
கோவை மாநகரில் பத்தாயிரத்து 740 கோடி ரூபாயிலும், மதுரையில் 11 ஆயிரத்து 368 கோடி ரூபாயிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தது.
கடந்த 10 மாதங்களாக இந்த திட்ட அறிக்கைகள் மீது எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டிருந்த ஒன்றிய அரசு தற்போது, மக்கள் தொகையை காரணம் கூறி இந்த 2 திட்டங்களையும் நிராகரித்து திட்ட அறிக்கைகளை திருப்பி அனுப்பியுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நகரின் மக்கள் தொகை 20 லட்சத்துக்கு மேல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ள ஒன்றிய அரசு, கோவையின் மக்கள் தொகை 15.8 லட்சமும் மதுரை மக்கள் தொகை 10 புள்ளி 2 லட்சம் என்றும் தெரிவித்துள்ளது.
அதேசமயம் இதே அளவிலான மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மற்றும் கான்பூர், மகாராஷ்டிராவில் நாக்பூர் மற்றும் புனே, மத்திய பிரதேசத்தில் இந்தூர் மற்றும் குஜராத்தில் சூரத் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி சார்பில் கோவை, மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேற்று கோவையில் தச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி சார்பில் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதளபதிவில்,”AIIMS-உம் வராது, Metro Rail-ஐயும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கூடல்நகரில் கூடிய நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்.
அனைத்து வழிகளிலும் போராட்டத்தை முன்னெடுத்து, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராகத் திகழும் மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்" என தெரிவித்துள்ளார்.








