தமிழ்நாடு

பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!

நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டத் துறை அலுவலர்களுக்கு ரூ. 85 இலட்சம் மதிப்பீட்டில் 10 புதிய வாகனங்கள் வாகனங்களை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமசந்திரன் தொடங்கி வைத்தார்.

பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமசந்திரன் இன்று (13.10.2025) சென்னை-5, சேப்பாக்கம் சர்வே இல்லத்தில் அமைந்துள்ள நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்ககத்தில் பல்வேறு சேவைகளை தொடங்கி வைத்தார். மேலும், உயர் அலுவலர்களுக்கு 10 ஈப்பு மற்றும் இத்துறையில் பணிபுரிந்து காலஞ்சென்ற பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கியும், இணையவழி பட்டா மாறுதல் சேவையினை கண்காணித்து அதன் தரத்தினை உயர்த்திட தரக்கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையத்தினை துவக்கி வைத்தார்.

இணையவழி பட்டா மாறுதல் மற்றும் புல எல்லைகளை அளவீடு செய்தல் போன்ற சேவைகளை கண்காணிக்கும் தரக்கட்டுப்பாடு மையம் :

நில ஆவணங்கள் கணினிப்படுத்தப்பட்டு, ‘தமிழ்நிலம்’ எனும் இணையம் சார்ந்த மென்பொருள் மூலமாக, இணையவழி பட்டா மாறுதல், புல எல்லை அளவீடு, வரைபட விற்பனை போன்ற பல சேவைகளை நில அளவை மற்றும் நிலவரித்திட்டத்துறை பொதுமக்களுக்கு இணையவழியில் வழங்கி வருகிறது.

இச்சேவைகளை கூர்ந்து கண்காணித்து அவற்றின் தரத்தினை பேணும் பொருட்டு, 'தரக்கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் ஒன்று நில அளவை இணை இயக்குநர் (மத்திய நில அளவை அலுவலகம்) தலைமையில் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்ககத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தரக்கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் மூலம் இணையவழிச் சேவைகளின் புள்ளி விவரங்களை கண்காணிக்கும் வகையில், 'Dashboard' உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இணையவழி பட்டா மாறுதல் மற்றும் புல எல்லை மனுக்கள் போன்ற இணையவழிச் சேவைகள் விரைவாகவும், செம்மையாகவும் வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்குதல்:

தமிழ்நாடு நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டத் துறையில் பல்வேறு இனங்களில் பணிபுரிந்து, பணியின்போது காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு சென்னை, கரூர், திருச்சிராப்பள்ளி, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களை சார்ந்த 8 நபர்களுக்கு கருணை அடிப்படையில் இத்துறையில் இளநிலை உதவியாளராக பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டத் துறை அலுவலர்களுக்கு ரூ. 85 இலட்சம் மதிப்பீட்டில் 10 புதிய வாகனங்கள் வழங்குதல்:

தமிழ்நாடு நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டத் துறையில் பணிபுரிந்து வரும் கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர், மதுரை மண்டலத் துணை இயக்குநர் மற்றும் ஈரோடு, திருவாரூர். புதுக்கோட்டை, நீலகிரி, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த உதவி இயக்குநர்களுக்கு அவர்களது பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு ரூ, 85 இலட்சம் மதிப்பீட்டில் 10 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அந்தந்த மாவட்டங்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories