
நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் S.I.R-க்கு தொடக்கம் முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பீகார் மாநிலத்தில் நடைபெற்ற குளறுபடிகள் எதையும் களையாமல் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் S.I.R திட்டத்தைச் செயல்படுத்துவது மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதாகவும், ஜனநாயகத்தை அடியோடு குழி தோண்டி புதைப்பதாகவும் உள்ளது.
ஒன்றிய அரசின் கைப்பாவையாகவும், எதேச்சாதிகாரப் போக்குடனும் தேர்தல் ஆணையம் செயல்பட்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (S.I.R.) கொண்டு வந்துள்ளது.
சிறுபான்மையினர் வாக்குகள், பா.ஜ.க.,வின் எதிர்ப்பு வாக்குகள் ஆகியவற்றைக் குறிவைத்து நீக்கும் நோக்கோடு – தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி, தகுதியற்ற வாக்காளர்களைச் சேர்க்கும் சதித் திட்டத்தோடு ஒன்றிய பா.ஜ.க. அரசை தனக்குப் பாதுகாவலாக வைத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் இதனைச் செய்திட முற்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த S.I.R நடவடிக்கையை தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எதிர்த்து வருகிறது. இதன்ஒரு பகுதியாக இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் S.I.R-ஐ கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, சி.பி.எம், சி.பி.ஐ, வி.சி.க உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.








