
முதலமைச்சர் அவர்களின் தலைமையில், தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் (TNWESafe) சார்பில், தமிழ்நாட்டில் பெண்களுக்கு சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளித்தலை வலுப்படுத்தும் மற்றும் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கில், 2026 ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக மகளிர் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணி வாய்ப்புகளைப் பெறுவதற்கும், பணிகளில் நீடிப்பதற்கும், மீண்டும் பணிக்கு திரும்புவதற்கும் உதவும் அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான தமிழ்நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த உலக மகளிர் உச்சி மாநாடு நடைபெறுகிறது.

இந்த உலக மகளிர் உச்சி மாநாட்டில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், உலக வங்கியின் மண்டல இயக்குநர் செம் மெட்டே (Cem Mete) அவர்கள், ஐ.நா. பெண்கள் அமைப்பின் பிரதிநிதியான திருமதி காந்தா சிங் அவர்கள், UNDPன் இந்தியப் பிரதிநிதி திருமதி. ஏஞ்சலா லுசிகி அவர்கள், மொரிஷியஸின் தலைமை கொறடா திருமதி நவீனா ரம்யாத் அவர்கள், தொழில்துறை, கல்வித்துறை, பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) பங்காளர்கள், அடைகாப்பு மையங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உலக மகளிர் உச்சி மாநாட்டை 27.01.2026 அன்று நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கி வைக்கிறார்.
2026 ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் உலக மகளிர் உச்சி மாநாட்டில் 11 கருப்பொருள்களில் அமர்வுகள் நடைபெற உள்ளன. மேலும், இதில் 70க்கும் மேற்பட்ட ஆளுமைகள் பேச இருக்கின்றார்கள். இது குறித்த விவரங்கள் TNWESafe இணையதளத்தில் உள்ளன. இந்த விவாதங்கள், TNWESafe திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான மாநில அளவிலான திட்டத் தயாரிப்புகளை உருவாக்குவதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஜனவரி 28, அன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நிறைவு விழாவில், பெண்கள் திறன் மேம்பாடு மற்றும் முறையான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு ஆதரவளிக்கும் மாநில அளவிலான பிரச்சாரம் ஒன்று தொடங்கப்பட உள்ளது.






