவு காட்டக் கூடியவர்களாக நீங்கள் இருந்தால், அதுவே, உங்களுக்குப் பெருமையைத் தேடி தரும். அரசுக்காக உழைப்பைக் கொடுக்கின்ற அதேநேரத்தில், உங்களுடைய உடல்நலனையும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டின் எதிர்காலம் என்பது, உங்களைப் போன்ற இளம் அரசுப் பணியாளர்களிடம் தான் இருக்கிறது. அதேபோல, உங்களுடைய எதிர்காலத்தைப் பார்த்துக் கொள்ள நான் எப்போதும் இருப்பேன். திராவிட மாடல் அரசு எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்கும்!

இப்போது கூட, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களுடைய பாராட்டுகளைப் பெற்றிருக்கிறோம். எனவே, நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படவும், உங்களுடைய கரியர் சக்சஸ்ஃபுல்லாக அமைவதற்கும், மீண்டும் என்னுடைய வாழ்த்துகளைச் சொல்லி, விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

banner

Related Stories

Related Stories