தமிழ்நாடு

வேளாண் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது ? : செல்வப்பெருந்தகை கேள்வி!

மெட்ரோ ரயில் திட்டத்தை மறுப்பதும், நிதிபகிர்வை புறக்கணிப்பும் செய்து வருகிற நரேந்திர மோடிக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் உரிய பாடத்தினை தமிழக மக்கள் புகட்டுவார்கள்.

வேளாண் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது ? : செல்வப்பெருந்தகை கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை மாநகரில் நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது ? என்ன உரிமை இருக்கிறது ? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சியமைந்து 11 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பதும், நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது பிரதமர் மோடி கோவை வருகிற நிலையில் அந்த நகரம் மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

ஒன்றியத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கடந்த 2010 ஆம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தகுதியான நகரங்களாக இந்தியாவில் 19 இரண்டாம் நிலை நகரங்களை ஒன்றிய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தேர்வு செய்தது.

அந்த பட்டியலில் தமிழகத்தில் கோவை மாநகரம் இடம் பெற்றிருந்தது. அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த கொச்சி, புனே ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு விட்டது. ஆனால், 15 ஆண்டுகளாகியும் இதுவரை கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் கோவை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ரத்து செய்யப்பட்டதாக கூறியிருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும்.

ஆனால், தமிழ்நாடு அரசு 2017 ஆம் ஆண்டில் திட்ட சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு, 2021 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கோவையில் ரூபாய் 6683 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதேபோல,மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால், அதற்கு பிறகு 2023 இல் மறுஆய்வு செய்து ரூபாய் 10,740 கோடியில் கோவையிலும், மதுரையில் ரூபாய் 11,360 கோடியிலும் விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு 2024 பிப்ரவரியில் தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனால், இந்த திட்ட அறிக்கைகள் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு இன்றைக்கு ரத்து செய்யப்படுகிற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

20 லட்சம் மக்கள் தொகை இல்லையென கோவை மாநகருக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு ரத்து செய்திருக்கிறது. ஆனால், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகை கணக்கீட்டின்படி கோவை மாவட்டத்தின் மக்கள் தொகை 23.5 லட்சமாக உள்ளது. இதேபோல, மதுரை மாநகராட்சி பகுதியில் 24.9 லட்சம் மக்கள் தொகை இருக்கிறது. ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆக்ராவில் 16 லட்சம் மக்களும், பாட்னாவில் 17 லட்சம் மக்களும், போபாலில் 18.8 லட்சம் மக்களும் உள்ள நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அனுமதித்து பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.

வேளாண் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது ? : செல்வப்பெருந்தகை கேள்வி!

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை, கலைப் பண்பாட்டிற்கு தலைநகரமாக விளங்கும் மதுரை ஆகிய இரு நகரங்களும் வேகமாக தொழில் நகரங்களாக வளர்ந்து வருகிறது. இந்த இரு நகரங்களும் வளர்ந்து வரும் மக்கள் தொகை அடிப்படையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பலமுறை பிரதமருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு அடுத்தடுத்து ஓர வஞ்சனை செய்து வருவதை இந்த அறிவிப்பு உறுதி செய்கிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 6 சதவிகிதம் உள்ள தமிழ்நாடு இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் 9.37 சதவிகிதம் பங்களிக்கிறது. ஒன்றிய அரசின் வரிப் பகிர்வில் 4 சதவிகிதம் மட்டுமே தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படுகிறது. 2023-24 ஆம் ஆண்டில் ஒன்றிய வரித் தொகுப்பில் தமிழ்நாட்டின் பங்களிப்பு ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி. ஆனால், ஒன்றிய அரசின் வரி தொகுப்பிலிருந்து தமிழ்நாடு பெற்றது ரூபாய் 45,052 கோடி மட்டுமே. இத்தகைய வரி பகிர்வின் மூலமாக தமிழ்நாட்டை பா.ஜ.க. அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவது நன்றாக புலப்படுகிறது.

2014 மக்களவை தேர்தலின் போது விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக கூட்டுவேன், எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி உற்பத்தி செலவில் 50 சதவிகிதம் சேர்த்து விவசாய விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும் என்று நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி ஓராண்டுக்கும் மேலாக தலைநகர் தில்லியில் அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பினர் கடும் பனியையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் நெடுஞ்சாலைகளில் தங்கி அங்கேயே உணவருந்தி அறப்போராட்டம் நடத்தினார்கள். இதில் நூற்றுக்கான விவசாய பெருங்குடிமக்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளை சந்தித்து பேசாமல் புறக்கணித்து இன்றைக்கு கோவை மாநகரில் நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது ? என்ன உரிமை இருக்கிறது ?

எனவே, தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை முடக்குகிற வகையில் செயல்பட்டு வருகிற நரேந்திர மோடியை பார்த்து தமிழ்நாட்டு மக்கள் ‘திரும்பிப் போ, திரும்பிப் போ” என்று குரல் கொடுக்க வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டத்தை மறுப்பதும், நிதி பகிர்வை புறக்கணிப்பும் செய்து வருகிற நரேந்திர மோடிக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் உரிய பாடத்தினை தமிழக மக்கள் புகட்டுவார்கள்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories