
சென்னை திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் சந்திரயோகி சமாதி சாலையில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம் மற்றும் முரசொலி மாறன் பூங்கா, புளியந்தோப்பு கன்னிகாபுரம் டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள கால்பந்து விளையாட்டு மைதான இறுதி கட்ட கட்டுமான பணிகளை இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு, இறுதி கட்டப் பணிகளை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது :-
"மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு திருமண மண்டபங்களை கட்டி வருகிறோம். அந்த வகையில் திரு.வி.நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்திற்கு "அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை" என்று முதலமைச்சர் பெயர் சூட்டியுள்ளார். இந்த திருமணம் மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் 29-ம் தேதியன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கவுள்ளார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை போலதான் பழனிசாமி அவரது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதையெல்லாம் மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் தான் பொருளாதாரத்தை ஆராய்ந்து வாக்குறுதிகளை அறிவிப்பார்கள். தேர்தலில் வெற்றி பெறாதவர்கள் எதை வேண்டுமானாலும் அறிவிக்கலாம். அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. எங்கள் பணி, மக்கள் பணி.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். பழனிசாமியின் இந்த அறிவிப்புகளுக்கு நாங்களும் கவலைப்படவில்லை, மக்களும் கவலைப்படவில்லை.

ஆளுநர் ரவியின் கொள்கையின் கோட்பாடுகள் சித்தாந்தங்கள் தமிழகத்தில் எடுபடாமல் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழகம் முன்னோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது.
எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் பிரதமர் தமிழ்நாட்டுக்கு வருவது தெரிந்த விஷயம் தான். இனி அவரை அடிக்கடி எதிர்பார்க்கலாம். மோடி ஒருபுறம், அமித்ஷா மறுபுறம் ஒட்டுமொத்த கேபினேட்டும் தமிழகத்திற்கு படையெடுக்கும்.
எத்தனை படையெடுப்புகள் வந்தாலும் இரும்பு மனிதராக நின்று தமிழ்நாடு முதலமைச்சர் மீண்டும் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது." என்றார்.








