
இந்தியாவில் தொழிலாளர் நலன்களுக்காக 44 சட்டங்கள் இருந்தன. இவற்றை ஒன்றிய பா.ஜ.க, அரசு ரத்து செய்துவிட்டு நான்கு சட்டங்களாக சுருக்கியது. கொரோனா காலத்தில் அவசர, அவசரமாக கொண்டு வரப்பட்ட இந்த மசோதாக்களுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால், தனது பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த மசோதாக்களை ஒன்றிய அரசு நிறைவேற்றியது. இதனை அமலுக்கு கொண்டுவரக் கூடாது என்று நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தன. ஆனால் அதனை புறக்கணித்துவிட்டு இந்த 4 சட்டங்களையும் ஒன்றிய அரசு இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதற்கான அறிவிப்பாணையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஊதிய சட்டம் 2019, தொழில் உறவு சட்டம் 2020, சமூக பாதுகாப்பு குறியீடு சட்டம் 2020, தொழில் பாதுகாப்பு, சுகாதாரம், பணி நிலைமை சட்டம் 2020 ஆகிய நான்கு தொழிலாளர் விரோத சட்டங்களும் நடைமுறைக்கு வந்துள்ளன. இதற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இதனிடையே, புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.






