
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2025) சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியின் சின்னமான காங்கேயனை அறிமுகப்படுத்தினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் 14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பையின் தமிழ்நாடு முழுவதற்குமான சுற்றுப்பயணத்தை கொடியசைத்து வழியனுப்பினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை
அனைவருக்கும் என்னுடைய மாலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
உரையை நான் தொடங்குவதற்கு முன்பு, இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் என்னை அழைத்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு ஹாக்கி வீரர்களுக்கு இந்திய ஹாக்கி கூட்டமைப்பு உறுதுணையாக இருப்பதற்கும் எனது நன்றிகள்.
நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு நம்முடைய ஆட்சிக்காலம், தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையினுடைய பொற்காலம் என்று சொன்னால் அது மிகையாகாது.
அதை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நாம் நிரூபித்துக் கொண்டு வருகின்றோம். அதை மீண்டும் உறுதிப்படுத்துகின்ற வகையில்தான் இன்றைக்கு இந்த நிகழ்ச்சி. வருடா, வருடம் ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கின்றோம். அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பல்வேறு சர்வேதச, தேசிய விளையாட்டுப் போட்டிகளை இன்றைக்கு தமிழ்நாட்டில் நாம் தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையினுடைய இன்னொரு மைல்கல்லாக, சாதனையாக FIH ஜீனியர் ஆடவர் ஹாக்கி உலக கோப்பை 2025ஐ முதன்முறையாக தமிழ்நாட்டில் நடத்த இருக்கின்றோம்.
இந்த போட்டிகள் வருகின்ற நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடக்க இருக்கின்றது. அதற்கான Trophy Tourஐயும் தொடங்கி வைத்து, இந்த Tourக்கான Mascotஐயும் உங்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்துவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை 2025 போட்டிகள், தமிழ்நாட்டின் நிர்வாக தலைநகரான சென்னையில் மட்டுமல்ல, பண்பாட்டு தலைநகரமான மதுரையிலும் நடைபெற இருக்கிறது.
ஹாக்கி விளையாட்டில் தமிழ்நாடு தனித்துவமான பங்களிப்பை அளித்து வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் தொடங்கி உலக கோப்பை போட்டிகள் உள்ளிட்ட பல சர்வதேச போட்டிகளில் இந்தியாவை முன்னிறுத்தி தமிழ்நாடு ஹாக்கி வீரர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
திராவிட மாடல் அரசு 2021ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றபோது 3,000 ஹாக்கி விளையாட்டு வீரர்கள் மட்டுமே பதிவு செய்திருந்தனர். ஆனால், தற்போது முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலால், சுமார் 11,000 வீரர்கள் ஹாக்கி பயிற்சியில் பதிவு செய்திருக்கின்றனர்.
இந்த மகழ்ச்சியான தருணத்தில் Junior Men’s Hockey World Cup
2025-க்கான சிறப்புக்குரிய Mascot-ன் பெயரை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்த உலகக் கோப்பை தொடரின் சின்னமாக (Mascot) தமிழ்நாட்டின் பெருமைமிகு காங்கேயனை அறிவிப்பதில் பெருமியடைகிறேன்.
காங்கேயன், தமிழ்நாட்டின் பண்பாட்டை எதிரொலிக்கிறது. காங்கேயன் தனித்துவமான தோற்றத்தையும் வேகத்தையும் வெளிப்படுத்தக்கூடிய எருது வகை.
இந்த காங்கேயன் Mascot-ம் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து ஹாக்கி ரசிகர்களிடம் சென்று சேரும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
இந்தப் போட்டியின் வெற்றிக்கு உங்கள் அனைத்து தரப்பினுடைய ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டு, இந்த உலகக் கோப்பை தொடரை சிறந்த முறையில் நடத்திக் காட்டுவோம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.








