
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மருத்துவமனையில், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ’நிமிர்ந்து நட’ என்ற பெயரில் விழுப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் வளைவான முதுகெலும்பு குறைபாடுகளை அறுவை சிகிச்சை மூலம் சீர் செய்யப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து ரூ.12 கோடி மதிப்பிலான MRI கருவி மற்றும் ரூ. 35.95 லட்சம் மதிப்பிலான முழுமையான தானியங்கி புற ரத்தக்குழாய் நோய் அறிதல் கருவிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம் ”ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞருக்கு வெற்றிகரமாக கை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளர்கள் வெற்றிகரமாக முதுகெலும்பு குறைபாடு குறித்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரூ.12 கோடி மதிப்பிலான எம்ஆர்ஐ கருவியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம்.இந்த கருவியின் மூலம் ஒவ்வொரு நாளும் 40 பயனாளிகள் பயன் பெற இயலும்.
இது மட்டுமின்றி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இந்த மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் சக்கர நாற்காலி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ பயனாளர்களுக்கு தனியார் மருத்துவமனையில் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க மறுத்தால்,இது தொடர்பாக புகார் அளிக்கும் பட்சத்தில் உரிய மருத்துவமனைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.




