சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில், மழைநேரத்தில் மக்களுக்கு உற்றத்துணையாக நின்று உதவுவது தொடர்பாக, கழக நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் மக்கள் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (அக்.23) கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.
அப்போது அவர் “கடந்த காலங்களைப் போலவே இப்போதும், களத்தில் இறங்கி மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திடும் வகையில் உழைப்போம். குறிப்பாக, நிவாரணப் பணிகளை அரசு மற்றும் தன்னார்வலர்களோடு இணைந்து, ஒற்றுமையோடும் திட்டமிடலோடும் செயல்படுத்திட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
இன்று சென்னை பெருநகர மாநகராட்சி, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகள், பூந்தமல்லி நகராட்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள், நகர, பகுதி, வட்டக் கழகச் செயலாளர்கள் உங்களையெல்லாம் இந்த நேரத்தில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆலோசனைக் கூட்டம்
கழகத் தலைவரின் அறிவுறுத்தலின்படி, இந்த நிகழ்ச்சி இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தேர்தலை முன்னிட்டு, நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டம் அல்ல. நாம் ஒவ்வொரு மழைக் காலத்துக்கும் வெள்ளத்துக்கும், பேரிடர் காலத்துக்கும் முன்னதாக இப்படிப் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளோம். குறிப்பாக, `கோவிட்’ காலத்தில் மக்களுடன் நின்று இருக்கிறோம்.
அந்த நம்பிக்கையுடன்தான் மக்கள் வாக்களித்து, நமது தலைவரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தனர். ஆட்சி அமைந்தபின்பும் நாம் வீட்டில் உட்காரவில்லை. அடுத்த 6 மாத காலம் நடந்த கோவிட்டின் போராட்ட காலத்தில் தலைவர்தான் முன்களப் பணியாளராக நமக்கெல்லாம் முன்மாதிரியாகப் பணியாற்றினார்.
அதைத் தொடர்ந்து நாமும் நமது பகுதிகளில் மக்கள் பணிகளைச் செய்தோம் கடந்த நான்கு வருடங்களில் மழைக்கால ஏற்பாடுகளும் பலமுறை மேற்கொள்ளப்பட்டன. மக்கள் பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், தன்னார்வலர்களை அழைத்து, பல்வேறு கூட்டங்களை நடத்தியுள்ளோம்.
நேற்று காலை இந்தக் கூட்டத்தை நடத்தவேண்டும் என்று தலைவர் முடிவெடுத்து, அறிவிக்கச் சொன்னார். அதன்பிறகு கூட்டத்தை நடத்தலாமா? வேண்டாமா, இன்று காலையிலிருந்து மழை இருக்க போகிறது என்ற செய்திகள் வந்தன. மழைநேரங்களில் நீங்கள் வரமுடியுமா என்ற சந்தேகமும் இருந்தது.
நாம் அறிவித்தவுடன், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை விட்டுவிட்டார். ‘அனைவரும் களத்தில் இருங்கள்’ என்று சொன்னார். அத்துடன், அவரின் வேலை முடிந்துவிட்டது. ஆனால், உண்மையாக களத்தில் இருக்கபோவது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலைஞரின் உடன்பிறப்புகள்தான். அதனால் நம் உடன்பிறப்புகளிடம் பேசி, அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களை களத்துக்குப் போகச் சொல் என்று என்னை அனுப்பி வைத்துள்ளார்.
அண்ணன் ஆர்.எஸ் பாரதி அவர்கள் பேசும் போது, நம் இளைஞர் அணிச் செயலாளர் துணை முதலமைச்சர் அவர்கள் இரண்டு மூன்று நாள்களாக பணியாற்றுவது போல, நீங்கள் அனைவரும் களத்துக்குச் செல்ல வேண்டும் என்று கூறினார். அதில் ஒரு சிறிய திருத்தம், நீங்கள் எல்லாம் என்னைவிட களத்தில் அதிகமாக வேலை பார்த்துள்ளீர்கள்.
கடந்த சில மாதங்களாக நான் நேரடியாகப் பல பகுதிகளில் ஆய்வு செய்து பிரச்சினைகளைக் கேட்டு வருகிறேன். இந்த மூன்று நாள்களில் உங்களில் பலரையும் பார்த்து பேசி இருக்கிறேன். பலரும் பெருமையுடன் பணிகளை நிறைவு செய்ததாக தெரிவித்தனர். அதனால், பொதுமக்களை நாம் தைரியமாக சந்திக்கப் போகிறோம் என்று பெருமையாகச் சொன்னார்கள். குறுகிய கால அறிவிப்புடன் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
வடகிழக்குப் பருவமழை
வடகிழக்குப் பருவமழை தீவிரமாகியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதற்கு பிறகு இரண்டு நாட்களில் இன்னொரு மழை வர வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
அது வலுவடைய வாய்ப்பு இருக்கும் என்றும் சொல்கிறார்கள். சென்ற வருடத்தைவிட, இந்த வருடம் மழை அதிகமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி மழை வந்தால், அதை எதிர்கொண்டு, எப்படி மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கூட்டம்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்லித் தந்தது போல் `மக்களிடம் செல், மக்களுடன் பழகு, மக்களுடன் பேசு, மக்களுக்கு சேவை செய்’ என்ற வழிமுறையைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.
நான் பல இடங்களுக்குச் சென்றபோது சில இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மக்கள் ‘வந்து பாருங்கள்’ என்று சொல்கிறார்கள். அவர்கள் கோபத்துடன் எல்லாம் அவர்கள் நம்மை அழைக்கவில்லை. சிரித்த முகத்துடன்தான் சொல்கிறார்கள். நம் அரசு, முதலமைச்சர் கவனத்துக்கு இந்தப் பிரச்சினை சென்றது என்றால், நிச்சயம் நம் முதலமைச்சர் அவர்களும், நமது அரசும் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில்தான் சொல்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை நம் நடவடிக்கை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த நான்கு வருடங்களில் பல பணிகளை நாம் செய்திருந்தாலும், இது தேர்தலுக்காக நடத்தப்படுகின்ற ஆலோசனைக் கூட்டம் கிடையாது. இந்த மழைநீர் வடிகால் பணிகளால் மட்டும்தான் நாம் தேர்தலில் வெல்லப்போகிறோம் என்பது கிடையாது. தேர்தல் முடிவுகள் என்னவாக இருந்தாலும், எந்த மழையிலும் நாம் மக்களுடன் நின்றோம், நிற்கிறோம் நிற்போம் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்.
கழகத்தின் உடன்பிறப்புகள்
மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது, நாம் உடன் நிற்பது பெரிய விஷயமல்ல. அவர்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போதும் அவர்கள் உடன் நிற்பவர்கள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள். மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் கலைஞரும், தலைவரும் முதல் ஆளாகச் சென்று நிற்பார்கள்.
தமிழ்நாட்டுக்கு எந்த அரசியல் நெருக்கடி வந்தாலும், இயற்கை நெருக்கடி வந்தாலும் மக்களைக் காப்பாற்றக்கூடியவர்கள்தான் நம் கழகத்தினர். ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்கட்சியாக இருந்தாலும் சரி நாம் எப்போதும் மக்களுடன் இருந்திருக்கிறோம். நாம் ஆளுங்கட்சியாக இருப்பதால் நமக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கிறது.
2015 சென்னை வெள்ளம், வர்தா புயல், கொரோனா நெருக்கடிகள், இப்படி எல்லா போராட்டங்களிலும் மக்களுடன் முன்வரிசையில் நின்று இருக்கிறோம். நிவாரணப் பொருட்கள் கொடுப்பது, பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, உணவுப் பொட்டலங்கள் வழங்குவது, தண்ணீர் பாட்டில்கள் கொடுப்பது என்று இப்படி நாம் பலமுறை பணியாற்றி இருக்கிறோம்.
நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, கோவிட் காலத்தில் நாம்தான் `ஒன்றிணைவோம் வா’ என்று தலைவர் அவர்கள் அறிவித்து, உயிரை துட்சமாக நினைத்து, நாம் களத்தில் இறங்கி நாம் மக்கள் பணியாற்றினோம். அதனால், பல செயல்வீரர்களை நாம் இழந்தோம்.
அண்ணன் ஜெ.அன்பழகன் அவர்களை கோவிட் காலத்தில்தான் நாம் இழந்தோம். ஆட்சிக்கு வந்தபிறகும் ஒவ்வொரு மழைக்காலத்திலும் நாம் மக்ளுடன் மக்களாக இருந்திருக்கிறோம். அரசின் சார்பாக ஒரு பக்கமும், கழகத்தின் சார்பாக இன்னொருப் பக்கமும் என்று மக்களுக்குத் தொடர்ந்து உதவிகளைச் செய்திருக்கிறோம்.
கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு `ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பை தலைவர் அறிவித்தார். நீங்கள் அனைவரும் களத்துக்குச் சென்று, மக்களைச் சந்தித்து, நம் கழகத்தில் பலரையும் உறுப்பினர்களாகச் சேர்த்தீர்கள். இரண்டு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை, கழகத்தில் இணைத்துள்ளீர்கள்.
அந்தக் குடும்பங்களுடன் நீங்கள் தொடர்பில் இருப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு, என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் அடிப்படைத் தேவைகளை எல்லாம் நீங்கள்தான் தீர்த்து வைக்கவேண்டும். உங்களால் தீர்த்து வைக்க முடியவில்லை என்றால், அவற்றைக் கேட்டு உங்களின் கவுன்சிலர்கள், பகுதி, வட்டக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர், உங்களின் அமைச்சர், துணை முதலமைச்சரின் அலுவலகத்துக்குத் தெரிவித்தால் போதும், அந்தப் பணிகளை நாங்கள் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்.
சரியான பதிலடி
மழையை வைத்து எப்படி அரசியல் பண்ணலாம், அரசுக்கு எப்படிக் கெட்ட பெயரை ஏற்படுத்தலாம் என்று எதிர்க்கட்சியினர் இன்றைக்குப் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறார்களோ, இல்லையோ முக்கியமாக செய்தி தொலைக்காட்சிகளில் போட்டி போட்டுக்கொண்டு அந்த வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதுவும் உங்களுக்குத் தெரியும்.
நான், நேற்று காலை கண்ணகி நகருக்குச் சென்றேன். அங்கு ஒரு தெருவில் தண்ணீர் தேங்கி நின்றிருந்தது. நான் அங்கு சென்றவுடன் அதை அப்புறப்படுத்த சொன்னேன். மோட்டார் போட்டு அந்த தண்ணீரை எடுத்துவிட்டார்கள். ஆனால், நேற்று ஒரு செய்தித் தொலைக்காட்சியில் இதையே வேறு மாதிரியான ஒரு செய்தியாகப் போடுகிறார்கள். மிகப்பெரிய அதிருப்தி இருக்கிறது. அங்கு தேங்கியிருந்த தண்ணீர், மக்களின் புகாரைத் தொடர்ந்து அகற்றப்பட்டது என்று செய்தி போடுகிறார்கள்.
சில செய்தி தொலைக்காட்சிகள் எதிர்க்கட்சிகளைவிட அதிகமாக இந்த அரசுக்கு எப்படியாவது கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று, சமூக ஊடகங்கள், யூடியூப்புகள் போட்டி போட்டுக்கொண்டு வதந்திகளைப் பரப்புகிறார்கள். இவற்றையெல்லாம் சந்திப்பதற்கு, இவற்றுக்கெல்லாம் சரியான பதிலடி கொடுப்பதற்கு, நாம் தயாராக இருக்க வேண்டும்.
பொய் செய்திகள் மக்களிடம் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தும். எனவே, அதை நாம் தெளிவுபடுத்த வேண்டும். அந்தந்தப் பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள், களத்துக்கு நேரில் சென்று பார்த்து, முடிந்தால் அவற்றைப் புகைப்படமாக எடுத்து உண்மை நிலவரத்தை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பில் இருந்தவர்கள், இருப்பவர்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். உங்கள் வார்டில் உள்ள தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள், யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ உங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். எந்த இடத்தில் பொதுவாக தண்ணீர் நிற்கும் எந்த மழைக்கு நிற்கும், எப்போது தண்ணீர் வடியும் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த இடங்களை எல்லாம் அதிகாரிகளிடம் முன்கூட்டியே சொல்லுங்கள்.
நான் செல்கின்ற இடங்களில் எல்லாம் அதிகாரிகள் நிற்கிறார்கள். நீங்கள் அழைத்தால், வருவதற்கு நானும் தயாராக இருக்கிறேன். அடுத்த பத்து நாட்கள் நமக்கு இதை தவிர, வேற எதுவும் முக்கியமான வேலை கிடையாது. அதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவித்து அவற்றை சரி செய்யுங்கள். உங்களுடைய பகுதி மக்களுக்கு நீங்கள் அடுத்த 15 நாட்களுக்கு நீங்கள்தான் பாதுகாவலர்கள் என்பதை மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள்.
ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்
முதலில் நம் பகுதிகளில் எங்கெல்லாம் தண்ணீர் தேங்கும், அப்படி தேங்குகிற தண்ணீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் தயாராக இருக்கின்றனவா? எவ்வளவு மோட்டார் தேவைப்படுகிறது? அப்படி போதுமானதாக இல்லையென்றால், அங்கு இருக்கக்கூடிய அமைச்சர், எம்.எல்.ஏ, அரசு அதிகாரிகளிடம் சொல்லி அவற்றைத் தயார் செய்து வைப்பதில் தெளிவாக இருங்கள்.
அந்தப் பணிகளில் முழுமையாக உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் செய்கின்ற பணிகளைப் பார்த்துவிட்டு, உங்களின் பகுதி மக்களுக்கு ஏதாவது தேவை என்றால், அவர்கள் உங்களைத்தான் தொடர்புகொள்ள வேண்டும். அந்த அளவுக்கு, நீங்கள் பகுதி மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். அவர்களின் நம்பிக்கையை நீங்கள் பெற வேண்டும்.
உங்க ஏரியாவில் இருக்கக்கூடிய தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், வருவாய்துறை, மருத்துவமனைகள் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளுடன் நீங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அரசுடன் இணைந்து நீங்களும் செயல்படுங்கள்.
அதுமட்டுமல்ல, மழைநேரத்தில் களப்பணியாற்ற வருகின்ற என்.ஜி.ஓ.தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்களையும் அரவணைத்து, அவர்களின் கருத்துகளையும் கேட்டுக்கொண்டு, அவர்களையும் உங்களின் பணிகளில் இணைத்துக் கொள்ளுங்கள். மழைவெள்ள நேரத்தில் முதியோர்கள், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு மிக மிக முக்கியம். அவர்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுங்கள்.
அண்ணன் நேரு அவர்கள் குறிப்பிட்டதுபோல், முகாம்கள் பல்வேறு இடங்களில் துவங்கப்பட்டிருக்கின்றன. நான் நேற்று இரவு, இன்றைக்கு காலையில்கூட அனைத்து முகாம்களுக்கும் சென்று பார்த்துவிட்டு வந்தேன். சாப்பாடு அனைத்து இடங்களிலும் தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்து முகாம்களிலும் தங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், இதுவரைக்கும் யாரும் வந்து தங்கும் சூழ்நிலைக்கு வரவில்லை. ஆகவே தாழ்வான பகுதியில் இருக்கக்கூடிய மக்களிடம் முன்கூட்டியே மழை பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். நீங்களே முடிந்தால் அந்த மக்களை முகாம்களுக்கு அழைத்து வாருங்கள்.
நிவாரண முகாம்கள்
முகாம்களுக்கு வருவதற்கு சிலருக்கு தயக்கம் இருக்கும். இருந்தாலும், நீங்கள் அவர்களிடம் பேசி அவர்களின் தயக்கத்தைப் போக்கும்விதமாக. அவர்களிடம் பேசுங்கள். அதேபோல நிவாரண முகாம்கள் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள். அப்படி ஏதாவது பிரச்சினை இருந்தால் அங்கு இருக்கக்கூடிய அதிகாரிகளிடம் சொல்லுங்கள். முக்கியமாக குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இருப்பதை, நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
பொது சமையலறையை சுகாதாரமாக வைத்துக்கொள்ளகூடிய பணிகளைச் செய்யுங்கள். அங்கு சமைக்கப்படுகின்ற உணவைத் தேவைப்படுகின்ற மக்களுக்கு வழங்க ஒவ்வொரு வார்டாக பிரித்து எடுத்துச் செல்லும்போது அதற்கு சுத்தமான வாகனங்களை ஏற்பாடு செய்து அவற்றை எடுத்துச் செல்லுங்கள்.
சில இடங்களில் அரசு அவற்றை ஏற்பாடு செய்திருக்கிறது. சில இடங்களில் நம்முடைய மக்கள் பிரதிநிதிகள், பகுதிச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், கவுன்சிலர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள். நீங்கள் உங்களுக்குள் ஒரு கூட்டுப்பொறுப்பும் ஒற்றுமை உணர்வும் புரிந்துகொள்ளலும் அவசியம் வேண்டும். அப்போதுதான் நாம் செய்யும் பணிகள் எளிதாகும்.
மழை அதிகமாகும் சூழ்நிலை வந்தால், பால், பிஸ்கட், மெழுகுவர்த்தி மாதிரி அடிப்படைத் தேவைக்கான பொருட்களையெல்லாம், நீங்கள் கேட்டவுடன் கிடைக்கிற மாதிரி வைத்துக் கொள்ளுங்கள். மக்களிடம் பேசும்போது தயவு செய்து மிகவும் கண்ணியத்துடனும், கவனத்துடனும் பேச வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஏனென்றால், இப்போது எல்லோரும் சமூக வலைதளத்தில் அவற்றை எடுத்துப் போட்டுவிடுகிறார்கள். உதவி கேட்க வருகின்ற மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்கள். வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிட்டது, இவ்வளவு இழப்பு வந்துவிட்டது என்று மன உளைச்சலில் இருப்பார்கள்.
அவர்கள் கோபத்துடன்தான் பேசுவார்கள். இதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பதிலுக்கு நாமும் கோபப்பட்டு பேசினால், அது நம்மை சிக்கலான இடத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். நாளைக்கு அவர்களை சென்று பார்க்க முடியாது. அதனால் மக்களை மிகவும் பொறுமையோடும், நிதானமாகவும் அணுக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நம் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்த நெட்வொர்க் தான் இன்றைக்கு உலகத்திலேயே மிகப்பெரிய நெட்வொர்க் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த நெட்வொர்க்கை நாம் மக்கள் சேவைக்கும், இப்போது இருக்கின்ற சூழ்நிலைக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மக்களுக்கான சேவையை நாம் செய்ய வேண்டும்.
நீங்க உங்களின் பகுதிக்கும், வார்டுக்கும் ஒரு வாட்ஸ்-அப் குழுவைத் தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள். அதன் மூலமாக நிவாரண பொருட்கள் எல்லாருக்கும் சென்று சேர்ந்ததா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். கழக நிர்வாகிகள், சென்னை மாநகராட்சி மெட்ரோ வாட்டர் அதிகாரிகள், என்.ஜி.ஓக்களை அந்தக் குழுவில் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்.
அரசியல் ரீதியாக ஒரு சில பேருக்கு நமக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள், பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால், அவற்றைக் காண்பிப்பதற்கு இது சரியான நேரம் கிடையாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரே நோக்கத்துடன், ஒரே நேர்கோட்டில் செயல்பட்டால் மட்டுமே கழகத்துக்கும், நம்முடைய தலைவருக்கும், அரசுக்கும் ஒரு நல்ல பெயரை பெற்றுத் தர முடியும் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
அரசு அதிகாரிகள் எவராவது ஒத்துழைக்கவில்லை என்றால், தயவு செய்து அமைச்சரின் கவனத்துக்கும், நம்முடைய முதலமைச்சரின் அலுவலகத்துக்கும் தெரியப்படுத்தினீர்கள் என்றால், நிச்சயமாக அந்த அரசு அதிகாரிகளை அழைத்து, நம்முடைய முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து அவர்களுக்கு சரியான ஆலோசனைகள் வழங்கப்படும்.
நிச்சயமாக அதுமாதிரி எவராவது பணிகளில் மெத்தனமாக இருந்தார்கள் என்றால், அதை எங்களின் கவனத்துக்கு உடனே எடுத்து வாருங்கள். உதவி கேட்கின்ற மக்களுக்கு முன் நமக்குள் வாக்குவாதம் செய்வது போன்ற செயல்களைத் தவிர்க்குமாறு உங்களை எல்லாம் கேட்டுக்கொள்கிறேன். மேயர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் போன்றோர் இந்த மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முறையாக கண்காணிக்க வேண்டும், ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டி போட்டு உதவுங்கள்
முக்கியமாக ஒன்றே ஒன்றுதான். நாம் அத்தனை பேரும் களத்தில் நிற்க வேண்டும். நீங்கள் இருக்கிறீர்களா, இல்லையா என்று நம் தலைவர் அவர்கள் தொடர்ந்து உங்களைக் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொருவரையும் பின்தொடர்கிறார்.
எனவே நீங்கள் ஒவ்வொருவரும் யார் யார் என்னென்ன வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள், எந்தப் பகுதியில் என்ன பிரச்சனை என்பது தலைவருக்கு அந்தந்த அலுவலகத்திலிருந்தும் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தும் அவ்வப்போது அந்த அறிக்கை செல்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே இந்த மழைக்காலத்தில் மட்டுமல்ல, இனி வரும் ஒவ்வொரு நாளும் உங்களின் செயல்பாடுகள் மிக மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். போட்டி போட்டுக்கொண்டு உதவிகளைச் செய்ய வேண்டும். அதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நாம் செய்யக்கூடிய பெருமை. இதுதான் கருப்பு சிவப்புக் கொடிக்கு நாம் செய்ய வேண்டிய பெருமை. இதுதான் நம்முடைய தலைவருக்கு நாம் சேர்க்க வேண்டிய பெருமை.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய பெருமை. எத்தனையோ பேரிடர், பெருமழையிலிருந்து மக்களை நாம் காப்பாற்றி இருக்கிறோம். எனவே, இந்த மழையிலும் மக்களுடன் நின்று அவர்களைக் காப்பாற்றுவோம் என்று கூறிக்கொண்டு, இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.