
சென்னையில் இன்று நடைபெறும் (24.01.2026) Thrive TN மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியத் தொழில்முனைவோர் அமைப்பின் சார்பில், புத்தாக்கத் தொழில் முயற்சிகளையும், இளைஞர்களையும் ஊக்குவித்திடும் வகையில், சென்னையில் இன்று (24.01.2026) Thrive TN மாநாடு நடைபெறுவதை அறிந்து மகிழ்கிறேன்.
தமிழ்நாட்டைத் தொழில்வளம் மிக்க மாநிலமாக மாற்றும் நோக்கத்துடன் உலகளாவிய கவனத்தையும், முதலீடுகளையும் ஈர்ப்பதற்கான பல்வேறு முயற்சிகளையும் நமது திராவிட மாடல் அரசு முன்னெடுத்து வருகிறது.
மின்ணணு யுகத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களின் திறனை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கான "நான் முதல்வன்" முதல் விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை ஊக்குவிப்பதற்கான அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்வரை, தமிழ்நாட்டை நவீனத் தொழில்மயமாக்குவதற்கான பல்வேறு திட்டங்களை நமது அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்தகைய முயற்சிகளுக்கெல்லாம் ஊக்கம் தரும் வகையில், AIE என்ற இந்தியத் தொழில்முனைவோர் அமைப்பு சென்னையில் Thrive TN மாநாட்டை நடத்துவது முக்கியமான நிகழ்வாகும். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் சிறுகுறு நிறுவனங்களும் பங்கெடுத்திருப்பது சிறப்புக்குரியது.
Thrive TN மாநாட்டுக் குழுவின் தலைவரும், தொழில் முனைவோருமான திரு. கே.இ. இரகுநாதன் அவர்கள், தமிழ்நாட்டின் தொழில்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து ஆழ்ந்த அனுபவ அறிவும், கவனமும் உள்ளவர். தொலைக்காட்சி விவாதங்களில் ரகுநாதன் அவர்கள் அறிவார்ந்த கருத்துகளை எடுத்து வைப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். தமிழ்நாட்டு இளைஞர்களுக்குப் பயனுள்ள இந்த மாநாட்டை ஒருங்கிணைத்துள்ள இரகுநாதனுக்கும், அவரது குழுவினருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு மாநிலத்திலும் 300 தொழில்முனைவோரைக் கண்டறிந்து உதவுவது, வேலைவாய்ப்பைத் தேடும் 3000 இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்கான உதவிகளைச் செய்தல், தமிழ்நாட்டின் ஆறு உருவெடுக்கும் துறைகளில் உள்ள வாய்ப்புகளை வெளிப்படுத்துதல் உள்ளிட்ட இந்த மாநாட்டின் நோக்கங்கள் பாராட்டுக்குரியவை.
இந்த மாநாட்டின் மூலம் இளைஞர்கள் மட்டுமின்றி, சிறுகுறு நிறுவனங்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட திட்டங்களையும் வகுத்திருப்பது ஆக்கரீதியான முயற்சி. சிறப்பான நோக்கங்களுடன் நடத்தப்படும் Thrive TN மாநாடு வெற்றியடையவும், அதன் மூலம் திட்டமிட்டுள்ள இலக்குகளை அடையுவும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.






