
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (14.11.2025) சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கொளத்தூர், பெரியார் நகரில் 5.24 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம் மற்றும் முதல்வர் படைப்பகம், 3.86 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்திற்கான புதிய கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து;
பெரியார் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் 68 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக K5 – பெரவள்ளூர் புற காவல் நிலையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் அலுவலகம் மற்றும் ஜெகநாதன் தெருவில் கட்டப்பட்டு வரும் இரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தின் கட்டுமானப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதல்வர் படைப்பகம்
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், தமிழ்நாட்டில் முதன்முதலாக கொளத்தூர் ஜெகந்நாதன் தெருவில் கடந்த 4.11.2024 அன்று தொடங்கப்பட்ட ‘முதல்வர் படைப்பகம்’ தற்போது ஓராண்டை கடந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இப்படைப்பகம் போட்டித் தேர்விற்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும், முதல்வர் படைப்பகத்தின் ஒரு அங்கமான பகிர்ந்த பணியிட மையத்தின் வாயிலாக இதுவரை 4,489 புத்தொழில் முனைவோர்கள், தங்களின் நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பகிர்ந்த பணியிட மையத்தில் உள்ள
3 ஆலோசனை கூடங்களில் 2,052 கருத்தரங்கங்கள் நடைபெற்று,
தொழில் முனைவோர்கள் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுடன் கலந்தாலோசனைகள் நடத்தி பயனடைந்துள்ளனர்.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் முதல்வர் படைப்பகம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதை கருத்தில்கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னையில் பல்வேறு இடங்களில் முதல்வர் படைப்பகங்கள் அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், “30 முதல்வர் படைப்பகங்கள்” அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்மையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தங்க சாலையில் ஒரு முதல்வர் படைப்பகம் திறந்து வைத்தார். மேலும்
27 “முதல்வர் படைப்பகங்கள்” விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் வகையில், பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம் மற்றும் முதல்வர் படைப்பகத்தை திறந்து வைத்தல்
அதன் ஒரு பகுதியாக, கொளத்தூர், பெரியார் நகர் நூலகம், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 5.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு, முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இப்புதுப்பிக்கப்பட்ட முதல்வர் படைப்பகம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்தைக் கொண்ட குளிரூட்டப்பட்ட நவீன படைப்பகமாக அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 75 இருக்கைகளுடன் கூடிய நூலகம், முதல் தளத்தில் 85 இருக்கைகள் கொண்ட கற்றல் மையம் மற்றும் 60 இருக்கைகள் கொண்ட பயிற்சிக் கூடம் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், 70,000 புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி, மின்வழி கற்றல் (E-Learning), இலவச இணையதள இணைப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சிற்றுண்டியகம், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளும், மாணவர்கள், போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மேலும் மாணவச் செல்வங்கள் பயன்பெறும் வகையில், போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டல் மற்றும் தீவிரப் பயிற்சிகளை வழங்குவதற்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் இயங்கிவரும், அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையமும் இணைந்து, இளைஞர்களுக்கு திசைகாட்டும் மாபெரும் திட்டமான “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், இந்திய குடிமைப் பணி தேர்வுகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு சிறந்த பயிற்றுநர்கள் மூலமாக சிறப்பான பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்தல்
2023-2024 ஆண்டு வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கையில், மிகவும் பழமை வாய்ந்த சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, சென்னை- எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் வேப்பேரி உள்ளிட்ட 4.86 சதுர கிலோமீட்டர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பத்திர பதிவு சேவைகள் வழங்கி வரும் பெரியமேடு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு 3.86 கோடி ரூபாய் செலவில் 6,200 சதுரஅடி நிலப்பரப்பில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
இப்புதிய கட்டடம், மொத்தம் 7,323 சதுர அடி கட்டட பரப்பளவில், வாகன நிறுத்துமிடம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின்தூக்கி, குளிர்சாதன அறைகள், இணைய சேவை, சிறு நூலகம், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
பெரவள்ளூர் புற காவல் நிலையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல்
பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் கொளத்தூர், கார்த்திகேயன் சாலையில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் 68 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக K5 – பெரவள்ளூர் புற காவல் நிலையம் கட்டும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்.
காவல் துணை ஆணையர் அலுவலகம், இரத்த சுத்திகரிப்பு மற்றும் மறுவாழ்வு மையம் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தல்
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 11.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிவ இளங்கோ சாலையில் 29,514 சதுர அடி கட்டட பரப்பளவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் அலுவலகம் கட்டும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 5.8.2025 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இப்புதிய அலுவலகக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கொளத்தூர், ஜெகந்நாதன் தெருவில், 11 கோடியே 74 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடித்தளம் மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டு வரும் இரத்த சுத்திகரிப்பு மற்றும் மறுவாழ்வு மையக் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.






