
நடப்பாண்டில் முன் கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவமழை, வங்கக்கடலில் மாறி, மாறி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் போன்ற இயற்கை பேரிடர்களால் தமிழ்நாட்டில் தொடர் கன மழை பெய்து வருகின்றது.
கடந்த சாகுபடி பருவ காலம் சாதகமாக அமைந்ததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி அமோகமாக விளைந்தது.
அறுவடை தொடங்கிய நிலையில் தொடர் கன மழையும் தொடர்ந்து பெய்து வந்ததால் விளைந்து முற்றிய நெற்கதிர்கள் மழையில் நனைந்து வந்தது.
அறுவடை செய்த நெல்லை உலர்த்துவதற்கு போதிய உலர் களங்கள் இல்லாததால் சாலைகளில் குவித்து பாதுகாக்கும் நிலை ஏற்பட்டது.
நேரடிக் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் நெல் மூட்டைகளை அடுக்கி, பர்தா மூடி பாதுகாக்கப்பட்ட பகுதிகளில், மழைச்சாரலில் மூட்டைகளில் இருந்த நெற்களின் ஈரப்பதம் அதிகரித்து வந்தது.
இந்த நிலையில், பொது விநியோகத் தேவைக்காக ஒன்றிய அரசு 20 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்து, 16 லட்சம் டன்கள் மட்டுமே கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்தது.
இந்த நிலையில் விவசாயிகள் கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் என்பதை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் இறுதியில் ஒன்றிய அரசின் உயர் அதிகாரிகள் டெல்டா மாவட்டங்களில் கள ஆய்வு செய்தனர். அதன் மீது எடுத்த முடிவை தெரிவிக்காமல், தற்போது, ஒன்றிய அரசு கொள்முதல் செய்யும் நெல் ஈரப்பதத்தின் அளவை உயர்த்த முடியாது என நிராகரித்து, தமிழக விவசாயிகளை
வஞ்சித்துள்ளது. ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோதச் செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
பெருமளவு நெல் உற்பத்தி செய்துள்ள விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து, கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதத்தின் அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






