மு.க.ஸ்டாலின்

“கலைஞரை ரோல்மாடலாக எடுத்து செயல்பட வேண்டும்” : மாற்றுத்திறனாளிகள் விழாவில் முதலமைச்சர் பேச்சு !

மாற்றுத்திறனாளி தோழர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கி, சம உரிமையுடன் சமுதாயத்தில் வாழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதை நினைவுறுத்தக்கூடிய நாள் தான் இந்த நாள்!

“கலைஞரை ரோல்மாடலாக எடுத்து செயல்பட வேண்டும்” : மாற்றுத்திறனாளிகள் விழாவில் முதலமைச்சர் பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (3.12.2025) சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், உலக மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு:-

என்ன பேசுவது என்ற ஒரு உணர்ச்சிமயமான உணர்வுக்கு சென்று அப்படியே உங்களை எல்லாம் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்ற நிலையில் நான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். 

இங்கே திருமதி ரோகினி அவர்கள் பேசுகின்றபோது குறிப்பிட்டுச் சொன்னார்கள்; இது ஒரு உணர்ச்சிகரமான நிகழ்ச்சி; நெகிழ்ச்சியான நிகழ்ச்சி என்று சொன்னார், உண்மை தான். அந்த உணர்வோடு தான் நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறேன்.

இங்கே வந்திருக்கக்கூடிய, அதேபோல இந்த நிகழ்வை தொலைக்காட்சியின் மூலமாக நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய அத்தனை மாற்றுத் திறனாளி சகோதர - சகோதரிகளுக்கும் முதலில் என்னுடைய இதயபூர்வமான “மாற்றுத்திறனாளிகள் நாள்” வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

இந்த நாள், மற்ற நாட்களைப் போல் இல்லாமல், இது வெறும் கொண்டாட்டத்திற்கான நாள் மட்டும் கிடையாது;  நம்முடைய திராவிட மாடல் அரசை பொறுத்தவரைக்கும், மாற்றுத் திறனாளி தோழர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கி, சம உரிமையுடன் சமுதாயத்தில் வாழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதை நினைவுறுத்தக்கூடிய  நாள் தான் இந்த நாள்! 

“கலைஞரை ரோல்மாடலாக எடுத்து செயல்பட வேண்டும்” : மாற்றுத்திறனாளிகள் விழாவில் முதலமைச்சர் பேச்சு !

அந்த வகையில், உங்களின் திறன்களை போற்றும் நாளாக இந்த நாளை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்! அதிலும் “சமூக  முன்னேற்றம் காண மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய சமூகங்களை வளர்ப்பது!” என்பதை, இந்த ஆண்டிற்கான மையக் கருவாக - ஐ.நா. சபை அறிவித்திருக்கிறது! இந்தக் கருப்பொருள்தான் நம்முடைய திராவிட மாடல் அரசு நடைபோட்டுக் கொண்டிருக்கக்கூடிய பாதை! அதில் முக்கியமான மைல் கல்தான் இந்த விழா! 

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மதிப்பிற்குரிய திருமதி ரோகினி அவர்களை ஏன் அழைத்தோம்? என்று சிலர் கேட்கலாம். சமூக சேவையை சிலர் திடீரென்று வெளிப்படுத்துவார்கள்; திடீரென்று காணாமல் போய்விடுவார்கள். ஆனால், பல ஆண்டுகளாக தொடர்ந்து சமூகத்திற்கு செயல்பட்டு வரக்கூடியவர் தான் திருமதி ரோகினி அவர்கள். அதுதான் அவருடைய தனித் தன்மை. கம்யூனிச சிந்தனைகளை பரப்பக்கூடிய திருமதி ரோகினி அவர்களை திரைக் கலைஞர் என்று சொல்வதைவிட சமூக கலைஞர் என்று தான் சொல்ல வேண்டும். அவரது பணி சிறக்க வாழ்த்துகள்! அழைப்பை ஏற்று வந்தமைக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மாற்றுத்திறனாளிகள் இந்த சமுதாயத்தில் முழுமையாக ‘சார்ஜ்’ எடுத்துக்கொள்ளும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை நாம் செய்து கொண்டு வருகிறோம். அதன் உயிர் அடையாளமாக நீங்கள் இருக்கிறீர்கள். தமிழ்நாட்டு உள்ளாட்சி அமைப்புகளில், புதிய மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டிருக்கும் 3 ஆயிரத்து 631  மாற்றுத் திறனாளி சகோதர - சகோதரிகளை வருக! வருக! வருக! என்று நான் வரவேற்கிறேன். 

இப்போது நகர்ப்புறத்தில், 9 மாவட்ட கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நியமித்திருக்கிறோம். அடுத்து,  மீதமுள்ள உள்ளாட்சி அமைப்புகள் அமையும்போது இன்னும் 9 ஆயிரத்திற்கும் மேல் அதிகாரம் பெற இருக்கிறீர்கள். இதுதான் திராவிட மாடல். 

“கலைஞரை ரோல்மாடலாக எடுத்து செயல்பட வேண்டும்” : மாற்றுத்திறனாளிகள் விழாவில் முதலமைச்சர் பேச்சு !

நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ நாட்கள் வந்து செல்கிறது, அதில் சில நாட்களை நம்மால் ஒருபோதும் மறக்க முடியாது; இன்னும் சில நாட்களை வரலாறும் மறக்காது. அப்படிப்பட்ட முத்திரை பதிக்கும் திருநாள் தான், இந்த பெருநாள்தான், இன்றைய நாள்! 

சமத்துவத்தையும் - சமூகநீதியையும் உயிர்மூச்சாக நினைத்து முன்னேற்றப் பாதையில் நடைபோடும் நம்முடைய தமிழ்ச் சமூகம் பெருமை கொள்ளும் நாள், இந்த நாள்! 

கடந்த ஏப்ரல் மாதம், இந்த முன்னெடுப்பிற்கான அறிவிப்பை சட்ட முன்வடிவாக தாக்கல் செய்த மறுநாள் - சகோதரர் பேராசிரியர் தீபக்நாதன் அவர்களும் - மற்ற மாற்றுத்திறனாளி தோழர்களும் வந்து, என்னை சந்தித்தார்கள்; சந்தித்தபோது ஆரத்தழுவிக் கொண்டபோது, அதுதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விருதாக நான் நினைத்தேன். அதனால்தான் சொல்கிறேன், டிசம்பர் 3-ஆம் நாளை, உலக மாற்றுத் திறனாளிகள் நாளாக அறிவித்து கொண்டாடும் ஐ.நா. அமைப்பு கூட இந்த நிகழ்ச்சியைப் பார்த்து பெருமைப்படும்! 

சாதி - மதம் - இனம் - மொழி – பாலினம் என்று ஏராளமான வேறுபாடுகளும், பாகுபாடுகளும், தீண்டாமைகளும், நிறைந்திருந்த இந்தியச் சமூகத்தில், இதையெல்லாம் களையப்பட வேண்டும் “நாம் அனைவரும் சமம்! எல்லோருக்கும் சம உரிமை இருக்கிறது” என்று மக்களின் உரிமைக்குரலாக உருவான இயக்கம்தான் திராவிட இயக்கம்!  பிற்போக்குத்தனங்கள் இறுகிப் போயிருந்த காலகட்டத்தில், பேச்சாலும், எழுத்தாலும் அறிவுச் சிந்தனையை விதைத்து, நாம் கொண்டு வந்திருக்கும் மாற்றம் மிகப்பெரியது! 

பெரும்பாலான மக்கள் சமூகத் தீண்டாமையை கைவிட்டு முற்போக்குப் பாதையில் நடைபோட ஆரம்பித்துவிட்டார்கள். இதுதான், இந்திய நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டை வேறுபடுத்தி காட்டுகிறது! இப்படிப்பட்ட நம்முடைய மரபில், நாம் இன்றைக்கு தொடங்கும் பயணம், மிக, மிக, மிக முக்கியமானது! 

கடந்த காலங்களில், மாற்றுத்திறனாளிகளை எப்படியெல்லாம் புறக்கணித்தார்கள்; எப்படிப்பட்ட “இன்-சென்சிட்டிவ்”-ஆன சொற்களைப் பயன்படுத்தினார்கள். வலி மிகுந்த வரலாற்றை நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஏனென்றால், இது புது வரலாற்றைப் படைக்கக்கூடிய நேரம் வந்தாகிவிட்டது! புது வரலாற்றை அரசு மட்டுமல்ல, அரசுடன் சேர்ந்து நீங்களும் படைக்கப் போகிறீர்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் “மாற்றுத்திறனாளிகள்” என்ற சொல்லை உண்மையான உள்ளன்போடு அறிமுகப்படுத்தினார். அவர் ஆட்சிக் காலத்தில்தான், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென தலைமைச் செயலக அளவிலும், துறைத் தலைமை அளவிலும், இந்தியாவிலேயே தனித்துறையைக் கொண்ட தனிச் சிறப்பை தமிழ்நாடு பெற்றது. 

“கலைஞரை ரோல்மாடலாக எடுத்து செயல்பட வேண்டும்” : மாற்றுத்திறனாளிகள் விழாவில் முதலமைச்சர் பேச்சு !

மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், கள அலுவலகங்களை இந்த துறை பெற்றிருக்கிறது என்றால், அதற்கு அடித்தளம் அமைத்தது முத்தமிழறிஞர் முதலைமைச்சர் கலைஞர் அவர்கள் தான்! இதே வழியில், நம்முடைய திராவிட மாடல் அரசும்  செயல்பட்டு வருவது உங்களுக்குத் தெரியும். மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல; அவர்களின் ‘உரிமை’ என்பதை உணர்ந்து இன்றைக்கு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது! அப்படி செயல்பட்டு வரக்கூடிய சில திட்டங்களையும், முன்னெடுப்புகளையும் பட்டியலிட்டு சொல்ல வேண்டும் என்றால், 

  • மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாடு காண அரசுத் துறைகளில் உகந்த பணியிடங்கள் கண்டறியப்பட்டு,
    4 விழுக்காடு இடஒதுக்கீடு முறையில் வாய்ப்புகள் வழங்க உத்தரவிட்டிருக்கிறோம்.

  • இதேபோல், தனியார் துறைகளிலும் பணியமர்த்த, மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும், சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

  • தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஒவ்வொரு நிதியாண்டிலும் நிதி ஒதுக்கீட்டை உயர்த்திக்கொண்டே வருகிறோம். 2021-2022-ஆம் நிதியாண்டில், 813 கோடியே 63 இலட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்தோம். 2025-2026-ஆம் நிதியாண்டில் ஆயிரத்து 432 கோடியே 77 இலட்சம் ரூபாயாக உயர்த்தி இருக்கிறோம்.

  • மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மட்டுமே இதுவரை 60-க்கும் மேற்பட்ட அரசாணைகளை பிறப்பித்திருக்கிறோம்.

  • பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 2 இலட்சத்து 11 ஆயிரத்து 391 பயனாளிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் என்று உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

  • பள்ளிகள், மறுவாழ்வு இல்லங்கள் சீரமைப்புக்கு 2 கோடி ரூபாய் நிதி தரப்பட்டிருக்கிறது.

  • ஒன்றரை கோடி ரூபாய் செலவில், கூடுதலாக ஒரு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வடசென்னையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

  • சுயதொழில் கடனுதவித் திட்டம் மூலம் அளிக்கப்படும் 25 ஆயிரம் ரூபாயை அறிவுசார் குறைபாடுடையோர், புறஉலக சிந்தனையற்றோர், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கும் 15 ஆயிரம் ரூபாய் என்று நீட்டித்து ஆணை வெளியிட்டிருக்கிறோம்.

  • மாநிலம் முழுவதும் உள்ள 62 விளையாட்டு அரங்கங்களில் தடையற்ற சூழல் அமைய 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 

  • முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக திருப்பூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில்
    3 சிறப்பு இல்லங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

“கலைஞரை ரோல்மாடலாக எடுத்து செயல்பட வேண்டும்” : மாற்றுத்திறனாளிகள் விழாவில் முதலமைச்சர் பேச்சு !
  • 22 அரசுப் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கு நிதி உதவி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. 

  • அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் கூட்டம் நடைபெறுகின்ற போதும் - முக்கிய நிகழ்வுகளின் போதும் செவித்திறன் பாதிக்கப்பட்டோர் பயன்பெறும் வகையில் சைகை மொழிபெயர்ப்பாளர் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.

  • மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

  • மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி, 22 ஆயிரத்து 300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மாவட்டங்களுக்கு நிதி வழங்கப்பட்டிருக்கிறது. 

  • அரசு போட்டித்தேர்வுகளில் கலந்துகொள்ள மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க,  ஆண்டுதோறும் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியோடு கூடிய சிறப்புபயிற்சி வகுப்புகள், முதற்கட்டமாக - சென்னையில் குரூப்–2, 2A தேர்வு எழுத உள்ளவர்களில் பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்த, 49 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டிருக்கிறது. 

  • அரசு மற்றும் பொதுக்கட்டடங்களை மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில், தடையற்ற சூழல் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சாய்வுதளப் பாதை, மின்தூக்கி அமைத்தல், கழிவறை அமைத்தல், பார்வைத்திறன் குறையுடையோர் எளிதில் செல்வதற்காக ‘டேக்டைல்’ தரைப்பகுதி, பிரெய்லி எழுத்துகள் கொண்ட தகவல் பலகை பொருத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பல்வேறு அரசு துறைகளின் கட்டடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. 

  • ஒருவரும் விடுபடுதல் கூடாது என்ற நோக்கில் மாற்றுத்திறனாளிகள் இருப்பிடத்திற்கே சென்று, அவர்களின் மறுவாழ்வு சிகிக்சைக்கான பயிற்சி; மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில், உபகரணங்களை தெரிவு செய்துகொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி, 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து இப்போது தன்னிறைவு நிலையை அடையும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  இப்படி எத்தனையோ திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தக்கூடிய அரசு தான் உங்களுடைய திராவிட மாடல் அரசு என்பதை நான் பெருமையோடு குறிப்பிடுகிறேன். 

இந்த வரிசையில் தான் மாற்றுத் திறனாளிகளின் அரசியல், சமூக உரிமையை நிலைநாட்டும் வகையில் முக்கியமான ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தோம். இங்கே பேசுகின்ற போது, எல்லோரும் சொன்னார்களே, உங்களுக்கான கோரிக்கையை நீங்களே ஒலிக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு மாற்றுத் திறனாளி உறுப்பினர் இடம் பெறுவார் என்ற மாபெரும் சமூகநீதி உரிமையை வழங்கியிருக்கிறோம். அந்த அடிப்படையில், உங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கியிருக்கிறோம்! 

ஊராட்சி அமைப்புகள் - ஒன்றிய அமைப்புகள் - மாவட்ட அமைப்புகளில் இன்றைக்கு நீங்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பதன் மூலமாக, சமூகத்தில் மக்களாட்சிக்கான உண்மையான பொருளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்! இனிமேல், நீங்கள், அரசு கொண்டு வரும் திட்டங்களின் பயனாளிகள் மட்டுமல்ல, அரசின் திட்டங்களில் உங்கள் குரலை பதிவுசெய்யப்போகும் மக்கள் பிரதிநிதிகள்! மனுக்களை அளிக்க போகிறவர்கள் இல்லை நீங்கள்; மனுக்களை பெற்று தீர்வுகாணப் போகின்றவர்கள் நீங்கள்! 

நம்மைப் பொறுத்தவரைக்கும், நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் - எழுதும் ஒவ்வொரு எழுத்தும் - செய்யும் ஒவ்வொரு செயலும் - மாற்றத்தை உண்டாக்க வேண்டும்! மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்க வேண்டும்! அதனால்தான் திருநர்கள் - மாற்றுத் திறனாளிகள் போன்ற சொற்களை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறோம்! இந்த சொற்களின் பயன்பாடு, சமூகத்திற்கு ஒரு உளவியல் மாற்றத்தை ஏற்படுத்தும்! ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். 

“கலைஞரை ரோல்மாடலாக எடுத்து செயல்பட வேண்டும்” : மாற்றுத்திறனாளிகள் விழாவில் முதலமைச்சர் பேச்சு !

திட்டங்களை உருவாக்குவதும், உதவித்தொகைகள் வழங்குவதும் எவ்வளவு முக்கியமோ - அதே அளவுக்கு சமூகத்தின் மனமாற்றமும் முக்கியம்!  அந்த மனமாற்றத்தை நோக்கி நடைபோட இனிமேல் நீங்கள் ஆற்றப் போகும் பணிகள் முக்கியமானதாக இருக்கும்! ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் மாற்றுத் திறனாளிகளின் குரலையும் - நீங்கள் எதிரொலிக்க வேண்டும்! அவர்களுக்கான தேவைகளை உள்ளாட்சி அமைப்புகளில் எடுத்துச் சொல்லி நிறைவேற்றித் தர வேண்டும்! இப்போதும் சில பிற்போக்குவாதிகள், “இவர்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகள் ஆகி என்ன செய்யப் போகிறார்கள்” என்று நினைக்கலாம்! அவர்களின் தரம் அவ்வளவுதான்! அதைப்பற்றி எல்லாம் நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எந்த நொடியிலும் நீங்கள் தன்னம்பிக்கையை விட்டுவிடக் கூடாது! சோர்வடையக் கூடாது! 

தலைவர் கலைஞரையே நீங்கள் ஒரு ரோல்மாடலாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்!  தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு முறை ஒரு விபத்தை எதிர்கொண்டார். அதனால், அவரது ஒரு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. இருந்தாலும், அந்த வலியைக்கூட பொறுத்துக்கொண்டு, இறுதிவரை சமூகத்திற்காக உழைத்தார். ஏராளமான இலக்கிய படைப்புகள் - உடன்பிறப்புகளுக்கு கடிதங்கள் - தமிழ்நாட்டு வரலாற்றை திருத்தி எழுதிய அறிக்கைகள் - திட்டங்களை - அவரால் கொடுக்க முடிந்தது. கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு அவர் மனதை பாதிக்கவில்லை. தலைவர் கலைஞர் முதுமைக் காலத்தில், சக்கர நாற்காலியில்தான் வலம் வந்தார். சக்கர நாற்காலியில் இருந்தபடியே, எப்படி பம்பரமாக சுழன்று, சுழன்று உழைத்தார் என்று உங்களுக்குத் தெரியும்! இந்த ‘வில் பவர்’தான் அரசியலுக்கு அவசியம்! மனிதர்களுக்கு அவசியம்! அதை நீங்கள் எல்லோரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்! 

ஒட்டுமொத்த மாற்றுத் திறனாளிகளுக்கும் தன்னம்பிக்கையை எப்படி உருவாக்குவது என்று ஆலோசித்துதான் இப்படி ஒரு சட்டத்தையே நாம் உருவாக்கி இருக்கிறோம். மக்கள் பிரதிநிதிகளாக நீங்கள் ஆற்றப்போகும் பணிகளைப் பார்த்து, இதை மற்ற மாநிலங்களிலும் முன்னெடுக்க வேண்டும். இதுதான், உண்மையான சமத்துவத்தையும் - சமூகநீதியையும் நோக்கிய பயணமாக இருக்கும்! உங்கள் பணி சிறக்க – வெற்றி அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories