
லண்டன் கிங்ஸ் கல்லூரியில் அரசியல் மற்றும் பொதுக் கொள்கை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் விக்னேஷ் ராஜாமணி எழுதிய "The Dravidian Pathway" (திராவிடப் பாதை) என்ற புத்தகத்தின் மீதான விவாத அரங்கு டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டு கனிமொழி எம்.பி பேசியதாவது:
"இந்தியா முழுவதும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தாலும், 'தமிழ்நாடு ஏன் எப்போதும் தனித்து நிற்கிறது?' என்ற கேள்விக்கு இந்தப் புத்தகம் விரிவான விடையை அளித்துள்ளது. நமது முன்னோடித் தலைவர்கள் வகுத்த கொள்கை வழியில்தான் தமிழ்நாடு இன்றும் பயணித்து வருகிறது. அதன் காரணமாகவே, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' போன்ற கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான முயற்சிகளைத் தமிழ்நாட்டு மக்கள் மிகத் தீவிரமாக எதிர்க்கின்றனர்.
தமிழ்நாட்டின் அறிவுசார் சிந்தனைகளும், சமூக இயக்கங்களும் படிப்பகங்கள் மற்றும் நூலகங்களில்தான் வேர்விட்டு வளர்ந்தன. திராவிட இயக்கம் அந்தப் பணியைச் சிறப்பாக முன்னெடுத்தது. அதன் விளைவாகவே, இன்று தமிழ்நாடு முழு கல்வி அறிவு பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது. இங்குப் பெண்கள் அரசியலில் முனைப்புடன் பங்கேற்பதுடன், குடும்பம் குடும்பமாக மக்கள் அரசியல் மற்றும் அறிவுசார் நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றனர்.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் மக்கள் மத்தியில் விதைத்த அரசியல் விழிப்புணர்வே தமிழ்நாட்டின் இந்தத் தனித்துவத்திற்குக் காரணம். இந்தித் திணிப்பு உள்ளிட்ட அனைத்து வகையான திணிப்புகளுக்கும் எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தனர். இன்றும் எந்தவொரு சமூகப் பாதிப்பு என்றாலும், மக்கள் ஒன்றிணைந்து போராடும் அந்தச் சிந்தனைப் போக்கை திராவிட இயக்கமே உருவாக்கியுள்ளது. இந்தப் பரிணாம வளர்ச்சியினை 'The Dravidian Pathway' புத்தகம் சிறப்பாக ஆவணப்படுத்தியுள்ளது" என்று அவர் பேசினார்.






