
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.1.2026) சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை:-
சிவகங்கை என்றாலே சிலிர்ப்பு! ஏன் தெரியுமா? இன்றைக்கு நேற்று அல்ல, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் நாகரிகம் ஓங்கியிருந்ததற்கான கீழடித் தடயங்கள் கிடைத்த மண் இந்த மண்! பலரின் வீரத்தால், தியாகத்தால் சிவந்த மண்! முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவர் – அவர் மனைவி வீரமங்கை வேலுநாச்சியார் – அவரது மகள் வெள்ளச்சி நாச்சியர் என்று ஒரு குடும்பம் வாழையடி வாழையாக ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்று தாய்நிலத்தை காத்த மண் இது!
விடுதலை மற்றும் தியாகத்தின் அடையாளங்களாக வாழ்ந்து, இந்த மண்ணுக்கு உரமாகியுள்ள மருது சகோதரர்களை தந்த மண் அல்லவா சிவகங்கை! இவர்கள் மட்டுமல்ல! அடுத்த நிமிடம் மரணம் என்று தெரிந்தே, உடலில் நெருப்பைக் கட்டிக்கொண்டு, ஆயுதக் கிடங்குகளில் குதித்த குயிலி வாழ்ந்த மண் இந்த மண்! அதனால்தான், இவர்கள் பெயரை எல்லாம் சொல்லி, இங்கே நிற்கும்போது எனக்குள்ளே தமிழ் வீரமும், உணர்ச்சியும் பொங்கி எழுகிறது!
இந்த விழாவை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்ற அமைச்சர் பெரியகருப்பன் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் திருமிகு பொற்கொடி அவர்களுக்கும், மாவட்ட அதிகாரிகள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!
முன்னாள் ஒன்றிய அமைச்சர் அண்ணன் சிதம்பரம் அவர்கள் இங்கே குறிப்பிட்டுச் சொன்னார்; அலுவலகத்திற்கு அதைத் தொடர்ந்து என்னுடைய இல்லத்திற்கு வந்து, என் கல்லூரிகளின் திறப்பு விழாவிற்கு நேரில் வரவேண்டும் எனக் கேட்டார். நான் தேதி கொடுத்தேன். கொடுத்தேன் என்று சொல்வதைவிட அவர் சொன்னதை நான் ஒப்புக்கொண்டேன்; அதுதான் உண்மை. அதைப் பயன்படுத்திக் கொண்டு நம்முடைய பெரியகருப்பன் அவர்கள், அவருடைய பெயரைப்போலவே பெரிய விழாவாக இதை ஏற்பாடு செய்திருக்கிறார். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் என்று சொல்வார்களே, அதைப்போல ஒரு தேதியை பெற்றுக் கொண்டு 5 நிகழ்ச்சிகளை அவர் நடத்தியிருக்கிறார். நேற்று மாலை 3 விழாக்கள் – முதலில்,
பொதுவுடைமை இயக்கத்தின் மாபெரும் தலைவராக இருந்த தோழர் ஜீவா அவர்கள், அண்ணல் காந்தியடிகளை சந்தித்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் சிராவயலில், தமிழ்நாடு அரசின் சார்பில், சிலையுடன் கூடிய நினைவரங்கத்தை திறந்து வைத்தேன்.
அடுத்து, “தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் நூற்றாண்டு விழாவை, அரசு சார்பில் கொண்டாடுவோம்” என்று அறிவித்திருந்தோம். குன்றக்குடி மடத்தில் இன்றைய அடிகளார் மிகச்சிறப்பாக அதை ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த நிகழ்ச்சிக்கு அடுத்து, திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு கவிஞர் என்று தந்தை பெரியாரால் போற்றப்பட்ட சிறப்புக்குரிய கவியரசு முடியரசனார் அவர்கள். இன்னும் சொன்னால், தலைவர் கலைஞருக்கு நெஞ்சுக்கு நெருக்கமான கவிதைத் தோழர். அவருடைய சிலையைத் திறந்து வைத்தேன். இதுமட்டுமா!
இன்று கானாடுகாத்தான் பேரூராட்சியில் செட்டிநாடு வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கான புதிய கட்டடங்களை திறந்து வைத்திருக்கிறேன். 330 ஏக்கரில், அந்தக் கல்லூரி அமைந்திருக்கிறது. தற்போது 361 மாணவிகள், 128 மாணவர்கள் என்று மொத்தம் 489 மாணவர்கள் இளங்கலை வேளாண்மை படித்துக் கொண்டு வருகிறார்கள். அந்தக் கல்லூரியில் மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையமும் செயல்பட்டு வருகிறது. 61 கோடியே 79 இலட்சம் ரூபாய் செலவில் பன்முகத் தன்மை கொண்ட மாதிரி வேளாண் காடுகள் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.
மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினரும் - ஒன்றியத்தின் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் அவர்களின் கோரிக்கையை ஏற்று, செட்டிநாடு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்திருக்கின்ற கலை அரங்கத்திற்கு, பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட, ஒன்றியத்தின் முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் பாரத ரத்னா விருது பெற்ற டாக்டர் சி. சுப்பிரமணியம் அவர்களின் பெயர் சூட்டி, திறந்து வைத்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
அடுத்து, இங்கு காரைக்குடி வட்டம் கழனிவாசல் பகுதியில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டிருக்கின்ற சட்டக்கல்லூரியை திறந்து வைத்திருக்கிறேன். 19 ஏக்கர் பரப்பில் இது அமைந்திருக்கிறது. ஆயிரத்து 300 மாணவர்கள் படிக்கும் வசதியுடன் இது அமைக்கப்பட்டிருக்கிறது.
நம்முடைய அண்ணன் சிதம்பரம் அவர்களும், அமைச்சர் பெரியகருப்பன் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களும், சட்டமன்ற உறுப்பினர் திரு.மாங்குடி அவர்களும், இவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த இரண்டு கல்லூரிகளையும் உரிய நேரத்தில் திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோம்.
உங்கள் தகவலுக்காக, மற்றொரு செய்தியை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒன்றிய அரசால், மதுரை எய்ம்ஸ் அறிவித்து, அது தொடங்கி 11 ஆண்டுகள் ஆகிறது – இது உங்கள் தகவலுக்காக தான்.
அடுத்த நிகழ்ச்சி -
32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட மினி டைடல் பூங்காவையும் திறந்து வைக்க இருக்கிறேன். இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைந்தது தான் என்னுடைய சிவகங்கைப் பயணம்.
முன்னாள் ஒன்றியத்தின் அமைச்சர் மூத்த காங்கிரஸ் தலைவருமான அண்ணன் சிதம்பரம் அவர்கள் இங்கே பேசினார்கள். திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். அப்போது அண்ணன் சிதம்பரம் அவர்கள் என்ன கருத்து சொல்கிறார் என்பதை நான் கூர்ந்து கவனிப்பேன். காரணம், பல்லாண்டு கால அனுபவம் வாய்ந்த அவரது பாராட்டை நான் முக்கியமாக கருதுவேன். அண்ணன் சிதம்பரம் அவர்கள் ஒட்டுமொத்தமாக நாட்டிற்காக சிந்தித்தாலும், என்னதான் இருந்தாலும், சிவகங்கைக்காக கூடுதலாக, அக்கறையோடு சிந்திப்பார்; செயல்படுவார் என்பதற்கு இன்று திறந்து வைத்திருக்கக்கூடிய இரண்டு கல்லூரிகள் தான் உதாரணம். அண்ணன் சிதம்பரம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டையும், நன்றியையும் நான் தமிழக அரசின் சார்பில், தமிழக மக்களின் சார்பில் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்தவுடன் முக்கியமான ஒரு திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறேன்.
சிவகங்கை மாவட்டத்தில் இருக்கக்கூடிய 8 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கக்கூடிய 2 ஆயிரத்து 452 ஊரக குடியிருப்புகள் மற்றும் 3 நகராட்சிகளில், 2 ஆயிரத்து 119 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில், மொத்த கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை திறந்து வைத்திருக்கிறேன்.
அதுமட்டுமல்ல, இந்த மாபெரும் விழா மூலமாக, 2 ஆயிரத்து 560 கோடி ரூபாய் மதிப்பிலான 49 பணிகளை திறந்து வைத்திருக்கிறேன். 13 கோடியே 36 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 28 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி இருக்கிறேன். 205 கோடி ரூபாய் மதிப்பில், 15 ஆயிரத்து 453 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கி இருக்கிறேன்.
நேற்று நான் இந்த மாவட்டத்திற்கு வந்ததும், சிவகங்கை மாவட்டத்தில், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், முத்திரை திட்டங்களாக கடந்த 5 ஆண்டு காலத்தில் பயனடைந்திருக்கக்கூடிய பட்டியலை கேட்டேன். வழங்கினார்கள்; எனக்கு மலைப்பாக இருந்தது. அந்தப் பட்டியலை நான் உங்களிடத்தில் நினைவுபடுத்துகிறேன்.
மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை சிவகங்கை மாவட்டத்தில், 2 இலட்சத்து 38 ஆயிரத்து 428 பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
கல்லூரிக்குச் செல்கின்ற 8 ஆயிரத்து 469 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதேபோல, 6 ஆயிரத்து 76 மாணவர்களுக்கும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தரப்பட்டு வருகிறது.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 855 கோடி ரூபாய் கடனுதவி தரப்பட்டிருக்கிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், 12 இலட்சம் நபர்கள் பயனடைந்திருக்கிறார்கள். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், 1 இலட்சத்து 34 ஆயிரம் நபர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.
37 ஆயிரம் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தில், சத்தான, சுவையான உணவு தினமும் வழங்கப்படுகிறது. 62 ஆயிரம் நபர்கள் முதியோர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள்.
நான்கு வருடங்களில், 50 ஆயிரம் நபர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. 24 ஆயிரத்து 969 விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கப்பட்டிருக்கிறது. 3 ஆயிரத்து 822 உழவர்களுக்கு புதிய இலவச மின் இணைப்புகள் தரப்பட்டிருக்கிறது.
65 திருக்கோயில்களில், குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம். காரைக்குடி கழனிவாசல் கிராமத்தில், சிப்காட் வளாகம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அடுத்தும், நம்முடைய திராவிட மாடல் ஆட்சிதான்! அண்ணன் சொன்னாரே, 2021-ல் ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒரு வாரத்தில் வந்தோம்; கோரிக்கை வைத்தோம் – அதற்கென்ன செய்துவிடலாம் என்று சொல்லி, அதை நிறைவேற்றியிருக்கிறார் என்று பெருமையோடு சொன்னார். அடுத்து வருவேன் என்று சொன்னார் – வரத்தான் போகிறீர்கள். அதில் என்ன சந்தேகம்!
ஆட்சி அமைந்ததும், வரிசையாக திறப்புவிழா காண இருக்கின்ற பல பணிகளுக்கும் நான் இப்போதே அடிக்கல் நாட்டியிருக்கிறேன்! மீண்டும் சிவகங்கைக்கு வந்து நிச்சயம் அதையெல்லாம் திறந்து வைப்பேன்.
நம்முடைய அரசின் திட்டமிட்ட செயல்பாடுகளால், தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது என்று சொன்னால், அது நான் சொல்லுகின்ற கற்பனை புள்ளிவிவரங்கள் இல்லை. அவை அனைத்தும் ஒன்றிய அரசு சொல்லுகின்ற புள்ளிவிவரங்கள்தான். அவர்கள் அறிக்கையை மேற்கோள் காட்டித்தான் சொல்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சியை விமர்சிக்கின்ற ஆளுநர் அவர்கள் ஒன்றிய அரசைத்தான் கேள்வி கேட்கவேண்டும். அதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை. தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் அவர்களும் தமிழ்நாடு வளரவேண்டும் என்று பேசி இருக்கிறார். தேர்தலுக்காக பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை எல்லாம் பேசிவிட்டு சென்றிருக்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை வெளியாகி இருக்கிறது. ஒன்றிய அரசின் பட்ஜெட்டுக்கு முன்பாக இந்த அறிக்கை வந்திருக்கிறது. அதிலும், தமிழ்நாட்டை மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்கள். புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேம்படுத்தி இருப்பதாக ஒன்றிய அரசு பாராட்டி இருக்கிறது. உற்பத்தித் துறை வேலை வாய்ப்பில், தமிழ்நாடு முதலிடம் என்று ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை பாராட்டுகிறது.
“பெண்களுக்கான வேலை வாய்ப்பைப் பெருக்கும் திட்டங்களை தமிழ்நாடு தீட்டியிருக்கிறது, இது மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி” என்று பெருமையாக சொல்லியிருக்கிறார்கள். இந்த அறிக்கையை பிரதமர் அவர்களும், மாண்புமிகு ஆளுநர் அவர்களும் படிக்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். படிக்காமல் எந்த நிகழ்ச்சிக்கும் போய்விட வேண்டாம். நீங்கள் வழங்குகின்ற அறிக்கை தான். உங்கள் ஒன்றிய அரசு தந்திருக்கக்கூடிய அறிக்கை. “தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகள் வேறு மாநிலத்திற்கு சென்றுவிட்டது” என்று ஆளுநர் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில்தான் ஒன்றிய அரசின் அறிக்கை, தமிழ்நாட்டை இன்றைக்கு பாராட்டியிருக்கிறது.
சிவகங்கை கிராமங்கள் நிறைந்த மாவட்டம்! உங்களிடம் ஒரு முக்கியமான விசயத்தைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வந்த மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலை திட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு காலி செய்துவிட்டு வேறு பெயரில் புது திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். நீங்கள் எல்லோருமே கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களுக்கு மகாத்மா காந்தியையும் பிடிக்காது! மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது! அதனால்தான் இப்படி செய்கிறார்கள். இதை எதிர்த்து தி.மு.க. சார்பில், காங்கிரஸ் கட்சியின் சார்பில், ஏன் பல்வேறு கட்சிகளின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறோம். நாடாளுமன்றத்தில் நம்முடைய கூட்டணி எம்.பி.க்கள் தீவிரமாக எதிர்த்தார்கள். இப்போது கொண்டு வந்திருக்கின்ற புதிய திட்டத்தைப் பற்றி, குடியரசுத் தலைவர் உரையை முன்வைத்து, முன்னாள் நிதியமைச்சர் அண்ணன் சிதம்பரம் அவர்கள் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியிருந்தார். குடியரசுத் தலைவர் உரை என்றால், அது ஆளும் பா.ஜ.க. அரசின் உரைதான்! அவர்களை நோக்கித்தான் இந்த கேள்விகள். “ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற 100 நாள் திட்டத்திலேயே 50 நாள் கூட ஒன்றிய பா.ஜ.க. அரசு - ஒழுங்காக வேலை வழங்குவது இல்லை. ஏனென்றால், அதற்கான நிதியை ஒழுங்காக விடுவிப்பது இல்லை.
இந்த நிலையில், 50 நாள் எப்படி மேஜிக் போன்று 125 நாட்களாக உயரும்? ஒன்றிய அரசு இந்தத் திட்டத்திற்கு இரண்டரை மடங்கு கூடுதல் நிதியை அளிக்க தயாராக இருக்கிறார்களா? 125 நாள் அப்படி என்று ஒன்றிய பா.ஜ.க அரசு சொல்வதற்கு எந்த கேரண்டியும் கொடுக்கவில்லை! அது வெறும் மாயைதான். சொல்வதுதான் சொல்கிறீர்கள். அதை எதற்கு வெறும் 125 நாளோடு நிறுத்திவிட்டீர்கள்? 125 நாளுக்கு பதிலாக 365 நாளும் வேலை என்று கூட புரூடா விடலாமே!” என்று அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் ஆழமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். 100 நாள் வேலை திட்டம் என்று சொல்லுகின்ற மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வரை நாம் கணக்கிட்டுப் பார்த்தால், 65 இலட்சம் குடும்பங்கள் பயனடைந்திருக்கிறார்கள். ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடியிலிருந்து 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை கிராமப்புற மக்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது அவர்கள் கொண்டு வந்திருக்கின்ற புதிய திட்டத்தில் இதில் பாதி வருவதே சந்தேகம்தான். வேலை நாட்களையும் நாம் முடிவு செய்ய முடியாது. மேலே இருந்து அவர்கள் தான் முடிவு செய்வார்களாம். போதாக்குறைக்கு, இனி மாநிலங்கள் 40 விழுக்காடு நிதியை வழங்க வேண்டும் என்று வேறு புது திட்டத்தில் நம் மீது பெரிய தாக்குதலை தொடுத்திருக்கிறார்கள்.
ஒன்றிய பா.ஜ.க அரசு தன்னுடைய கடமையிலிருந்து நழுவி ஓடுகிறது; கிராமப்புற மக்களை மொத்தமாக கைகழுவி விடுகிறது. இந்த குறைபாடுகளை எல்லாம் சுட்டிக்காட்டி, இந்தத் திட்டத்தை உடனடியாக திரும்ப பெறவேண்டும். மறுபடியும், பழைய திட்டத்தை மகாத்மா காந்தி பெயரிலேயே தொடரவேண்டும் என்று சட்டமன்றத்தில் நாம் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறோம்.

மக்களின் குரலுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு கட்டாயம் செவிசாய்க்க வேண்டும்! இல்லையென்றால், மூன்று வேளாண் சட்டங்கள், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு போலவே, இதிலும், மக்கள் துணையுடன் உங்கள் முடிவை வாபஸ் பெற வைப்போம்!
தமிழ்நாட்டிற்காக குரல் கொடுக்க முடியாத பத்துத் தோல்வி பழனிசாமி, நம்முடைய அரசு இப்போது செய்து கொண்டிருக்கின்ற திட்டங்களை காப்பி அடித்தே புதிய வாக்குறுதிகள் என்று அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார். அவர் ஆட்சிக்கு வரப் போவதில்லை! அது வேறு விசயம். அப்புறம் ஏன் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஏற்கனவே அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த வாக்குறுதியையும் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் அவர் நிறைவேற்றவில்லை.
2011 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் என்ன சொன்னார்கள் தெரியுமா?
சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலைத் திட்டம் என்று சொன்னார்கள். செய்தார்களா?
தென் தமிழ்நாட்டில் ‘ஏரோ பார்க்’ என்று சொன்னார்களே… செய்தார்களா?
58 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என்று சொன்னார்கள். அதைப் பற்றி வாயே திறக்காதவர்கள்தான் இப்போது அடுத்த செட் பொய் வாக்குறுதிகளுடன் வந்திருக்கிறார்கள்.
2016 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதையாவது பழனிசாமி அவர்களுக்கு நினைவில் இருக்கிறதா?
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் செல்ஃபோன் வழங்கப்படும் என்று சொன்னீர்களே. எங்கே அந்த ஃபோன்?
பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் இலவச ‘வை-ஃபை' என்று சொன்னார்கள். பிறகு, அதைப் பற்றி பேச்சு மூச்சே இல்லை.
அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ‘அம்மா இரு சக்கர வாகன பழுது பார்க்கும் பயிற்சி மையம் உருவாக்கப்படும்’ என்று சொன்னார்கள். சொன்ன அவர்களுக்கே அது இப்போது மறந்துபோய்விட்டது.
அதிமுக ஆட்சியோ, பழனிசாமி அவர்களோ எப்போதுமே சொன்னதை செய்ய மாட்டார்கள் என்று மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், தி.மு.க. சொன்னதைச் செய்யும், செய்வதைத் தான் சொல்லும் என்று மக்களுக்குத் தெரியும்.
மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம் என்று சொன்னோம். சொன்னபடியே ஒரு கோடியே 16 இலட்சம் நபர்களுக்கு முதல் கட்டமாக வழங்கினோம். இப்போது மேலும் 17 இலட்சம் நபர்களை கூடுதலாகவும் சேர்த்திருக்கிறோம். இதுதான் திமுக.
கட்டணமில்லா பேருந்து பயணம் கொடுத்தால், போக்குவரத்து துறையை நடத்தவே முடியாது என்று சொன்னார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் நான் போட்ட முதல் கையெழுத்தே விடியல் பயணம் திட்டத்திற்குதான். இதனால், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு மிச்சமாகிறது. அதே நேரத்தில், போக்குவரத்து துறையையும் புதிய பேருந்துகள், நவீன வசதிகளுடன் மேம்படுத்தியிருக்கிறோம். இந்த ஐந்தாண்டு காலத்தில், 7250 பேருந்துகள் புதிதாக வாங்கி இன்றைக்கு ஓடிக் கொண்டிருக்கிறது.
அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திக் காட்டியிருக்கிறோம். யாராலும் செய்யவே முடியாது என்று சொன்னார்கள். அதையும், 5 ஆண்டுகளுக்குள்ளே செய்து, மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று நிரூபித்திருக்கிறது நம்முடைய திராவிட மாடல் ஆட்சி! நாம் ஆட்சிக்கு வந்தபோது, அரசு ஊழியர்களுக்கு 17 விழுக்காடாக இருந்த அகவிலைப்படியை இப்போது 58 விழுக்காடு என்கின்ற அளவிற்கு உயர்த்தி வழங்கியிருக்கிறோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
நாம் சொல்லிவிட்டு செய்த திட்டங்களுக்கு இணையாக, சொல்லாமயே பல முத்திரைத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம்! அதுதான் பெரிய சாதனை!
இன்னும் பல கனவுத் திட்டங்கள் இருக்கிறது. அவற்றை நிறைவேற்றும் வாய்ப்பை திராவிட மாடல் 2.0-ல் தமிழ்நாட்டு மக்களான நீங்கள் எனக்கு வழங்குவீர்கள் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையை தான் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும்போது உங்கள் முகங்களை நான் பார்க்கிறேன்!
மக்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி! தமிழ்நாட்டின் வளர்ச்சியே என் மகிழ்ச்சி! வெல்வோம் ஒன்றாக!






