தமிழ்நாடு

“WhatsApp வதந்திகளை மட்டும் நம்பி உயிர் வாழும் பழனிசாமி” : அமைச்சர் ரகுபதி பதிலடி!

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“WhatsApp வதந்திகளை மட்டும் நம்பி உயிர் வாழும் பழனிசாமி” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

போரில் வாள் சுழற்ற முடியாத வீரன், வீட்டில் வில் வித்தை காட்டினானாம்! கரூர் விவகாரத்தில் சட்டமன்றத்தில் ஆணித்தரமாகப் பேச முடியாத எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வெளியே போய் பயில்வான் வேடம் போட்டிருக்கிறார் கனிமவளத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி என்ற பெயரில் முன்வைத்த வதந்திகளுக்கெல்லாம் ஆதாரத்தோடு பதிலளித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடும் அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நடந்து கொண்ட விதத்தைத் தோலுரித்துக் காட்டியதைக் கண்டும், பதில் பேசத் திராணியின்றிச் சட்டமன்றத்தை விட்டே ஓடிய பழனிசாமி,சமூக வலைத்தளத்தில் வந்து கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார்.

கடந்த அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் காலி இருக்கைகளைப் பார்த்துப் பேசிய வீராதி வீரன் யார்? அன்றைக்குக் காற்றோடு கத்திச் சண்டை போட்டவர், இன்று வெட்டி வசனம் பேசுகிறார்.

கூவத்தூரில் ஊர்ந்தெடுக்கப்பட்டு, டேபிளுக்கு அடியில் ஒளிந்து கிடந்த சூராதி சூரர், சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்துவிட்டு வீரவசனம் பேசுகிறார்.

சிபிஐ-க்கு பயந்து, அமலாகத் துறைக்கு அஞ்சி, தேர்தல் ஆணையத்திற்கு நடுங்கி பிரதமர் மோடி பின்னாலும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பின்னாலும் ஒளிந்து கொண்டிருக்கும் கோழைக்கு வீரவசனம் எல்லாம் எதற்கு?

கருப்பு பட்டை அணிந்து வந்தது பற்றி சொல்லியிருக்கிறார் பழனிசாமி. வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் திமுக தீர்மானம் இயற்றியது. எங்கே தனது டெல்லி எசமானர்கள் கோபித்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் சட்டசபையில் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக வழங்கப்பட்ட கருப்பு பேட்ஜைக் கூட வாங்காமல் ஓடிய பயந்தான்கொள்ளிகள், கருப்பு பட்டை பற்றிப் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா? பாஜகவின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமோ.. அமலாகத்துறை வந்துவிடுமோ எனத் தினம் தினம் அஞ்சி, ரத்தக் கொதிப்பிலேயே வாழ்பவர்களா ரத்தத்தின் ரத்தங்களைக் காப்பாற்றப் போகிறார்கள்?

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பங்கேற்ற மகாமகத்தில் நெரிசலில் சிக்கி 48 பேர் துள்ளத் துடிக்க இறந்து போனார்கள். ’’மகாமத்திற்கு வந்து இறந்து போனதால் அவர்கள் உடனே மோட்சத்திற்குப் போவார்கள்’’ எனச் சொன்னவர்கள் எல்லாம், கரூர் நெரிசல் மரணத்திற்குப் பாடம் எடுப்பது வேடிக்கை.

இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறார் பழனிசாமி. 41 பேரின் இறப்பில் கூட்டணி அரசியல் செய்யும் கேடுகெட்ட அரசியல்வாதியைத் தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை.

ஒன்றிய பாஜகவின் அடிமையான பழனிசாமி தனக்கொரு அடிமை சிக்க மாட்டாரா? எனத் தவம் கிடப்பது அவரது தவிப்பிலேயே தெரிகிறது. ஆனால், அதற்காக இறந்தோரை வைத்து அரசியல் செய்தால் அதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் ஏற்க மாட்டார்கள்.

வெறும் வாட்ஸ்அப் வதந்திகளை மட்டும் நம்பி உயிர் வாழும் எடப்பாடி பழனிசாமிக்கு உண்மை என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்கத் தகுதியில்லை. தமிழ்நாட்டு மக்களிடம் உங்களின் மயான அரசியல் எடுபடாது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories