
ஒன்றிய பா.ஜ.க அரசு இந்தி மொழியை எப்படியாவது இந்தியா முழுமைக்கும் திணித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது. இந்தியாவுக்கென ஒரு தேசிய மொழி என்று இல்லாதபோதும், இந்தியை தேசிய மொழி எனக்கூறி வருகிறது ஒன்றிய அரசு. இதுமட்டுமில்லாமல் பல்வேறு வகைகளில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள், ரயில் நிலையங்கள் என பல்வேறு இடங்களிலும் பள்ளி, கல்லூரிகள் மூலமாகவும் இந்தியை திணிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கு தமிழ்நாடு என்றுமே சிம்ம சொப்பனமாக விளங்கி இந்தி திணிப்பை எதிர்ப்பதில் ஒருபடி மேலே இருந்து ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து சமரசம் இல்லாமல் களமாடி வருகிறது.
ஒன்றிய அரசின் இந்த திணிப்பு நடவடிக்கை தற்போது, தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ரயில் நிலையங்களிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. ரயில் நிலையங்களில் முன்பு இருந்த பெயர் பலகைகளை மாற்றி, புதிய பெயர் பலகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக மாற்றியமைக்கப்பட்ட சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் உள்ள புதிய பெயர் பலகைகளில், முன்பு மேலே தமிழிலும் நடுவில் ஆங்கிலத்திலும் கீழே இந்தியிலும் நிலையத்தின் பெயர் தெரியும்படி இருந்து வந்த பெயர்களை, தற்போது நடுவில் இந்தியிலும், கீழே ஆங்கிலத்திலும் மற்றும் மேலே தமிழிலும் வைக்கப்பட்டுள்ளது. இணைப்பு மொழியாக இருந்துவந்த ஆங்கிலம் அனைவருக்கும் தெரியும்படியும் அதன் மேலே தமிழும் இருந்து வந்தது. தற்போது அதனை மாற்றி அமைத்து பார்த்தவுடன் கண்ணில் படும்படி இந்தியை முன்னிலைப்படுத்தியுள்ளது ரயில்வே துறை. நேரடியாகவே இந்தித் திணிப்பாகத்தான் இது பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே உள்ளூர் ரயில் நிலையங்களில் தினம் ஒரு இந்தி வார்த்தை, ரயில் நிலையங்களில் வேலை செய்யும் அலுவலர்கள் இந்தி மொழி பேசுபவர்கள் என இந்தி திணிப்பை வெளிப்படையாக அரங்கேற்றி வருகிறது ஒன்றிய பாஜக அரசு. இந்த சூழலில் தற்போது முழுக்க முழுக்க ரயில் நிலையங்களை இந்திமயமாக்க திட்டமிட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தமிழ் மொழியை முன்னிலைப்படுத்தாமல் இந்தியை முன்னிலைப்படுத்த வேண்டிய காரணம் என்ன என்பதை ஒன்றிய அரசு தெளிவுபடுத்துமா?
சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் பெயர் பலகை மாற்றியபோதே தி.மு.க எம்.பி கனிமொழி கடும் கண்டனத்தை பதிவு செய்தார். “கல்லக்குடியில் தொடங்கியது, சென்னை பூங்கா வரை தொடர்கிறது. அவர்கள் திணிப்பதை நிறுத்தப் போவதுமில்லை. நாம் அதை எதிர்ப்பதில் ஓயப்போவதுமில்லை” என தெரிவித்திருந்தார்.
தற்போது இந்த தொடர் நடவடிக்கை நீண்டு சிவகாசி ரயில் நிலையத்திலும் இந்தியை முன்னிலைப்படுத்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. “நோய்த்தொற்றைப் போல ஊரெங்கும் பரவிடும் இந்த இந்தித் திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்”. என தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார் கனிமொழி எம்.பி.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு, “மக்களின் மொழி உணர்வுகளை மதிக்காமல், தென்னக ரயில்வே மேற்கொள்ளும் இத்தகைய மறைமுக இந்தித் திணிப்பு முயற்சிகளை உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழே முன்னவள்! மூத்தவள்! முதன்மையானவள்!” என தெரிவித்திருந்தார். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
பல்வேறு காலகட்டங்களில் இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டு வரும் தமிழ்நாட்டில், எப்படியாவது இந்தியை திணிக்க முற்படும் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு எப்போதுமே ‘Out Of Control’ ஆகத்தான் இருந்து வருகிறது.






