தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் அக்டோபர் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை விவரம் :
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் துவக்க / நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து 06.10.2025 திங்கட் கிழமை அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து பள்ளித் திறக்கும் நாள் அன்று 1 முதல் 7. வகுப்புகள் வர பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடநூல் வழங்கப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலாண்டு விடுமுறைக் காலங்களில் சிறப்பு வகுப்பு நடத்துவதை முற்றிலுமாக தவிர்க்கப்படவேண்டும்.
மேலும் விஜயதசமி அன்று அரசு, அரசு உதவி பெறும் துவக்க / நடுநிலை/ உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கை நடபெற உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. தங்கள் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விவரங்களை EMIS கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் பள்ளியினால் உள்ளீடு செய்யப்பட்டு வருகின்றனவா என்பதை மேற்பார்வை செய்து தங்கள் மாவட்டத்தில் மொத்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையினை பள்ளிக் கல்வி இயக்குநரின் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.