தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான விவாதத்தின்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில்.
பேரவைத் தலைவர் அவர்களே, ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கின்ற வகையில், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை’ பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, 2023 அன்று தொடங்கி வைத்தார்கள்.
மகளிரின் பொருளாதார விடுதலைக்குத் துணை நிற்கின்ற இந்தத் திட்டத்தின்மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் ஒரு கோடியே 14 இலட்சம் மகளிருக்கு இந்த உரிமைத் தொகையை நம்முடைய முதலமைச்சர் வழங்கி வருகின்றார்கள்.
இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த 26 மாதங்களாக, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கி, இந்த ஆண்டு வரை - இன்றைக்கு 16 ஆம் தேதி; ஏற்கெனவே ஆயிரம் ரூபாய் கொடுத்தாகிவிட்டது. தமிழ்நாட்டு மகளிருக்கு, இதுவரை கிட்டத்தட்ட ஒரு கோடியே 14 இலட்சம் மகளிர் ஒவ்வொருவருக்கும் சுமார் 26 ஆயிரம் ரூபாயை நம்முடைய அரசு கொடுத்துள்ளது.
இதுவரை கிட்டத்தட்ட 30 ஆயிரம் கோடி ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
இத்திட்டத்தில், கூடுதலான மகளிர் பயனடைய வேண்டுமென்ற அடிப்படையில் முதலமைச்சர் அவர்கள் சில விதிகளை தளர்த்திக் கொடுத்திருக்கிறார்கள். உதாரணமாக, அரசு மானியத்தில், 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்கள், OAP பெறும் குடும்பங்கள் ஆகியவற்றில், விதிகளைப் பூர்த்தி செய்யும் மகளிருக்கும் உரிமைத் தொகை சேர்த்து வழங்கப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் அவையில் அறிவித்தார்கள்.
இந்தச் சூழலில், நம்முடைய அரசு, அரசு சேவைகள் மக்களைத் தேடி சென்றடைய வேண்டுமென்ற நோக்கில், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை 19-06-2025 அன்று தொடங்கி வைத்தார்கள்.
இந்த முகாம்களில், கிராமப்புறங்களில் 15 துறைகளின் வாயிலாக 45 சேவைகளும், நகர்ப்புறங்களில் 13 துறைகளின் வாயிலாக 43 சேவைகளும் அரசால் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த முகாம்கள் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழும் மனுக்கள் ஏற்கப்படும் என்று நம் முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். இதற்காக, நவம்பர் 15ஆம் தேதி வரை 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டது.
நேற்றைய தினம், 15-10-2025 வரை 9 ஆயிரத்து 55 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மத்தியில், இந்த முகாம்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இதுவரை, உரிமைத் தொகை வேண்டி 28 இலட்சம் மகளிர் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நவம்பர் 14, 2025 அன்று முடிவடைய உள்ளன. இதற்கிடையே, புதிதாக உரிமைத் தொகை கோரி பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் வருவாய்த் துறைமூலம் Field Inspection செய்யப்பட்டு வருகின்றன.
இப்பணிகள் அனைத்தும் நவம்பர் 30, 2025-க்குள் முடிவடையும் என்று கூறிக்கொள்கிறேன். முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியான மகளிருக்கு வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த செய்தியை இந்த மாமன்றத்தின் வாயிலாக உங்களோடு நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாட்டு மகளிரின் பொருளாதார தன்னிறைவுக்கு என்றும் நம்முடைய திராவிட மாடல் அரசு துணை நிற்கும் என்று கூறிக்கொண்டு, வாய்ப்புக்கு நன்றிகூறி விடைபெறுகின்றேன். நன்றி.