
தமிழரின் வீர விளையாட்டாக அறியப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டி ஆண்டுதோறும் நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாள் பல்வேறு பிரச்சினைகளை கடந்து தற்போது ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதனை மக்களும் ஆரவாரத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையிலுள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி மிக விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையான இன்று (ஜன.15) மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி ந்டைபெற்றது.

இந்த போட்டியை இன்று காலை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 1,100 காளைகளும், சுமார் 600 வீரர்களும் போட்டியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து 12 சுற்றுகளாக விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்த நிலையில், இன்று காலை தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 6.30 மணியளவில் நிறைவடைந்தது. இந்த போட்டியில் 22 காளைகளை அடக்கி வலையங்குளம் பாலமுருகன் முதலிடம் பிடித்தார். ஒரே சுற்றில் 18 காளைகளை அடக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்த பாலமுருகனுக்கு, முதலமைச்சர் சார்பில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து 17 காளைகளை அடக்கி அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி 2வது இடத்தை பிடித்தார். ஆரம்பத்தில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி தொடர்ந்து முன்னிலை வகித்த இவர், பின் 17 காளைகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்தார். இவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

இவரைத் தொடர்ந்து அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் 3வது இடத்தை பிடித்தார். மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக, விருமாண்டி சகோதரர்களின் காளை முத்து கருப்பன் தேர்வு செய்யப்பட்டது. காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது.






