
இந்திய அளவில் S.I.R, வாக்குத் திருட்டு, மாநிலங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி மறுப்பு உள்ளிட்ட வஞ்சிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டிச.1 அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்று (டிச.16) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் தி.மு.க எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு,
பட்டியலின/பழங்குடியின மாணவர்களுக்கான விடுதி வசதிகளை மேம்படுத்துக!
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பட்டியலின/பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விடுதி வசதிகள் குறித்த விவரங்கள் கேட்டு திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கண்ட காலகட்டத்தில் விடுதிகள் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் தனித்தனியாக ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி விவரங்கள், மேற்கண்ட காலகட்டத்தில் அந்த விடுதிகளில் தங்கியுள்ள பட்டியலின/பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உபகரணங்களுக்கான மானியங்கள் குறித்த விவரங்கள்;

மேற்கண்ட காலகட்டத்தில் பட்டியலின/பழங்குடியின மாணவர்களுக்கான விடுதி வசதிகளின் தரம் ஆகியவற்றை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள், விடுதி வசதிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து புகார்கள் பெறப்பட்டுள்ளனவா, ஆம் எனில், அதன் விவரங்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து நெல் கொள்முதல்
திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி.
நெல் விவசாயிகளில் 17% பேர் மட்டுமே குறைந்தபட்ச மானிய விலை (MSP) கொள்முதல் மூலம் பயனடைகிறார்களா என்றும் இதுவரை பயனடைந்த விவசாயிகளின் விவரங்கள் குறித்தும் திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
2024-25 காரிஃப் பருவத்தில் (KMS) நெல் கொள்முதல் செய்யப்பட்ட 74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்கப்படதாது ஏன் ? பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மாறிவரும் வானிலை முறைகளைக் கருத்தில் கொண்டு, நெல்லில் உள்ள ஈரப்பதத்தின் அளவுக்கான தர நிர்ணய விதிகளைத் தளர்த்தாதது ஏன்? கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் விவரங்கள் என்ன? எனும் கேள்விகளுக்கும் அவர் பதில் வேண்டியுள்ளார்.






