தமிழ்நாடு

அறுசுவை உணவுகள்.. புதுமையான அரங்குகள்... சென்னையில் தொடங்கியது வேளாண் வணிகத் திருவிழா!

”வேளாண் வணிகத் திருவிழா 2025”-ல் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக செயல்பாடுகள் குறித்த கண்காட்சி அரங்குகள் மற்றும் கருத்தரங்கத்தினை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அறுசுவை உணவுகள்.. புதுமையான அரங்குகள்... சென்னையில் தொடங்கியது வேளாண் வணிகத் திருவிழா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27.09.2025) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ”வேளாண் வணிகத் திருவிழா 2025”-ல் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக செயல்பாடுகள் குறித்த கண்காட்சி அரங்குகள் மற்றும் கருத்தரங்கத்தினை தொடங்கிவைத்தார்.

இரண்டு நாள் வேளாண் சிறப்பு கண்காட்சி

விதைப்பு முதல் அறுவடை வரை மட்டுமல்லாது, வேளாண்மையை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும் வகையில் உழவர்களால் உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் விற்பனை செய்து உழவர்கள் வளம் பெறவேண்டும் என்ற உயர் சிந்தனையுடன் உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்,  மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்தும் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள், இயற்கை நல ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் “வேளாண் வணிகத் திருவிழா- 2025”  நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில்   27.09.2025 மற்றும் 28.09.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.  

அறுசுவை உணவுகள்.. புதுமையான அரங்குகள்... சென்னையில் தொடங்கியது வேளாண் வணிகத் திருவிழா!
CM_MKSq

கண்காட்சியில் பல்வேறு வேளாண் துறைகள் பங்கேற்பு

வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை,  வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, சர்க்கரைத்துறை, விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்), தமிழ்நாடு உணவு பதப்படுத்தல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (TNAPEx), பட்டு வளர்ச்சித் துறை, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், ஒன்றிய அரசின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள்,  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் போன்ற அரசுத் துறைகள் மற்றும் அவை சார்ந்த கல்வி நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.

புதுமையான அரங்குகள்

வேளாண் வணிகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள
220-க்கும் மேற்பட்ட அரங்குகளில்,  சங்ககாலம் முதல் தற்காலம் வரை தமிழர்களின் வேளாண் வணிகம், பனை, தென்னை, ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்கள், மூலிகைப்பயிர்கள், முருங்கை, மஞ்சள், பலா, முந்திரி, நிலக்கடலை போன்ற பல்வேறு வேளாண் விளைபொருட்களின் சிறப்புகள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள் குறித்த கருத்து விளக்கக் கண்காட்சி அரங்குகள் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

அறுசுவை உணவுகள்.. புதுமையான அரங்குகள்... சென்னையில் தொடங்கியது வேளாண் வணிகத் திருவிழா!
CM_MKSq

அரசு திட்டங்களின் பலன்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், உழவர் நல சேவை மையங்கள், நகர்ப்புரத் தோட்டம், செங்குத்துத் தோட்டம், நீர்ஊடகத் தோட்டம் (Hydroponics), ஊட்டச்சத்து வேளாண்மை, பாரம்பரிய காய்கறிகள் போன்ற அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், தேங்காய் மட்டை உரிக்கும் கருவி, எண்ணெய் செக்கு இயந்திரம், பருப்பு உடைக்கும் இயந்திரம் போன்ற  மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான விவரங்கள் போன்ற அரசின் அனைத்துத் திட்டங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வாய்ப்பாக திட்ட விளக்க மாதிரிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சிறப்பு கருத்தரங்குகள்

உணவே மருந்து, நகர வாழ்க்கையில் ஆரோக்கிய உணவு, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சரிவிகித உணவு, உணவு பதப்படுத்துதலும் மதிப்புக்கூட்டுதலும், காய்கறி சாகுபடி முறைகள் மற்றும் மாடித்தோட்ட மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, இயற்கை மற்றும் உயிர்ம வேளாண்மை, சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல்,  உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல், உழவர்களுக்கான மின்னணு சந்தைப்படுத்துதல்
(e-NAM, சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்கள்), வேளாண் வணிகம் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள், சிறந்த விவசாய நடைமுறைகள், நஞ்சில்லா வேளாண்மை, போன்ற பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன.

அறுசுவை உணவுகள்.. புதுமையான அரங்குகள்... சென்னையில் தொடங்கியது வேளாண் வணிகத் திருவிழா!

பொதுமக்கள் நலன் – மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை

மக்களின் உடல் நலத்தைப் பேணிப் பாதுகாக்கும் வகையில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், பாரம்பரிய உணவு உற்பத்தி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள், வேளாண் விளைபொருட்கள் மதிப்புக்கூட்டும் இயந்திர உற்பத்தி நிறுவனங்கள்   போன்ற  பல்வேறு நிறுவனங்கள் தங்களின் ஏற்றுமதித் தரத்திலான  மதிப்புக்கூட்டப்பட்ட உணவு வகைகள், உடனடியாக உண்ணும் உணவுகள், மூலிகை உணவுப் பொருட்கள், பழங்கள், பசுமைக் காய்கறிகள் போன்ற பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தி  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  

அறுசுவை உணவு அரங்குகள்

மேலும், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், தனியார் உணவகங்கள் மூலம் பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகள், சிற்றுண்டிகள் மற்றும் இதர உணவு வகைகளுக்கான விற்பனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, உதவி மையங்கள், மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

வேளாண் வணிகத் திருவிழாவில் வேளாண் பெருமக்கள், பொதுமக்கள் என  ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  சென்னையைச் சுற்றியுள்ள 14 மாவட்டங்களிலிருந்து உழவர்களை அழைத்துவரத் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அறுசுவை உணவுகள்.. புதுமையான அரங்குகள்... சென்னையில் தொடங்கியது வேளாண் வணிகத் திருவிழா!

வேளாண் பெருமக்களுக்கு ரூ.1.77 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 

முதலமைச்சர் அவர்கள், கண்காட்சி அரங்குகளைத் திறந்து வைத்துப் பார்வையிட்டு, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மைப் பொறியியல் ஆகிய துறைகளின் சார்பில் பசுமை குடில் அமைத்தல், சிறுதானியங்கள் முதன்மை பதப்படுத்தும் இயந்திரங்கள் கொள்முதல், வணிக விரிவாக்க மானியம், டிராக்டர்கள் வழங்குதல், ஆழ்துளை கிணறு அமைத்தல் என பயனாளிகளுக்கு மொத்தம் 1 கோடியே 77 இலட்சத்து 51 ஆயிரத்து 784 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வேளாண் வணிகத் திருவிழாவில் உழவர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என்றும்,  உழவுத் தொழிலுக்கும், வேளாண் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஊக்கமளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

banner

Related Stories

Related Stories