தமிழ்நாடு

எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!

எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் -  அமைச்சர் தங்கம் தென்னரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகெங்கும் தமிழனின் கால்தடம் பதிந்துள்ளதற்கான ஆதாரங்கள் நமக்கு கிடைத்து வருகின்றனர். அந்த வகையில் எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அதில் 30 கல்வெட்டுக்கள் கண்டெடுத்துள்ளனர். இதில் 20 கல்வெட்டுக்களில் தமிழ் பிராமி எழுத்துக்கள் உள்ளன.

அதிலும் 'சிகை கொற்றன்' என்ற தமிழ் வணிகரின் பெயர் 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை செதுக்கப்பட்டுள்ளது. மேலும் 'கோபன்' (Kopan), 'சாத்தன்' (Catan), 'கீரன்' (Kiran) போன்ற பெயர்களும் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு கல்வெட்டில் "சிகை கொற்றன் வர கண்ட" (சிகை கொற்றன் இங்கு வந்து பார்த்தான்) என்று எழுதப்பட்டுள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு பண்டைய தமிழக வணிகர்கள் எகிப்தின் துறைமுக நகரங்களான பெரெனிகே (Berenike) மற்றும் குசீர் அல்-காதிம் போன்ற இடங்களைத் தாண்டி, உள்நாட்டுப் பகுதிகளுக்கும் சென்று வந்ததை உறுதிப்படுத்துகிறது.

இது சங்க காலத் தமிழர்களுக்கும் உரோமானிய எகிப்துக்கும் இடையே இருந்த நேரடி வணிக மற்றும் பண்பாட்டுத் தொடர்புக்குப் பெரிய சான்றாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு, "உலக வர்த்தக வரைபடத்தில் தமிழரின் தடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்பதை நினைவூட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம்தான் தமிழினம் என்பதை மீண்டும் உலகுக்கு உரக்கச் சொல்வதுபோல் இந்தக் கண்டுபிடிப்புத் திகழ்கிறது.

எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள், 'சிகை கொற்றன்' என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டெடுக்கப்பட்டிருப்பது, உலக வர்த்தக வரைபடத்தில் தமிழரின் தடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்பதை நினைவூட்டுகிறது.

ரோமானிய காலத்திலேயே கடல் கடந்து எகிப்து சென்று, இன்று நாம் பேசும் உலகமயமாக்கலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்திய முன்னேற்ற நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கு இவை மற்றுமொரு சாட்சி.

“எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்பதோடு “உலகம் தழுவிய தமிழ்” என்பதே நம் அடையாளம் என்ற பெருமையை இந்த வரலாறு நம்மை நிமிரச் செய்கிறது.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories