
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் இயக்கம் தொடங்கப்பட்டு 76 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், கருத்தியல் உறுதியால் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்று வீருநடைபோட்டு வருகிறது.
அத்தகைய பேரியக்கத்தின் பன்முகப் பரிமாணங்களை விளக்கும் வகையில், 1120 பக்கங்கள் கொண்ட அறிவார்ந்த ஆவணமாக ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ தி.மு.க. - 75 என்ற நூல் முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், ரூ.750-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்நூல், முன் வெளியீட்டுத் திட்டதில் ரூ.600க்கு கிடைக்கப்பட இருக்கிறது என்ற அறிவிப்பை முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து தி.மு.கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிட்டுள்ளது பின்வருமாறு,
“முரசொலியில் வந்துள்ள அறிவிப்பு!

‘முரசொலி’ பாசறைப் பக்கம், சட்டமன்றத் தொகுதிதோறும் கலைஞர் நூலகம், முத்தமிழறிஞர் பதிப்பகம், இளம்பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி என கழக இளைஞரணியின் கொள்கை விதைக்கும் பணியில் அடுத்த முயற்சி! வாழ்த்துகள் உதயநிதி ஸ்டாலின்.
இந்தியாவிலேயே முதல் மாநிலக் கட்சியாக ஆட்சியமைத்த வரலாற்றைப் படைத்து, பவள விழா கடந்து நூற்றாண்டை நோக்கி நடைபோடும் நம் இயக்கம், அரசியல் - சமூகம் - பொருளாதாரம் - பண்பாட்டுத் தளங்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து பல்துறை அறிஞர்கள் 80 பேரின் எண்ணங்களைக் கட்டுரைகளாகப் பெற்று முத்தமிழறிஞர் பதிப்பகம் உருவாக்கியுள்ள “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - திமுக75” எனும் அறிவுக் கருவூலத்தைக் கழகத்தினரும் - இளைஞர்களும் படித்து பயனுற வேண்டும்!
கழகத் தோழர்களே…
இளைஞர்களின் கைகளுக்கு இந்த ஆவணத்தைக் கொண்டு சேர்ப்பீர்! அனைவரது சிந்தனையிலும் கருப்பு சிவப்புக் கொள்கைகள் ஆழமாக வேரூன்றட்டும்!”








