
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (6.12.2025) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 74 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவியர்களுக்கான 2 சமூகநீதி விடுதிக் கட்டடங்கள், 21 பள்ளிகளுக்கான கூடுதல் கட்டடங்கள் மற்றும் 25 கிராம அறிவுசார் மையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், 10 கிராம ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்கத்திற்கான கிராம ஊராட்சி விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட மானியம், என மொத்தம் 265.50 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 9371 பயனாளிகளுக்கு வழங்கினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தல்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், திருச்சிராப்பள்ளி – ராஜா காலனி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் 25.13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவியர்களுக்கான 2 சமூகநீதி விடுதிக் கட்டடங்கள்;
விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, அரியலூர், கரூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர் மயிலாடுதுறை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 21 பள்ளிகளுக்கு 25.63 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் இதர கூடுதல் கட்டடங்கள்;
விழுப்புரம், தூத்துக்குடி, விருதுநகர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், கரூர், தருமபுரி, சேலம், திருவள்ளூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 23.44 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 25 கிராம அறிவு சார் மையங்கள்;
என மொத்தம் 74.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதியுதவி
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டமானது, நலத்திட்டங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் பன்முக ஆதரவு கட்டமைப்பு மூலம் தீவிர வறுமையில் வாடும் குடும்பங்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டதாகும். இத்திட்டத்தின் மூலம் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, அக்குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி, தொழில் கடன், வங்கிக் கடன், சுயஉதவிக் குழுக்களில் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட பயனாளிகளுக்கு அவர்களின் தேவைகளின் அடிப்படையில் முதற்கட்டமாக 1,00,000 பயனாளிகளுக்கு நலிவு நிலை குறைப்பு நிதியாக ரூ.75 கோடி வழங்கப்படுகிறது.
அதன்படி, முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் 505 பயனாளிகளுக்கு அவர்களின் தேவையின் அடிப்படையிலான திட்ட பயன்கள் மற்றும் நலிவு நிலை குறைப்பு நிதியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
10 கிராம ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க கிராம ஊராட்சி விருது
சாதி வேறுபாடின்றி சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து சமூக நல்லிணக்க கிராம ஊராட்சி விருதுகளையும், அதன் வளர்ச்சி பணிக்காக தலா ரூ.1 கோடி வழங்கும் திட்டத்தின் கீழ், 2025 – 26 ஆம் நிதியாண்டில் இராமநாதபுரம் மாவட்டம் - மேலமடை, விழுப்புரம் மாவட்டம் - பரையந்தாங்கல், தென்காசி மாவட்டம் - கே.ஆலங்குளம், கலிங்கப்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம் - சூரியனார்கோவில் மற்றும் வெங்கடசமுத்திரம், சேலம் மாவட்டம் - மணிவிழுந்தான், செங்கல்பட்டு மாவட்டம் - மண்ணிவாக்கம், கோயம்புத்தூர் மாவட்டம் - ஒட்டர்பாளையம், நாகப்பட்டினம் மாவட்டம்- தேவூர் ஆகிய 10 கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்கிராம ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க விருதுகள் மற்றும் வளர்ச்சிப் பணிக்காக 10 கோடி ரூபாய் நிதியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இதர அரசு நலத்திட்ட உதவிகள்
நரிக்குறவர் சமூகத்தினருக்கு கோட்டூர்புரத்தில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான குடியிருப்புகளுக்கான ஆணைகளை 121 பயனாளிகளுக்கும்;
1.50 கோடி ரூபாய் மதிப்பிலான டாக்டர் அம்பேத்கர் பாடசாலை கட்டுமானப் பணிக்கான பணி ஆணை;
விளிம்பு நிதி மற்றும் நிதி உதவி (Margin Money cum Financial Assistance (MCF) scheme) திட்டத்தின் கீழ் கோயம்பேடு காய்கறி சந்தையில் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வணிக வளாகத்தில் 22 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு;
இருளர் சமூகத்தினரின் வாழ்வாதாரத்திற்காக, 87 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கொச்சி - தேசிய மீன் மரபணு வளங்கள் அலுவலகத்துடன் (National Bureau of Fish Genetic Resources- Kochi) இணைந்து 105 பயனாளிகள் பயன்பெறும் வகையில் பழவேற்காட்டில் நண்டு வளர்ப்பு மற்றும் அலங்கார மீன் வளர்ப்புப் பிரிவுகள்;
இருளர் இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 4 மாவட்டங்களில் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் ஆடு மற்றும் கோழி வளர்ப்பு போன்ற திட்டங்களில் 1.77 கோடி ரூபாய் மதிப்பில் 105 இருளர் குடும்பங்களுக்கு உதவிகள்;
புதிரை வண்ணார் சமூக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் திருமங்கலத்தில் 15 பயனாளிகளுக்கு 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இயந்திரமயமாக்கப்பட்ட சலவை நிலையங்கள் (Mechanized laundromax);
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மீனவப் பெண்கள், சிறு வியாபாரிகள் மற்றும் திருநங்கைகள் பயன்பெறும் வகையில் உறுதுணை சிறு கடன் திட்டம் மூலம் 582 பயனாளிகளுக்கு 3.79 கோடி ரூபாய் கடனுதவியும், 2.05 கோடி ரூபாய் மானியமும், என மொத்தம் 5.84 கோடி ரூபாய் மானியத்துடன் கூடிய கடனுதவிகள்;
முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு (CM-ARISE) திட்டத்தின் கீழ் 1336 பயனாளிகளுக்கு 73 கோடி ரூபாய் மானியம்;
ஒன்றிய அரசு நிதியுதவி திட்டத்தின் கீழ் 5516 ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 60 கோடி ரூபாய் தொழில்களுக்கான மானியம்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றி அவர்களின் சமூகநிலையினை உயர்த்திடும் நோக்குடன், பெண்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்பட்டு வரும், நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தின் கீழ் 18 பயனாளிகளுக்கு 1.91 கோடி ரூபாய் மானியம்;
இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன்களை மேம்படுத்திட 50 மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய நேரடி பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள்;
அரசு சட்டக் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், சிறந்த சட்ட நிறுவனங்கள், மூத்த வழக்கறிஞர்கள் அல்லது மாண்பமை உயர்நீதிமன்ற நீதியரசர்களிடம் பயிற்சி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கான பயிற்சி உதவித்தொகை திட்டத்தின்கீழ் 1000 மாணவர்களுக்கு 1 கோடி ரூபாய் உதவித்தொகை;
வெளிநாடுகளில் சிறந்த பல்கலைக்கழகங்களில் முதுகலை மற்றும் முனைவர் படிப்பைப் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம் திருநங்கைக்கு 36 இலட்சம் ரூபாய் உதவித்தொகை;
பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழில்நுட்ப படிப்புகளில் 60 விழுக்காடு அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்களது வேலைவாய்ப்பு திறன்களை வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் 17 மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் திறன் பயிற்சிக்கான பண உறுதி ஆவணங்கள் (Skill Voucher);
பட்டியலின மற்றும் பழங்குடியினரை தொழில்முனைவோர்களாக உருவாக்கிடும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 28 பயனாளிகளுக்கு 2 கோடி ரூபாய் மூலதன மானியம்;
என மொத்தம் ரூ.265.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 9371 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று வழங்கினார்.
இவ்விழா நடைபெறும் இதே நாளில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.






