
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.11.2025) கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி - குமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்புகள் சார்பில் நடைபெற்ற உலக மீனவர் நாள் விழாவில், காணொலிக் காட்சி வாயிலாக ஆற்றிய உரை.
கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அமைப்பும் - குமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்புகளும் இணைந்து நடத்தும் உலக மீனவர் நாள் விழாவில் உங்களோடு பேசுவதில் மிகவும் மகிழ்ச்சி!
உழைப்புக்கும் உறுதிக்கும் பெயர்பெற்ற மீனவ பெருமக்கள் எல்லோருக்கும் என்னுடைய உலக மீனவர் நாள் வாழ்த்துகள்!
கழக அரசுக்கும் மீனவர்களுக்குமான உறவு என்பது நீங்கள் மீன்பிடிக்கப் போகும் கடலைப் போலவே ஆழமானது! அதற்கு எடுத்துக்காட்டுதான், கடந்த 2023-ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில், வரலாற்றிலேயே முதல் முறையாக நாம் பிரமாண்டமாக நடத்திய மீனவர் நல மாநாடு! 14 ஆயிரம் பயனாளிகளுக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை அந்த நிகழ்ச்சியில் நான் வழங்கியதும், பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டதும் உங்களுக்கு நன்றாக நினைவிருக்கும்.
அதுமட்டுமா, அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு வந்து, மீனவக் குடும்பங்களின் பாச மழையில் நனைந்ததை நானும் மறக்கவில்லை! கள ஆய்வில் முதலமைச்சர் பயணத்தில் நாகை மாவட்டத்திற்கு நான் வந்தபோதும், நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகளை நேரில் சந்தித்து பேசினேன்.
தொடர்ந்து 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அனைத்து விசைப்படகு சங்க நிர்வாகிகள், ஜூலையில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க நிர்வாகிகளை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து பேசினேன். இந்த ஆண்டும் பிப்ரவரி மாதம் இராமநாதபுரத்தைச் சேர்ந்த பல்வேறு மீனவர் சங்கத்தினரை சந்தித்தேன். மார்ச் மாதம் நாகை மாவட்டம் நம்பியார் நகரில் மீனவச் சொந்தங்களை சந்தித்து, அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளித்தேன்.

தொடர்ந்து, ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். நம்முடைய எந்தக் கோரிக்கையையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுத்த தயாராக இல்லாத நிலையிலும், நம்முடைய மீனவர்களுக்கு நம்மாலான உதவிகளை நாம்தான் செய்ய வேண்டும் என்று, ஏப்ரல் 7 அன்று
110 விதியின்கீழ் 576 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை மன்னார் வளைகுடா பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்காக அறிவித்தேன். இந்த திட்டங்களை எல்லாம், சரியாக ஒருங்கிணைத்து நிறைவேற்ற வேண்டும் என்று திட்ட கண்காணிப்பு பிரிவு உருவாக்கப்படும் என்றும் அறிவித்தேன்.
இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் குளச்சலில், துறைமுக விரிவாக்கப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று நீங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, அதற்கான 350 கோடி ரூபாயை விரைந்து வழங்க ஒன்றிய நிதியமைச்சருக்கு நான் கடிதம் எழுதி வலியுறுத்தியதும் உங்களுக்கு நினைவிருக்கும்.
இந்த ஆண்டு மே மாதம், இந்தியாவிலேயே முதன்முறையாக சூரை மீன் பிடிக்க திருவொற்றியூரில் மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்தேன்! அதுமட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளங்களை திறந்து வைத்திருக்கிறேன்.
கடல் அரிப்பு பாதிப்பைத் தடுப்பதற்கு, உங்கள் கோரிக்கைகளைக் கேட்டு தூண்டில் வளைவுகளை அமைத்து வருகிறோம்! இது எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக, உங்களின் மிக முக்கிய கோரிக்கையை ஏற்று, மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை 5 ஆயிரம் ரூபாயில் இருந்து, 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவித்திருக்கிறோம்! அதுவும் 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்களும் பயனடையும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பட்டாக்கள், மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவுக் கடன், ஆயிரம் நாட்டுப் படகு மீனவர்களுக்கு 40 விழுக்காடு மானியத்தில் இயந்திரங்கள், மானிய விலை டீசல் அளவு உயர்வு, மீனவர்களுக்கான வீட்டுவசதி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அலகுத் தொகை உயர்வு என்று ஏராளமான நலத்திட்டங்களை இந்த நான்கரை ஆண்டுகளில் செயல்படுத்தி இருக்கிறோம்!
உங்கள் குமரி மாவட்டத்தில் மட்டும், கடந்த 4 ஆண்டுகளில் மீனவர்களுக்காக 567 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு பணிகளை செய்து கொடுத்திருக்கிறோம்!
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளைப் போலவே, திராவிட மாடல் அரசு சார்பில் மீனவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் பட்டியலும் மிக நீளமானது. இராமேஸ்வரம் வரை வந்தாலும், உங்களை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை என்று உங்கள் ஏமாற்றத்தை பதிவு செய்திருந்தீர்கள். ஆனால், நான் அப்படி இல்லை.
கடலோர மாவட்டங்களுக்கு எப்போது வந்தாலும் மீனவர் சங்க பிரதிநிதிகளை சந்திக்கிறேன், உங்கள் வீடுதேடி வந்து உங்கள் குடும்பத்தில் ஒருவனாகதான் நான் இருக்கிறேன். நீங்கள் நினைத்தால் எப்போது வேண்டுமென்றாலும் தலைமைச் செயலகத்திலும் என்னைச் சந்திக்கலாம் என்கிற அளவுக்கு மீனவர்களுக்கு நெருக்கமான அரசாக, நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது.
இப்படி, தொடர்ந்து உங்களின் தொடர்பில் இருந்து, உங்கள் தேவைகளை, கோரிக்கைகளுக்கு செவிமடுத்து, உடனே நிறைவேற்றுபவன்தான் இந்த ஸ்டாலின்! இந்த நல்லுறவு என்றென்றும் தொடர வேண்டும்! இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் சந்திக்கும் இன்னல்கள், உயிரிழப்புகளை தவிர்க்க உறுதியான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு முன்னெடுக்க வேண்டும்!
மீனவர்களின் பிள்ளைகள் நல்ல முறையில் படித்து பெரிய பொறுப்புகளுக்கு வர வேண்டும்! நம்முடைய அரசின் திட்டங்கள், கடனுதவிகளை பயன்படுத்தி மீன்வளம் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட தொழில்களிலும் நீங்கள் சிறந்து விளங்க வேண்டும்!
அடுத்த ஆண்டு அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில், இன்னும் இன்னும் உங்களின் உயர்வுக்கான திட்டங்களை நான் செயல்படுத்த வேண்டும் என்று என்னுடைய ஆவலை பகிர்ந்துகொண்டு, அதற்கு உங்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்!






