தமிழ்நாடு

235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மாநில அளவிலான உணவுத் திருவிழாவை, தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!

235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்பதற்காக 1989 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை தொடங்கி வைத்தார். அன்று அவர் தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், துணை முதலமைச்சராக இருந்த போது அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று தனது கரங்களால் ஆயிரக்கணக்கான மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி சேமிப்பு புத்தகம் மற்றும் கடனுதவிகளை வழங்கினார். 

அதுவரை பெண்கள் வங்கிகளுக்கு சென்று தங்கள் தேவைகளை கேட்க தயங்கிய நிலைமாறி, தற்போது பெரும்பாலான வங்கிகளின் முக்கியமான மற்றும் மரியாதைக்குரிய வாடிக்கையாளர்களாக மகளிர் சுய உதவிக்குழுவினர் முன்னேற்றம் அடைந்துள்ளனர். 

மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரத்தை மேலும் வளப்படுத்தும் நோக்கத்துடன் துணை முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அத்திட்டங்களின் பயனாக இன்று ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் 4.96 இலட்சம் சுய உதவிக் குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. சுய உதவிக் குழுக்களின் பொருளாதாரத் தேவையைக் கருத்தில் கொண்டு, கடந்த ஐந்தாண்டுகளில் 21,08,697 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 2,74,13,061 உறுப்பினர்களுக்கு 1,38,564.85 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!

மேலும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்திட, மதி அங்காடி, மதி அனுபவ அங்காடி, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள், மதி இணையதளம், மதி சிறுதானிய உணவகம், இயற்கைச் சந்தைகள் மற்றும் விற்பனைக் கண்காட்சிகள் என பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மிகப்பெரிய உணவகங்களில் சமைக்கப்படும் எவ்வளவு உயர்ந்த விலையிலான உணவு என்றாலும், வீட்டில் பெண்களின் கைப்பக்குவத்தில் சமைக்கப்படும் உணவு வகைகளுக்கு ருசியிலும், தரத்திலும் ஈடுசெய்ய முடியாது. அத்தகைய பெண்கள் இணைந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்த உணவு பொருட்கள் மற்றும் உணவு வகைகளை அனைவரும் அறிந்திட வேண்டும் என்பதற்காக சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் உணவுத் திருவிழா அமைக்கப்பட்டுள்ளது. 

உணவுத் திருவிழாவில், 235க்கும் மேற்பட்ட உணவு வகைகளை உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!

மேலும், 12 அரங்குகளில் காஞ்சிபுரம் 20 வகையான முட்டை மிட்டாய்கள், கன்னியாகுமரி பலதரப்பட்ட சிப்ஸ் வகைகள், பெரம்பலூர் முத்து சோளம், நாமக்கல் புரதச் சத்து நிறைந்த முட்டை உணவுகள், ராமநாதபுரம் பனை மதிப்புக் கூட்டுப் பொருட்கள், நீலகிரி பாரம்பரிய தேநீர், சேலம் மளிகைப் பொருட்கள், சிவகங்கை செட்டிநாட்டுத் தின்பண்டங்கள், 90களில் (90s Kids) பிரசித்திப் பெற்ற 30 வகையான திருவள்ளூர் தின்பண்டங்கள் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. 

உணவுத் திருவிழா நடைபெறும் நாட்களில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு உணவு வகைகளின் தரத்தை மேம்படுத்துவது, சுகாதாரமான முறையில் பரிமாறுவது, விற்பனை நுணுக்கங்கள், சந்தைப்படுத்துதலில் உள்ள சவால்களை எவ்வாறு களைவது போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. 

சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (21.12.2025) திறந்து வைத்து பார்வையிட்டார். அரங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினரால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய, சைவ, அசைவ, சிறு தானிய உணவுப் பொருட்களை ருசி பார்த்து செய்முறை மற்றும் விற்பனை அனுபவம் குறித்து கலந்துரையாடினார். 

235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!

பின்னர் துணை முதலமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய உத்தரவிற்கிணங்க மகளிர் சுய உதவிக்குழுக்களின் சார்பாக பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று (21.12.2025) லிருந்து வருகின்ற 24-ந் தேதி வரை தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களுடைய மாவட்டங்களில் பிரபலமான உணவு வகைகளை சமைத்து விற்பனை செய்ய 50 கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 70 குழுக்களைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளார்கள். அடுத்த நான்கு நாட்களுக்கு பெசன்ட் நகர் கடற்கரையில் அரசின் சார்பாக இந்த உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு மெரினா கடற்கரையில் நம்முடைய துறை 5 நாட்களுக்கு உணவுத் திருவிழாவினை நடத்தியிருந்தது. அதில் எல்லா விதமான சைவம் மற்றும் அசைவ உணவுப் பொருட்கள் தரமாக சமைத்து பரிமாறப்பட்டது. உணவுத் திருவிழாவினை பார்வையிட வந்த பொதுமக்கள் சாப்பிடுவதற்கும், கைகழுவவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கடற்கரை உணவுத் திருவிழாவிற்கு வந்த நினைவுகள் நீங்காமல் இருக்க புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள செல்பி பாயிண்ட்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. 

சென்ற ஆண்டு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவிற்கு சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் தாங்கள் தயாரித்த உணவுப் பொருட்களை விற்பனை செய்திருந்தார்கள். 

235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!

கடந்த நவம்பர் மாதம் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் 62 இலட்சம் ரூபாய் அளவிற்கு உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

இன்று பெசன்ட் நகர் கடற்கரையில் துவக்கி வைத்திருக்கின்றோம். சுத்தமான முறையில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பரிசோதிக்கப்பட்டு, உணவுப் பொருட்கள் இங்கே வழங்கப்படுகின்றன. 

குறிப்பாக அரையாண்டுத் தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் இவற்றை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களின் சகோதரிகள் உணவுத் திருவிழா நடைபெறும் தேதிகளை முடிவு செய்தார்கள். இந்த உணவுத் திருவிழாவிற்கு சென்னையில் உள்ள பொதுமக்கள், உணவு பிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் எல்லோரும் வருகை தந்து, உணவு வகைகளை ருசித்து, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். 

 இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச்.ஹசன் மௌலானா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., வாழ்ந்து காட்டுவோம் திட்ட முதன்மை இயக்க அலுவலர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (தெற்கு) அஃதாப் ரசூல், மாமன்ற உறுப்பினர் திருமதி ம.ராதிகா, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

banner

Related Stories

Related Stories