இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ”தமிழ்நாட்டின் கடன் குறித்து பேசுவதற்கு அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை. தமிழ்நாடு கடனில் தத்தளிப்பதாக பழனிசாமி சொல்வது தவறானது.
அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தபோது 4 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருந்தது. அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாட்டின் கடன்சுமை 128 சதவிகிதம் அதிகரித்தது. எனவே கடனைப் பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை.
தமிழ்நாட்டின் கடன் வளர்ச்சிக்கு அரசின் நிதி நிர்வாகம் காரணமல்ல. இப்போது அதிமுக கூட்டணி சேர்ந்துள்ள ஒன்றிய பாஜக ஆட்சி மாற்றந்தாய் மனப்பான்மையோடு செயல்படுவதுதான் காரணம்.
5வது நிதிக்குழுவின் பரிந்துரையில் இருந்து தற்போதைய 14வது நிதிக்குழு பரிந்துரை வரை தமிழ்நாட்டின் பங்கு 32% அளவுக்கு குறைந்துள்ளது. மத்திய அரசு வரிப்பங்கீட்டை முறையாக வழங்கினாலே தமிழ்நாட்டின் கடன் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு குறையும்" என பதிலளித்துள்ளார்.