
2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரின் முதல் நாள் நிகழ்வில், ஆளுநர் ஆர்.என். ரவி, வழக்கமான மரபின்படி ஆளுநர் உரையை வாசிக்காமல் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இந்நிலையில், இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் சட்டமன்றத்தில் தொடங்குகிறது.
முன்னதாக கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு,"அதிமுக ஆட்சியில் அளித்த வாக்குறுதிகளில் மோனோ ரயில் திட்டம், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள், இலவச செல்போன், வீடு இல்லாதவர்களுக்கு 3 சென்ட் நிலம், பழைய ஓய்வூதியத் திட்டம், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
ஆனால் தி.மு.க ஆட்சியில் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சொல்லாத வாக்குறுதிகளையும் செய்து காட்டியுள்ளோம். தி.மு.க ஆட்சியை மக்கள் பாராட்டி வருகின்றனர். அ.தி.மு.க-வுக்குத்தான் பாராட்ட மனமில்லை.” என பேசினார்.
அதேபோல், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா," “ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளதாக ஒன்றிய அரசின் தரவுகளே தெரிவிக்கின்றன. இந்திய அளவில் எந்த மாநிலமும் கண்டிராத வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது. முதலீட்டு நிறுவனங்களின் வசதிக்காக அவர்களின் தலைமையகங்கள் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் அமைந்திருக்கும். ஆனால் தொழிற்சாலைகள் மட்டுமே தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. இதெல்லாம் தெரியாமல் அ.தி.மு.கவினர் பழைய கதைகளைத் தொடர்ந்து அரைத்துக் கொண்டே உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.








