
இந்திய அளவில் S.I.R, வாக்குத் திருட்டு, மாநிலங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி மறுப்பு உள்ளிட்ட வஞ்சிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டிச.1 அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக,நாடாளுமன்றக் கூட்டத்தில் தி.மு.க எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு:-
ஜிஎஸ்டி 2.0-இன் கீழ் முன்மொழியப்பட்ட ஜிஎஸ்டி திருத்தத்தினால் ஏற்படும் வருவாய் இழப்புகளுக்குத் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கே.ஆர். என் ராஜேஷ்குமார் கேட்டுள்ளார்.
அதில், சிறு வணிகங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக ஜிஎஸ்டி திருத்தங்களைச் செயல்படுத்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? சமீபத்திய ஜிஎஸ்டி திருத்தங்களின் பின்னணியில், தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குத் தடையற்ற கடன் மற்றும் நிதி உதவியை உறுதிசெய்யத் திட்டமிடப்பட்ட/எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்றும் அவர் கேட்டுள்ளார்.
பிரசவத்தில் தாய்-சேய் உயிரிழப்புகளை தடுக்கிறதா ஜனனி சுரக்ஷா திட்டம்?
பிரசவத்தில் ஏற்படும் தாய் சேய் உயிரிழப்புகளை தடுக்க நிதியுதவி செய்ய உருவாக்கப்பட்ட ஜனனி சுரக்ஷா யோஜனா (JSY) திட்டத்தின் கீழ் மாநில வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, வழங்கப்பட்ட நிதியின் விவரங்கள் என்ன?
கடந்த மூன்று ஆண்டுகளில் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட தொழில்நுட்ப உதவிகள் என்ன? தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்த பெண்களின் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் உட்பட எண்ணிக்கை என்ன? ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஆஷா பணியாளர்களின் பொறுப்புகள் குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை அரசாங்கம் எப்போது வெளியிடும்? எனும் பல்வேறு கேள்விகளை மாநிலங்களவையில் திமுக உறூப்பினர் ராஜாத்தி சல்மா கேட்டுள்ளார்.
பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துக!
கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் மொத்த உற்பத்தி அளவு, மற்றும் மத்திய முகமைகளால் குறைந்தபட்ச மானிய விலையில் (MSP) கொள்முதல் செய்யப்பட்ட அளவு ஆகிய விவரங்கள் கேட்டு திமுக மக்களவை உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன் கேள்வி எழுப்பினார்.
அதன் விவரங்கள்:
அதே காலகட்டத்தில், ஆண்டுவாரியாக இறக்குமதி செய்யப்பட்ட பயறு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய்களின் மொத்த அளவு மற்றும் மதிப்பு என்ன? இந்தியா பயறு வகைகளை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நாடாக இருந்தபோதிலும், பயறு வகைகளின் இறக்குமதி தொடர்ந்து அதிகமாக இருப்பதற்கான காரணங்கள் என்ன? பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், இறக்குமதியைக் குறைக்கவும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை?






