
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (6.12.2025) ‘டித்வா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு, நெருக்கடியில் சிக்கித் தவித்து இன்னலுறும் இலங்கை வாழ் மக்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் உதவிடும் வகையில் சென்னை துறைமுகத்திலிருந்து 650 மெட்ரிக் டன்னும், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 300 மெட்ரிக் டன்னும், என மொத்தம் 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் மூலம் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில், தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களின் மாதிரி தொகுப்பினை இலங்கை துணைத் தூதர் டாக்டர்.கணேசநாதன் கீதீஸ்வரன் அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
‘டித்வா’ புயல் பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைவாழ் மக்களுக்கு உதவக்கூடிய வகையில், சென்னை துறைமுகத்திலிருந்து 300 மெட்ரிக் டன் சர்க்கரை, 300 மெட்ரிக் டன் பருப்பு, 25 மெட்ரிக் டன் பால்பவுடர்,
25 மெட்ரிக் டன் கொண்ட 5000 வேட்டிகள், 5000 சேலைகள், 10,000 துண்டுகள், 10,000 போர்வைகள் மற்றும் 1000 தார்பாலீன்கள் ஆகிய நிவாரணப் பொருட்களையும் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 150 மெட்ரின் டன் சர்க்கரை, 150 மெட்ரிக் டன் பருப்பு உள்ளடக்கிய நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இப்பணிகள் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், கைத்தறி துறை மற்றும் வேளாண்மை-உழவர் நலத்துறை ஆகிய துறைகள் மூலம் ஒருங்கிணைந்து சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டது.






