
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (16.12.2025) சென்னையில், விளையாட்டு வீரர் மேம்பாடு, பயிற்சி முறைகள், விளையாட்டு அறிவியல், விளையாட்டு ஊட்டச்சத்து, உளவியல், விளையாட்டு உலகில் செயற்கை நுண்ணறிவு, பயிற்சி மற்றும் உயர் செயல்திறன் சூழலியல்;
விளையாட்டுப் பகுப்பாய்வு, 2036 ஒலிம்பிக் தொலைநோக்குத் திட்டம், விளையாட்டு மருத்துவம் உள்ளிட்டவை குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் முன்னணி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 ஐ தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அனைத்து விளையாட்டு விடுதி வீரர், வீராங்கனைகளுக்கான பயிற்சி, உடல்திறன், நல்வாழ்வு தரவுகளைக் கொண்டு செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் திட்டமிடுவதை அடிப்படையாக கொண்ட அத்லெட் மேலாண்மை அமைப்பையும் (ATHLETE MANAGEMENT SYSTEM) தமிழ்நாடு துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து விழா மேடையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “விளையாட்டுத்துறையை பொறுத்தவரைக்கும் முக்கியம் வாய்ந்த பல்வேறு நடவடிக்கைகளை நம்முடைய அரசு சார்பில் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து எடுத்து வருகின்றோம்.

CM trophy tournament மூலமாக கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டுத்துறை திறமையாளர்கள், முக்கியமாக மாற்றுத்திறன் வீரர்களையும் நாம் தொடர்ந்து அடையாளம் கண்டு வருகின்றோம்.
எப்படி சர்வதேச போட்டிகளை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடத்தி வருகின்றமோ, அதே மாதிரி, பல சர்வதேச போட்டிகளில் இன்றைக்கு தமிழ்நாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறார்கள், சாதனைகளை படைத்து வருகிறார்கள்.
நேற்றைக்கு Squash World Cupல் இந்திய அணியில் வெற்றி பெற்ற வீரர்கள் நான்கு பேரில், மூன்று பேர் நம்முடைய தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள், அவர்கள் அத்தனைபேரையும் உடனடியாக முதலமைச்சர் அழைத்து பாராட்டியிருக்கிறார்கள்.
அதே போல, உலக கோப்பை கேரம் போட்டியில், சென்னையைச் சேர்ந்த தங்கைகள் கீர்த்தனா, காசிமா, மித்ரா ஆகியோர் தொடர்ந்து பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள். சாதனைகளை படைத்து வருகிறார்கள்.
அதே போல, விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குகின்ற விளையாட்டு வீரர்களுக்கு, Sports Quota-வில் 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் மூலம், உடனடியாக அரசு வேலைகளையும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ வழங்குகின்றோம்” என்றார்.






