கோவை மாவட்டம், அன்னூர் அருகே கொங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம். பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவாளார்கள் பணம் கேட்டு மிரட்டியதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த 2023 ம் ஆண்டு தனது மூத்த சகோதரர் விபத்தில் உயிரிழந்ததாகவும், அதனை விசாரிக்க வேண்டும் என கோகுல கண்ணன், சாமிநாதன் என்கிற ராஜராஜ சாமி மற்றும் ராசுக்குட்டி ஆகிய மூவர் விபத்து குறித்த வழக்கு பதிவு செய்து நிவாரணம் பெற்று தருவதாகவும், பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயரை பயன்படுத்தியதால் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் ரூபாய் 10 லட்சம் பணம் தரும்படியும் அவ்வாறு தராவிட்டால், கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்ததாகவும், தற்போது மீண்டும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், கண்ணீர் விட்டு அழுது வீடியோ வெளியிட்டுள்ளனர். இது குறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் சாமிநாதன், ராஜேஷ், கோகுலகண்ணன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.