
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை பெரியார் திடலில் சுயமரியாதை நாள் விழா நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
அப்போது பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”பெரியார் திடல் என் பொதுவாழ்வில் முக்கியமான மறக்கமுடியாத இடம். துணை முதலமைச்சராக தந்தை பெரியாரின் கொள்கை பேரனாக இந்த மேடையில் நின்று கொண்டு இருக்கிறேன். என் தாதா வீட்டிற்கு ஒரு பேரனாக வந்துள்ளேன்.
கலைஞர், கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் மூன்றாக தலைமுறை பெரியாரிஸ்ட் நான் என பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.
நேற்று கட்சித் தொடங்கியவர்கள் எல்லாம் இன்று முதலமைச்சராக வேண்டும் என சொல்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்காகவும், சுயமரியாதைக்காகவும் கவுன்சிலர் பதவியை கூடவிரும்பாமல் திராவிடர் கழகம் மக்களுக்காக செயல்பட்டு வருகிறது.
தந்தை பெரியாரை உலகமே கொண்டாடி வருகிறது. Genz கிட்ஸ்-கள் கூட பெரியாரை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு எந்த நேரத்தில் எந்த ஆபத்து வந்தாலும், நமக்கெல்லாம் முன்கூட்டியே தெரிவிக்கும் எச்சரிக்கை மணியாக ஆசிரியர் இருக்கிறார்.
பெரியாரின் கொள்கை பாதையில் தான் திமுக எப்போதும் செல்லும். அதை யாராலும் மாற்ற முடியாது. சிறைவாசங்கள், தாக்குதல் என எங்களுக்காக தாங்கிக்கொண்ட இந்த இயக்கத்திற்கு, நாங்கள் எப்போதும் துணையாக நிற்க வேண்டிய எங்கள் கடமை.
கீரிக்கும், பாம்புக்கும் சண்டை வரும் போது கீரிதான் வெற்றி பெரும்.கீரி மூலிகையில் உருண்டு, பாம்பின் விஷத்தை போக்கிக்கொள்ளும். அப்படி தான் பாசிச பாம்புகளின் விஷத்தை போக்க, பெரியார் என்னும் மூலிகையை தடவினால் விஷம் போய்விடும்.
பாசிஸ்டுகளை வீழ்த்த, ஓரணியில் திரண்டு செயல்பட வேண்டும்.200 தொகுதிகளுக்கு மேல் வெல்ல வேண்டும் என தலைவர் இலக்கு கொடுத்திருக்கிறார். அதற்கு அனைவரும் சேர்ந்து பயணிப்போம்” என தெரிவித்துள்ளார்.






