அரசியல்

“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!

ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி சமூகங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஒன்றிய அரசால் இழைக்கப்படும் அநீதிகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் பி.வில்சன் எம்.பி உரை.

“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்திய அளவில் S.I.R, வாக்குத் திருட்டு, மாநிலங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி மறுப்பு உள்ளிட்ட வஞ்சிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டிச.1 அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, இன்று (டிச.16) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில், ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி சமூகங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஒன்றிய அரசால் இழைக்கப்படும் அநீதிகள் குறித்து பி.வில்சன் எம்.பி ஆற்றிய உரை பின்வருமாறு,

எட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. எட்டு ஒன்றிய நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன.. வாழ்க்கைச் செலவு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. பணவீக்கமானது ரூபாயின் மதிப்பை சிதைத்துவிட்டதோடு, பொருளாதார சூழ்நிலைகள் வியத்தகு அளவில் மாறிவிட்டன.

இருப்பினும் ஓபிசி கிரீமி லேயரைத் தீர்மானிப்பதற்கான வருமான உச்ச வரம்பு ஆண்டுக்கு எட்டு இலட்சம் என்கிற அளவிலேயே இருக்கிறது. 2017 ஆம் ஆண்டில் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.3,000 ஆக இருந்தபோது இந்த வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தங்கத்தின் இன்றைய மதிப்போ ஒரு கிராமுக்கு ரூ.12,000 எனும் அளவில் 400% அதிகரித்துள்ளது.

கிரீமி லேயர் உச்சவரம்பானது ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மாற்றியமைக்கப்பட வேண்டும். அந்த வகையில் இரண்டு முறை செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் செய்யப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு விட்டது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமானது இந்த உச்சவரம்பை உயர்த்திட பரிந்துரைத்த நிலையிலும், ஒன்றிய அரசாங்கமானது அதனை ஏற்றுக்கொள்ளாமல் புறந்தள்ளிவிட்டது.

“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!

ஒரு விண்ணப்பதாரரின் குடும்ப வருமானத்தைக் கணக்கிடும் போது, ஊதியத்தையும் சேர்த்துக் கணக்கிடும் ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் நடைமுறை பாகுபாடானதாகும்.

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இந்தச் சட்டவிரோத நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி யூபிஎஸ்சி அமைப்பும் இதையே செய்கிறது.

இத்தகைய நடைமுறைகள், சம்பள வருமானமும் விவசாய வருமானமும் கிரீமி லேயர் கணக்கீட்டில் சேர்க்கப்படக் கூடாது என்று தெளிவாகக் கூறும் 1993 ஆம் ஆண்டின் அலுவலகக் குறிப்பாணைக்கு முற்றிலும் எதிரானவை.

இதன் காரணமக, UPSC தேர்வுகள் மூலம் நடைபெறும் நியமனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை பெற முயற்சிக்கும் விண்ணப்பதாரர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

அரசாங்கமானது தனது கடமையை சரிவர செய்யாத நிலையில், விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்படுவது கவலைக்குரியதாகும். கிரீமி லேயர் முறை சீரமைப்பதற்கான நாடாளுமன்றக்குழுவானது, 2019 ஆம் ஆண்டு அளித்த அறிக்கையில் இந்த நடைமுறையை கடுமையாக கண்டித்ததுடன், உடனடியாக அதை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத்தகைய சட்டவிரோதமான நடவடிக்கையினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. எட்டு ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படாத இந்த வரம்பு மற்றும் சட்டவிரோத நடைமுறையினால் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள OBC பேராசிரியர் பணியிடங்களில் சுமார் 80% காலியாகவே உள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட்ட 2537 பேராசிரியர் பணியிடங்களில், 423 பணியிடங்கள் (16.67%) மட்டுமே OBC சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படியானால், அரசியலமைப்புச் சட்டப்படி கட்டாயமாக வழங்கப்பட வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது?

21 IIT மற்றும் 13 IIM-களில் இருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில்களின் படி, 21 IIT களில், வெறும் 11.2% பேராசிரியர்கள் மட்டுமே ஓபிசி சமூகத்தைச் சார்ந்தவர்கள். அதே போன்று 6% பேர் எஸ்.சி. சமூகத்தையும், 1.6% பேர் எஸ்.டி.சமூகத்தையும் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

13 IIM-களில், இந்த விகிதம் இன்னும் குறைவாக இருக்கிறது. வெறும் 9.6% பேராசிரியர்கள் ஓபிசி வகுப்பைச் சார்ந்தவர்களாகவும், 5% பேர் எஸ்.சி வகுப்பைச் சார்ந்தவர்களாகவும், 1% பேர் எஸ்.டி வகுப்பைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!

ஏறத்தாழ 2 IIT-களிலும் 3 IIM-களிலும், பேராசிரியர் பணியிடங்களில் 90%-க்கும் அதிகமானவை பொதுப் பிரிவினர் வசமே உள்ளது. 8 IIT க்கள் மற்றும் 7 IIM களில் 80% அதிகமான பேராசியர்கள் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இது IIM கல்வி நிறுவனமா அல்லது பொதுப்பிரிவினருக்கான பிரத்யேக மையமா என்ற கேள்வி எழுகிறது. ஒன்றிய அரசின் பணியாளர் நியமன முறையில் இந்த உச்சவரம்பின் தாக்கம் தெளிவாகத் தெரிகிறது.

தற்போதைய குரூப் A அதிகாரிகளில் 18.07% மட்டுமே OBC வகுப்பைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். ஒன்றிய அரசின் முக்கியமான 90 உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளில், OBC சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று பேர் மட்டுமே உள்ளனர்; அவர்களுக்கும் கூட ஒப்பீட்டளவில் குறைந்த முக்கியத்துவம் கொண்ட துறைகளே ஒதுக்கப்பட்டுள்ளன.

பணியாளர் நியமன திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் பணியாற்றும் 322 அதிகாரிகளில், 16 பேர் எஸ்.சி வகுப்பையும்,, 13 பேர் எஸ்.டி வகுப்பையும், 39 பேர் ஓபிசி வகுப்பையும் சார்ந்தவர்கள்.. மாறாக 254 பேர் உயர் சாதியினரைச் சேர்ந்தவர்கள்.

இப்படியான சூழ்நிலையில், ஒன்றிய அரசின் பணிகளுடைய நேர்முகத்தேர்வுகளின் போது, சரியான நபர் காணப்படவில்லை என்ற பதத்தை பயன்படுத்தியோ அல்லது முறைகேடான ரோஸ்டர் முறையின் வழியாகவோ, SC / ST / OBC வகுப்பைச் சார்ந்தவர்கள் அடிக்கடி திட்டமிட்டு நிராகரிக்கப்படுகின்றனர்.

இதுதான் சமூக நீதியா?

இந்தியா என்பது திறமையை மதிக்கும் நாடு என்று சொல்லப்படுகிறது. ஆனால் OBC, SC, ST வகுப்பை சார்ந்தவர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தருணத்திலேயே அந்த ‘திறமை’ என்ற அளவுகோல் செயலிழந்துவிடுவது போலவே தெரிகிறது.

2014 முதல் ஒவ்வொரு விஷயத்திற்கும் கால நீட்டிப்பு செய்யப்படுவதைத் தவிர SC/ST/OBC சமூகத்தின் நலன்களுக்காக எந்தவொரு சட்டமும் இயற்றப்படவில்லை.

எனவே, அரசியலமைப்பு திருத்தங்களின் மூலம் ஓபிசி கிரீமி லேயரைத் தீர்மானிப்பதற்கான வருமான உச்சவரம்பினை உயர்த்திடவும், கிரீமி லேயர் கணக்கீட்டில் உள்ள பாகுபாடான நடைமுறைகளை நீக்கவும், காலியாக உள்ள பணியிடங்களை ஒதுக்கீட்டின் அடிப்படையில் உடனடியாக நிரப்பவும், OBC, SC, மற்றும் ST சமூகத்தின் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்றார்போல இடஒதுக்கீட்டை உயர்த்திடவும், மாண்புமிகு பிரதமர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories