
2025 ஆம் ஆண்டில் 270-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ரூ.2.07 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.4 லட்சத்திற்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தொழில் முதலீடுகளை ஈர்ப்பத்தில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்," 2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி மதிப்பிலான 270-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 4 லட்சத்திற்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் (Guidance TN) மூலம் இந்தத் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
முதலீடுகள் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் குவிக்கப்படாமல், மாநிலம் முழுவதும் பரவலாக்கப்பட்டுள்ளன. தென்காசி, மதுரை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் முதன்முறையாக சிப்காட் (SIPCOT) பூங்காக்கள் அமைக்கப்பட்டன.
2025-இல் தமிழ்நாடு கடல்சார் போக்குவரத்து உற்பத்தி கொள்கை, விண்வெளித் தொழில் கொள்கை மற்றும் பொம்மை உற்பத்தி கொள்கை ஆகியவை வெளியிடப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட புதிய உலகளாவிய திறன் மையங்கள் (GCC) தொடங்கப்பட்டன. அக்னிகுல் காஸ்மோஸ் (Agnikul Cosmos), எச்டி ஹூண்டாய் (HD Hyundai) போன்ற நிறுவனங்கள் தங்கள் விரிவாக்கத்தை தமிழ்நாட்டில் மேற்கொண்டன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, வேலைவாய்ப்பு மற்றும் நீண்டகால வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. 2026-ஆம் ஆண்டில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் புதிய உச்சங்களைத் தொடத் தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.








