
சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற “லியோனி ஆகிய நான்” 50-ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களை வாழ்த்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக ஆற்றிய உரை:-
இன்றைக்கு காரைக்குடியில் நடைபெறுகின்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக சிவகங்கை மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். இதற்காக, நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தபோது, நம்முடைய திண்டுக்கல் லியோனி அவர்கள் என்னை சந்தித்து, இன்று நடைபெறுகின்ற பொன்விழா என்று சொல்லி அழைத்தார். என்னை லேட்டாக அழைத்த காரணத்தினால், நேரில் வரமுடியவில்லை என்றாலும், வீடியோ மூலமாக நிச்சயம் வாழ்த்த வேண்டும் என்று இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருக்கிறேன்.
பட்டிமன்ற உலகத்தை பொறுத்தவரைக்கும், நம்முடைய லியோனி அவர்கள்தான் கதாநாயகன்! தன்னுடைய கருத்தாழமிக்க சிந்தனைகளால், நயமிக்க நகைச்சுவை பேச்சால், தமிழ்நாட்டு மக்களை 50 ஆண்டுகளாக மகிழ்வித்துக் கொண்டிருக்கக்கூடிய லியோனி அவர்களை பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!
பேச்சுலக மேடைகளில் இன்னும் பல்லாண்டு காலம் அவர் கோலோச்ச வேண்டும் என்று முதலமைச்சராக மட்டுமல்ல! அவருடைய ரசிகனாக நான் வாழ்த்துகிறேன்!
சிரிப்பொலி - பேச்சொலி - இசையொலி - மேடையொளி இதுதான் திண்டுக்கல் லியோனி! எப்படிப்பட்ட கவலையில் இருந்தாலும், மன அழுத்தத்தில் இருந்தாலும், லியோனி அவர்களுடைய பேச்சைக் கேட்டால், மகிழ்ச்சியும், புன்னகையும் தன்னால் வரும்! அரசியல் மேடைகள், பட்டிமன்ற மேடைகள் என்று தன்னுடைய வெற்றிக்கொடியை பறக்கவிட்டிருக்கின்ற அவருடைய சாதனை சாதாரணமானது அல்ல! ஐம்பதாண்டுகள் மேடைகளில் நிலைத்து நிற்கின்ற சாதனையை எல்லோராலும் செய்துவிட முடியாது! நிறைய பேர் out date ஆகிவிடுவார்கள். ஆனால், நம்முடைய லியோனி அவர்கள் update ஆகி நிலைத்து நிற்கிறார்.
1976-ல் திண்டுக்கல் G.T.N. கலைக் கல்லூரியில் படிக்கும்போது, தமிழ்துறைத் தலைவர் பேராசிரியர் மா.வைத்தியலிங்கன் தலைமையில் அரங்கேறிய அவருடைய பட்டிமன்ற மேடைப் பயணம் – தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது!

நகைச்சுவை மட்டுமல்ல, பாட்டு, பல குரல் என்று மேடையையே கலக்குவார்! நம்முடைய லியோனி அவர்களின் பட்டிமன்றங்களை பார்க்க எவ்வளவு மக்கள் கூடுவார்களோ, அதைவிட அதிகமாக அவருடைய பட்டிமன்ற கேசட்டுகளை மக்கள் விரும்பி வாங்கினார்கள்.
பட்டுக்கோட்டையா? கண்ணதாசனா? பழைய பாடலா? புதிய பாடலா? என்று அவரின் ஜனரஞ்சகமான பட்டிமன்றங்கள் ஒலிக்காத வீடுகளும் இல்லை! கேட்காத மக்களும் இல்லை! கேசட் – சி.டி. கடந்து, இன்றைக்கும் யூடியூபில் லியோனியின் பட்டிமன்றங்களை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்! 5 ஆயிரத்துக்கும் அதிகமான மேடை நிகழ்வுகள், தொலைக்காட்சியில் இசைக்குழுவினரோடு இணைந்து பாட்டுமன்றம் – இசையமைப்பாளர்கள் – நாட்டுப்புற கலைஞர்கள்கூட இணைந்து உலகம் முழுவதும் நிகழ்ச்சிகள் என்று ஏராளமான சாதனைகள் படைத்திருக்கிறார். நம்முடைய லியோனி அவர்களின் சிறப்பு என்னவென்றால், அவருடைய நகைச்சுவை சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் வைக்கும்! மறுபடி மறுபடியும் கேட்க தூண்டும்! இதுதான் லியோனி அவர்களுடைய தனித்தன்மை!
இப்படி, பட்டிமன்ற மேடைகளில் கலக்கிக் கொண்டிருந்த லியோனி அவர்கள், தான் கலைஞரின் ரசிகர் என்று பெருமையோடு சொல்லி, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்! இணைந்ததும், கலைஞர் தொலைக்காட்சியில் “நல்லாப் பேசுங்க… நல்லதையே பேசுங்க” என்ற பேச்சரங்க நிகழ்ச்சியை 300 வாரங்கள் நடத்தினார். 100 வாரங்கள் பேச்சுத் திருவிழாவை நடத்தினார். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மூலம், நூற்றுக்கும் மேற்பட்ட பேச்சாளர்களை உருவாக்கினார். மக்களுக்கு அடையாளம் காட்டினார்!
அதுமட்டுமல்ல, பெருமையோடு சொல்கிறேன்… திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கழக மேடைகளிலும், பட்டிமன்ற மேடைகளிலும், தொலைக்காட்சிகளிலும் கொடிகட்டிப் பறக்கின்ற நம்முடைய லியோனி அவர்கள் பல்லாண்டு வாழ்க! வாழ்க! என்று வாழ்த்துகிறேன்.






