
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி பெரியார்,அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி, மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை மற்றும் உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய மோட்டார் வாகனம் மற்றும் நலத்திட்ட உதவிகள், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள், அங்கன்வாடி ஆசிரியர்கள் பணியாளர்களுக்கு நலத்திட்டம், செவிலியர்கள் மற்றும் திருநங்கையர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,” நான் யாரையும் வாழ்த்த வரவில்லை. உங்களிடம் வாழ்த்து பெற வந்துள்ளேன்.

இன்றைக்கு நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள், எதிர்காலத்தில் 10 பேருக்கு நீங்களாகவே நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிலைக்கு தங்களை மேம்படுத்திக்கொள்ள திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வதுபோல, இந்த அரசு அனைவருக்குமான அரசு.
இன்றைக்கு முதலாவதாக முத்தமிழறிஞர் கலைஞர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, என்னுடைய பெற்றோரை சந்திப்பதற்கு முன்பே குடும்பத்தில் மூத்தவர்களாக இருக்கக்கூடிய உங்களை சந்திக்க வந்துள்ளேன். வெல்வோம் 200! படைப்போம் வரலாறு! அதுவே என் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி” என தெரிவித்துள்ளார்.






