தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று (9.10.2025) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் 7.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வேடசந்தூர் அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டடம் உள்பட 28.14 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 39 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 49.59 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 5,478 பயனாளிகளுக்கு 61.45 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டம் மற்றும் நபார்டு திட்டத்தின்கீழ் 7.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 14 பள்ளி கட்டிடங்கள், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் 5:12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 8 பணிகள், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 3.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 14 பணிகள் மற்றும்
பொதுப்பணித்துறை மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் 7.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டடம், வேடசந்தூரில் 1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காமராஜர் பேருந்து நிலைய கட்டடம், வேடசந்தூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் 2.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 16 வகுப்பறை கட்டடங்கள் என மொத்தம் 28.14 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற 39 திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் 5.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம், 7.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடமதுரை – குளத்தூர் என்.பாறைப்பட்டி இடையே கட்டப்பட உள்ள புதிய பாலம் உள்பட வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 19.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18 எண்ணிக்கையிலான பல்வேறு கட்டிடங்கள் மற்றும் சாலைபணிகளுக்கும்,
பொதுப்பணித்துறை மூலம் வேடசந்தூர் இ.சித்தூர் கிராமத்தில் 3.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு கல்லூரி மாணவிகளுக்கான விடுதிக் கட்டடம், 4.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு அரசு பள்ளிகளில் 18 புதிய வகுப்பறைகள், சுகாதார வளாகம் கட்டும் பணிகளுக்கும், 9.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குஜிலியம்பாறை அரசு தொழில் பயிற்சி மைய புதிய கட்டடம்,
நீர்வளத்துறையின் சார்பில் 2.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடமதுரை - குளத்தூர் கிராமம் சந்தானவர்த்தின ஆற்றின் குறுக்கே தடுப்பனை கட்டும் பணி, 9.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேடசந்தூர் – பாலப்பட்டி கிராமம், குடகானற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி என மொத்தம் 49.59 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, மகளிர் திட்டத்துறையின் சார்பில் 4,578 மகளிருக்கு 34.05 கோடி ரூபாய்க்கான வங்கிக் கடன் இணைப்புகளையும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரண நிவாரண உதவித் தொகை, விபத்து மரண நிவாரண உதவித் தொகை என 100 நபர்களுக்கு 9.39 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 120 பயனாளிகளுக்கு மொத்தம் 1.63 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வீட்டுமனைப்
பட்டாக்களையும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்து துறை சார்பில் 100 கர்பிணித்தாய்மார்களுக்கு தலா 2,000 வீதம் மொத்தம் 2.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 1,01,800 வீதம் மொத்தம் 50.90 இலட்சம் மதிப்பீட்டிலான மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்களையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு 1.94 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விதைத் தொகுப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு 13.04 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மின் மோட்டார் பம்பு செட், சோலார் பம்பு செட் உள்ளிட்ட நலத்திட்டங்களையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 500 பயனாளிகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெறுவதற்கான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளையும் என மொத்தம் 5,478 பயனாளிகளுக்கு 61.45 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.