தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து சேவை துறைகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் தலைமையில் இன்று (07.10.2025) சென்னை தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் முக்கிய சேவை துறைகள் அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டத்தில் புகை மருந்து தெளிப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய பதாகைகளை வெளியிட்டு, தமிழ்நாடு நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் மேற்பார்வை வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கையேட்டினை வெளியிட்டு கருத்துரை வழங்கினார்கள்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை போன்ற முக்கிய சேவை துறைகள் வாயிலாக விரிவான ஆலோசனைக் கூட்டம் வடகிழக்கு பருவமழையின் காரணமாக மக்களுக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லாத வகையில் அதாவது கொசுக்கள் பாதிப்பு மற்றும் மழைக்கால நோய் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் மூலம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் வழங்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்திருக்கிறோம். இந்த கூட்டத்தின் மூலம் மக்களுக்கு பெரும் அளவில் பயன்தரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னாள் மழை பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை போன்ற பல்வேறு சேவை துறைகள் ஒருங்கிணைந்து நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வடகிழக்கு பருவமழைகளுக்கு முன்னாள் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தவகையில் இன்றைக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் பங்கேற்க இந்தக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மேலும் பல்வேறு துறையின் செயலாளர்கள் அவர்களுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து கலந்தாலோசனை செய்யப்படுகிறது. இக்கூட்டத்தில் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கூட்டங்களை நடத்தி அந்தந்த மாவட்ட அளவில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு கீழ் பணிபுரியும் அலுவலர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் மேற்கொள்ள உள்ளார்கள். கடந்த காலங்களில் மழை வெள்ளப் பாதிப்பு என்பது ஃபெங்கல் புயல் பாதிப்பு, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் ஏற்பட்ட மழை பாதிப்பாக இருந்தாலும், இந்த நிர்வாகம் மிகச் சிறப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, பெரிய மழை பாதிப்புகளிலிருந்து தமிழ்நாடு மீட்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவ மழையினையொட்டி, மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஏதாவது ஒரு கிராமத்தில் 3க்கும் மேற்பட்ட காய்ச்சல்கள் இருக்குமானால் அல்லது வயிற்றுப் போக்கு போன்ற எந்த மாதிரியான பாதிப்புகள் இருந்தாலும் உடனடியாக மருத்துவ முகாம்கள் நடத்திட வேண்டும் என்று முதல்வர் அவர்கள் அறிவுறுத்தல் செய்து அந்த வகையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு 11,966 முகாம்கள் நடத்தப்பட்டு, 10,53,930 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள்.
2023 ஆம் ஆண்டு 10,000 முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது, மழை தொடர்ச்சியாக பெய்த காரணத்தினால் 26,837 முகாம்கள் நடத்தப்பட்டு, 12,27,623 பேர் பயன்பெற்றுள்ளனர். அதே ஆண்டில் மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் திருநெல்வேலி, தூத்துத்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 தென்மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் காரணமாக 20,616 முகாம்கள் நடத்தப்பட்டு 11,31,721 பேர் பயன்பெற்றுள்ளனர். 2024 ஆம் ஆண்டு பருவமழையினை முன்னிட்டு மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் 1,530 நடத்தப்பட்டு 75,432 பேர் பயன்பெற்றுள்ளனர். ஃபெங்கல் புயல் பாதிப்புகளின் காரணமாக 18,455 முகாம்கள் நடத்தப்பட்டு 21,48,732 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
மழைக்காலங்களில் திடக்கழிவு மேலாண்மை சீர் செய்வது, குப்பைகளை அகற்றுவது, குடிநீரில் ஏற்படுகின்ற கழிவு நீர் அடைப்புகளை சீர்செய்வது போன்ற பல்வேறு வகைகளில் நகராட்சி நிர்வாகம் மிகச் சிறப்பான வகைகளில் செயல்பட்டு தமிழ்நாட்டில் நோய் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாத்திருக்கின்றது. இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை கலந்தாலோசனைக் கூட்டம் தொடங்கி வைத்திருக்கிறார்கள்.
=> டெங்கு பாதிப்பு தொடர்பான கேள்விக்கு...
மழைக்காலங்களில் வீடுகளைச் சுற்றி தேங்கி இருக்கின்ற மழைநீரினால் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றது. ஏடிஸ் என்கின்ற கொசுக்களை தடுப்பதற்குரிய முயற்சியாக சேவை துறைகள் ஒருங்கிணைத்து வீடு வீடாக சென்று மழைநீர் தேங்கி இருக்கின்ற பகுதிகளை கண்டறிந்து தூய்மைப்படுத்தி வருகிறார்கள். மேலும் கொசு மருந்து அடித்தல், மருந்து தெளித்தல் போன்ற பல்வேறு பணிகளை சம்மந்தப்பட்ட துறைகள் செய்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு இதுவரை 15,796 டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. இந்த பாதிப்புகள் ஏற்பட்டாலும் இறப்பை பொறுத்தவரை 8 என்கின்ற அளவில் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த இறப்பும் இணை பாதிப்புகள் உள்ளவர்களால் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் டெங்கு பாதிப்பு தற்போது கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.