
தமிழ்நாட்டில் பீகாரிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள் என்று பொறுப்பு வாய்ந்த பிரதமர் பதவியில் இருப்பவர் பேசலாமா? வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் தலைவிரித்தாடும் பீகாரில், நடக்கவிருக்கும் தேர்தலில் திசை திருப்பும் முயற்சிதான் இது – கண்டிக்கத்தக்கது இது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 30, 2025 அன்று பீகார் மாநிலத்தின் சாப்ராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு நாடு தழுவிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.
‘‘தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர், உழைக்கும் பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது, இது தொடர்பாக எல்லாம் தெரிந்தும் ஆர்.ஜே.டி., காங்கிரஸ் அமைதியாக இருக்கிறது, இவர்கள் அதற்கு எதிர்வினை ஆற்றவில்லை’’ என்றார்.
2023 ஆம் ஆண்டிலும் ஒரு வதந்தி!
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம், தமிழ்நாட்டில், பீகார் உள்ளிட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்ட தாகச் சமூக ஊடகங்களில் ஒரு போலியான தகவல் மற்றும் தவறாகச் சித்தரிக்கப்பட்ட காட்சிப் பதிவுகள் பரவின.
தமிழ்நாடு காவல்துறை உடனடியாக இந்த வதந்தி கள் குறித்து விசாரித்தது. அந்த வதந்திகள் அனைத்தும் தவறானவை, தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவங்கள் உண்மையில் நடக்கவில்லை; ஆந்திர மாநிலத்தில் உள்ளுர் தொழிலாளர்களுக்குள் அடித்துக்கொள்ளும் காணொலிகளும், போலியாக சித்தரிக்கப் பட்ட காட்சிப் பதிவுகளும்தான் அவை – தவறாகப் பயன்படுத்தப்பட்டவை என்று உறுதி செய்தது.
எத்தகைய பித்தலாட்டம் இது!
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோர் வட மாநிலத் தொழிலா ளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், வதந்தி களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்பொழுதே தெரிவித்தனர்.
பீகார் அரசு அதிகாரிகளும் தமிழ்நாட்டிற்கு வந்து ஆய்வு செய்த பின்னர், தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், எந்தவிதமான தாக்குதல்களும் நடக்க வில்லை என்றும் உறுதிப்படுத்தினர்.
குறிப்பாக, ‘பிகார் கி அவாஜ்’ என்ற பெயரில் யுடியூப் சேனல் நடத்திவரும் மனீஷ் கஷ்யப் என்பவர் திட்டமிட்ட வகையில் போலியான காட்சிப் பதிவுகளை பீகாரிலேயே உருவாக்கி, பின்னணியில் தமிழில் பேசுவது போன்று எல்லாம் ‘எடிட்’ செய்து அதனை சமூக வலைதளத்தில் பரப்பினார். இந்தக் காட்சிப் பதிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஆண்டுக்கு 12 ஆயிரம் கூட வருவாய் இல்லாத இவரின் வங்கிக் கணக்கில் 2 மாதத்தில் பல தவணை களாக 40 லட்சம் ரூபாய் வரை வரவு வைத்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஓராண்டிற்குப் பிறகு பிணையில் வெளிவந்த அந்தப் பேர்வழி, தற்போது பாஜகவில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
பீகாரில் பிரதமர் பேசியது அபாண்டமானது!
இந்த நிலையில், தற்போது கடந்த 30.10.2025 அன்று சப்ரா தேர்தல் பரப்புரையில், பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு, அவதூறும், அபாண்டமும் கலந்த ஆதாரமற்ற, போலியான தகவல் மற்றும் வதந்தியின் அடிப்படையிலானது. தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் திமுகவினரால் தாக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையற்றதும், விஷமத்தனமானதுமாகும்.
தேசியத்தைக் கட்டிக் காப்பதாக 56 அங்குலம் உள்ள தனது மார்பைத் தட்டும் பிரதமர் – இப்பொழுது பீகாரிகள் – தமிழர்கள் என்று பிரித்துப் பேசுவதும், இரு மாநிலத்தவர்களுக்கிடையே மோதல் நடப்பது போலவும் பேசியிருப்பது பச்சையான பிரிவினைவாதம் அல்லவா – இனவாதம் அல்லவா!
பீகாரில் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டம் – வறுமை!
கிட்டத்தட்ட 12 லட்சம் வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டின் குக்கிராமம் வரை வேலை செய்கிறார்கள். எந்த இடத்திலும் பிரச்சினை இல்லை. பாதிக்கப்பட்டதாக அவர்கள் யாரும் இதுவரை சொன்னதும் இல்லை!
வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டை நோக்கி வேலை வாய்ப்பைத் தேடிக் குவிவதற்குக் காரணம், பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் – வறுமை கொடிகட்டிப் பறப்பதால்தானே!
பீகாரில் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதைத் திசை திருப்பவே பிரிவினைவாதத்தை செயற்கையாக உண்டாக்கி, ஒரு மோதல் போக்கைத் தூண்டிவிடுவது புரிகிறது.
தேர்தல் நடக்கும்போது எல்லாம் இதுபோன்ற இன மோதல், மத மோதலை உண்டாக்குவது பி.ஜே.பி.க்கே உள்ள கலாச்சாரம் ஆகும்.
ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலின்போது, கட்டாக்கில் பேசிய பிரதமர் மோடி (20.5.2024) ஒடிசா – பூரி ஜெகந்நாதர் கோவிலின் புதையல் சாவியைத் தமிழ்நாட்டிற்குத் திருடிக் கொண்டு சென்றுவிட்டார்கள் என்று இதே பிரதமர் கூறவில்லையா?
தமிழர்களைத் திருடர்கள் என்பதா?
அப்பொழுதே தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம்!
தமிழர்களைத் ‘‘திருடர்கள்’’ என்று கொச்சைப்படுத்துவதைக் கண்டித்து அப்போதே தமிழ்நாட்டின் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டித்தது உண்டே!
அதுமட்டுமல்ல, ‘‘ஒடிசாவை, ஒரு தமிழ்நாட்டுக்காரர் ஆளப் பார்க்கிறார்’’ (வி.கே.பாண்டியன் அய்.ஏ.எஸ். அவர்களை மனதிற்கொண்டுதான் அவ்வாறு குறிப்பிட்டார்) என்றார்.
ஒடிசா மாநிலத்தை ஒரு தமிழ்நாட்டுக்காரர் ஆட்சி செய்ய முயற்சிக்கிறார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் நேரத்தில் பேசினாரே!
பொறுப்பு வாய்ந்த பெரிய பதவியில் இருக்கும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் இப்படிப் பொறுப்பற்ற முறையில் பேசுவதும், மாநிலங்களுக்கிடையே பிரிவினை – பிளவை ஏற்படுத்தி, மோதலை உண்டாக்குவதும் கண்டிக்கத்தக்கது.
கரோனா காலமும், வட மாநிலத்தவர்களும்!
கரோனா காலத்தில் தமிழ்நாட்டில் வேலை செய்து வந்த வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக குழந்தைக் குட்டிகளுடன், மூட்டை முடிச்சுகளைச் சுமந்துகொண்டு சொந்த மாநிலத்திற்கு நடைப்பயணமாகச் சென்றார்களே, அப்போது வட மாநிலத்தவர்கள்மீது பிரதமர் மோடிக்கு ஏற்படாத கரிசனம், இப்பொழுது வருவதாகக் காட்டிக் கொள்வது ஏன்?
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உதவி வந்ததையும் தடுத்த ‘‘தயாள குணவாதிகளா’’ இப்படிப் பேசுவது?
எல்லாம் தேர்தல் படுத்தும்பாடு! மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.
இந்தியாவில் வாழும் மக்கள், பி.ஜே.பி.யின் இந்தப் போலித்தனத்தை, இரட்டை வேடத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பீகாரில் பிரதமர் மோடியின் பேச்சை, தமிழ்நாட்டின் முதலமைச்சர் மட்டுமல்ல, அனைத்துக் கட்சியினரும், தரப்பினரும் (பி.ஜே.பி., அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளைத் தவிர) கண்டித்துள்ளனர்.
பாசிசத்தை வீழ்த்திட வீறுகொண்டு எழவேண்டும்!
எந்தத் தில்லுமுல்லுகளைச் செய்தாவது ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கவேண்டும்; அதன்மூலம் தங்கள் ஹிந்துத்துவா நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிற இந்தப் பிற்போக்குப் பாசிசத்தை வீழ்த்திட, அகில இந்திய அளவில் முற்போக்குச் சக்திகள் வீறுகொண்டு எழட்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






